இணுவில் அறிவாலயம்

சைவமும் செந்தமிழும் ஆயகலைகளும் தொன்மையும் பரந்து விளங்கும் எங்கள் திருவூராம் இணுவையின் பெருமையை அறியாதாரில்லை. எமது மண்ணின் பழமையுடன் இன்றைய நவீன தொழில்நுட்ப விஞ்ஞானக் கல்வியையும் ஒருங்கமைய எமது திருவூரில் வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தின் அறிவுப் பசியையும் எம்மவரின் புராதன பழைய கல்வி மற்றும் புராதன பண்பாட்டு மரபுகளையும் ஒரே இடத்தில் அமைய வேண்டும் எனப் பலரும் விரும்பினர்.

இச்சிந்தனையை நிலைநிறுத்தும் நோக்கில் எமது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனுக்கு இறையருள் உணர்த்தியது. இவ்வரிய சிந்தனையை தமது சமயச் சொற்பொழிவுக்காக இலண்டன் சென்றபோது எமது இணுவில் திருவூர் ஒன்றிய மக்கள் முன் தெரிவித்தார். அச்சமயம் இணுவில் திருவூர் ஒன்றிய அன்பர்கள் தமது கனிந்த தூய உள்ளங்களில் நிறைந்திருந்த மகுட வாசகமான ‘ஊருக்கு ஒரு பிடி உன் உழைப்பில்’ என்பதற்கமைய சிறுகச் சேர்த்து பெருநிதியாக வழங்க முன்வந்தனர்.

திருமுருகனின் கனவை நினைவாக்குவதன் பேரில் அறிவாலயத்தின் அமைவிடத்தைப் பல லட்ச ரூபா செலவில் கொள்வனவு செய்ய கு.கருணாமூர்த்தி, இ.குகவரதன் ஆகிய இருவரும் அன்பளிப்புச் செய்தனர். தொடர்ந்து உரிய கட்டடத்தை நிர்மாணிப்பதன் பேரில் எம்மண்ணில் வாழும் ஒரு குழுவினரின் ஆலோசனையின் பேறாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் புரவலராகவும் ஒரு சபை உருவானது.

இச்சபை தமக்கென ஒரு அமைப்பை இணுவில் திருவூர் ஒன்றியம் என்னும் பெயரில் உருவாக்கினர். எம்மவரின் ஏகமனதாக பேராசிரியர் சபா.ஜெயராசாவின் தலைமையில் பேராசிரியர் க.தேவராசா உப தலைவராகவும், அ.குகதாசன் செயலாளராகவும் து.சிவராசா பொருளாளராகவும் நியமனம் பெற்றனர். மேலும் சு.பொ.நடராசா, வைத்தியகலாநிதி க.பாலசுப்பிரமணியம், த.கந்தசுவாமி ஆகியோர் உறுப்பினராகவும் சேர்ந்து அரும்பணியாற்றினர்.

இச்சபையினர் தமக்கென உபவிதியையும், செயற்றிட்டத்தையும் வங்கிக் கணக்கையும் ஏற்படுத்தினர். இலண்டன் வாழ் இணுவில் ஒன்றிய மக்களின் முன்மாதிரியில் கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ், பிரான்ஸ், நெதர்லான்ட், அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் பெருநிதி வந்து சேர்ந்தது. அன்றைய நாட்டுச் சூழலும் போர்க்காலக் கெடுபிடியும் வேறும் பல தடைகளும் ஒன்றுசேர கட்டட வேலைகள் தொடர்ந்து செயற்பட முடியவில்லை.

இப்பணிக்காக ஐம்பத்தாறு இலட்ச ரூபா வந்தடைந்தபோதும் கட்டட வேலைகள் நான்கு வருடமாகியும் நிறைவு பெறவில்லை. இதுவரை நிதிவழங்கிய வெளிநாட்டு அன்பர்களின் மனச்சோர்வை உணர்ந்த திருமுருகன் இவ்வூர் அன்பர்களுடன் தமது துயரமான நிலையைப் பகிர்ந்து கொண்டார். இணுவில் திருவூர் ஒன்றிய சபையினருடன் இவ்வூர் அன்பர்களான ஏ.சி.சண்முகலிங்கம், மூ.சிவலிங்கம், சு.சண்முககுமார், மா.சிவப்பிரம்மம், இ.விக்கினேஸ்வரன், இ.பாலச்சந்திரன் சு.சண்முககுலகுமார், நா.சுந்தரலிங்கம், மா.ந.பரமேஸ்வரன் மேலும் பல பொது மக்களின் உதவியுடன் எமதூர் மக்களிடம் உதவி கோரப்பட்டது.

இணுவில் வாழ் மக்களும் தாராளமாக வழங்கியதால் பதினைந்து இலட்சம் ரூபா நிதி பெருகியது. வெளிநாட்டு அன்புள்ளங்களும் தாராளமாக நிதி வழங்கியதால் மூன்று மாத காலத்தில் கட்டுமானப்பணி நிறைவடைந்தது. இப்பாரிய பணியில் திருமுருகன் பரராசசேகரன், செகராசசேகரன் ஆகிய தமிழ் மன்னரின் ஒன்பதடி உயர முழு உருவச் சிலைகளைத் தமது பங்களிப்பாக வழங்கினார்.

இச்சிலைகள் எமது கிராமத்தின் பழமையையும் எம்மக்களுக்காக அம் மன்னர்கள் செய்த சேவைக்கான நன்றியையும் எடுத்துரைக்கின்றன. அவ்வறிவாலயக் கட்டட அமைப்புடன் இதன் வடமேல் திசையிலமைந்த மின் நீரிறைக்கும் யந்திரமும் நீர்த்தாங்கியும் இவ்வூர் திருமதி கனகேந்திராவின் ஞாபகார்த்த அன்பளிப்பால் இன்றைய நவீன கட்டமைப்பை உணர்த்துகின்றன. இவ்வழகிய அறிவாலயம் 20.03.2005 அன்று திறந்து வைக்கப்பட்டு இணுவை மக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப் பெற்றது.

இவ்வறிவாலயக் கட்டடம் கிழக்கு மேற்காக நூறடி தர இருபத்தைந்தடி (100′ x 25′)விசாலங் கொண்டது. இதன் மேற்திசையில் (20′ x 25′) அளவுள்ள ஒரு அறையும், கீழ் திசையிலும் அதன் அளவுள்ள அறையும் நீங்கலாக 1500 சதுர அடி கொண்ட பரப்பளவு மண்டபமும் நவீன முறையில் அமைந்துள்ளதுடன் முன் பக்கத்தில்
1 0 x  1 0 0  விசாலங் கொண்ட விறாந்தையும் 10 x  25 அடி விசாலங் கொண்ட தரிப்பிடமும் சேர அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீழ்த்திசையிலிருக்கும் அறையில் எம்மண்ணின் பாவனையில் அன்று இருந்த பாவனைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமுருகனால் வாங்கி அன்பளிக்கப்பட்ட இரட்டை மாட்டு கூடார வண்டி, பண்டைய துலா, கோர்க்காலி, மாட்டுத் தொட்டில், உறி, பழைய செப்புப் பாத்திரங்கள், விளக்குகள், ஓலைச்சுவடிகள், சிலேட், மரப்புத்தகம், பண்டைய எழுது கருவிகள், திருகை, மருந்துகள் அரைக்கும் கல், வைத்திய பாவனையிலிருந்த கல்லினாலும் மரத்தினாலும் செய்யப்பட்ட பொருட்கள், ஈழகேசரி நாளேடு பதித்த அச்சியந்திரம் போன்ற பல்வேறு முற்காலப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேற்கே உள்ள அறையில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க கால புராண இதிகாச நூல்கள், அகராதிகள், நவீன நூல்கள் யாவும் பாதுகாப்பாக அடுக்கப்பட்டுள்ளன. 20-03-2005 அன்று அறிவாலய மணிமண்டபம் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரால் திறந்து வைக்கப் பெற்றது. காலை நிகழ்வில் சமய நெறியுடன் முறைப்படி திறந்து வைக்கப் பெற்றதும் பல பெரியார்களும் கல்விமான்களும் வாழ்த்துரை வழங்கினர்.

மாலை நிகழ்வாக கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. காலையில் ‘அறிவாலயம்’ என்னும் சிறப்பு நூலும் வெளியிடப் பெற்றது. இந்நூலில் இருபதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கல்விமான்கள், கலைஞர்களின் கட்டுரைகளும் எமதூரின் தொன்மைச் சிறப்புகளும் அமைந்துள்ளதால் யாவராலும் பாராட்டப்பெற்றது. அறிவாலயத்தின் தேவை கருதி இணைந்த இரு கழிவறைகள், இதன் தென் பகுதியில் 100 x 15 விசாலங் கொண்ட இணை மண்டபம், (இம்மண்டபத்தை இணுவில் கிழக்கைச் சேர்ந்த வைத்தியகலாநிதி மூ.பஞ்சலிங்கம் 9 இலட்ச ரூபா செலவில் அன்பளிப்புச் செய்தார்) மின் இணைப்பு யாவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அதிபர் செ.சோதிப்பெருமாள் தனது அன்பளிப்பாக ஒலிபெருக்கிச் சாதனத்தை வழங்கியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் இலண்டன் வாழ் இணுவில் ஒன்றியத்தினர் பல இலட்ச ரூபா செலவில் சில திருத்த வேலைகள் செய்தும் மை பூசியும் அலங்கரித்துள்ளனர். இணுவிலில் நிரந்தரமாக வசிப்போரும் புலம்பெயர்ந்து வாழும் பொதுப்பணி ஆர்வலர்களும் தாராள சிந்தனையுடன் வழங்கிய ஏறத்தாழ ஒரு கோடி ரூபாவில் அமைந்துள்ள இவ் அறிவாலயம் இணுவில் வாழ் பொது மக்கள் யாவரதும் தனிப்பெருஞ் சொத்தாகும்.

எமது நாட்டில் நடந்த யுத்த கால நெருக்கடியில் பூரணமாக இயங்கா விட்டாலும் காலத்துக்குக் காலம் சமய விழாக்கள், நூல் வெளியீடுகள், மிகப்பிரமாண்டமான வரவேற்பு விழாக்கள், கலை கலாசார விழாக்கள் பல நடைபெற்ற மையமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இத்திருவூரில் வாழும் அனைவரும் இவ்விடத்தில் சமூகம் கொடுக்கத் தவறினர். இவர்களின் இயலாமையை நோக்கிய ஒரு சிலர் தமது ஒற்றுமை நிலையைப் பேண முன்வந்தனர்.

இணுவில் திருவூரில் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் (தெற்கில்) இணுவில் கந்தசுவாமி கோயில் (மேற்கில்) ஆஞ்சநேயர் கோயில்(வடக்கில்) சிவகாமி அம்மன் கோயில் (கிழக்கில்) ஆகிய ஆலயங்களினருகில் ஒவ்வொன்றாக நான்கு அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த அறநெறிப்பாடசாலைகள் யாவற்றையும் ஒன்றிணைத்து அதனுடன் இணைவான முன்பள்ளிகள் நான்கையும் இணைத்து யாவற்றிலுமிருந்து இரு கலை நிகழ்ச்சிகள் மூலம் மொத்தமாக 21 கலை நிகழ்வை அறிவாலயத்தில் சிறப்பாக நடாத்தி பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் (66 பேர்) சிறந்த பரிசில்களை வழங்கியதால் யாவரும் வியந்தனர்.

அவ்விழாவில் கலந்துகொண்ட ந.சச்சிதானந்தன் (இணுவில்) இலண்டனில் வதிபவர் எமது மண்ணின் பாரம்பரிய பொங்கல் விழாவில் சிறப்பையும் சிறார்களின் கலைப் படைப்பியல்களையும் தமது கருத்தில் பதித்துக் கொண்டார். 2012ஆம் ஆண்டிலும் வேறொரு நிகழ்வில் பங்கு பற்றிய அவர் இணுவில் திருவூரின் பெருமதிப்பை நன்குணர்ந்தார். இங்கு நடாத்தப்பட்ட எமது அணுகுமுறை இங்கு வதியும் அனைவரையும் ஒன்றிணைக்கும் மையமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் திருவூரின் பொது வைபவங்களின் கேந்திர நிலையமாக அறிவாலயம் விளங்குகிறது. இதன் மூலம் ஒன்றிணைந்த இணுவில் திருவூரில் சகல தரப்பினரும் சமூகம் தருவது கிராமிய வளர்ச்சியின் சின்னமாகவே அமைந்துள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதின் உண்மை இங்கு துலங்குகிறது.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!