இணுவில் ஆஞ்சநேயர் கோயில்

0Shares

“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அறிந்து காப்பான்”

இணுவில் மருதனார்மடத்தில் காங்கேசன்துறை வீதியின் மேல் திசையில் வளம் மிக்க விவசாய மண்ணிலமைந்த ஆலயக் கோபுரத்தின் மீது 18 அடி உயர்ந்த மாருதிதேவன் காட்சி தரும் ஆஞ்சநேயர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாலய நிறுவுனரும் பிரதம குருவுமான இ.சுந்தரேஸ்வரக் குருக்களின் இனிய கனவில் தோன்றிய ஆஞ்சநேயரின் கோரிக்கைப்படியே இவ்வாலயம் இணுவிலில் நிறுவப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே தமக்கென ஒரு ஆலயம் தோன்ற வேண்டு மெனவும் வழிபடும் மக்களின் துயர் துடைக்கவும் சித்தங் கொண்ட ஆஞ்சநேயரின் கோரிக்கை 29.01.2001 அன்று நிறைவேறியது. பக்த ஆஞ்சநேயரின் கோரிக்கைப்படி நிறுவுனரின் ஆலயப்பணி பல பெரியார்களின் பேருதவியுடன் மிகப் பெரிய இருமாடி கொண்ட ஆலயமாக அமைந்துள்ளது.

முன்பக்க அமைப்பில் மலையின் தோற்றத்துடன் இராச கோபுரமும் கீழ் மாடியில் விசாலமான மண்டபமும் (கலை, கலாசார, அன்னதானப் பணிகளுக்காகவும்) மேல்மாடியில் 9 அடி உயரங் கொண்ட கருங்கற்சிலை வடிவில் ஆஞ்சநேயரை மூல மூர்த்தியாகக் கொண்ட ஆலயம் அமைந்துள்ளது. பரிவார மூர்த்திகளாக விநாயகரும் சனீஸ்வரரும் அமைந்துள்ளனர்.

மண்டபம் 110′ x 56′ விசாலத்தில் அமைந்துள்ளது. காலை, மதியம், மாலை வேளைகளில் பூசைகள் நடைபெறும். அபிஷேகம், அலங்கார (வருடாந்த) விழாக்கள் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. இராமபிரான் சீதையை தவறவிட்ட கவலையைப் போக்கிய ஆஞ்சநேயர் தம்மை வழிபடுவோரின் தீராத கவலையை
நீக்குகின்றார்.

முன் பக்கத்தில் வைஷ்ணவ பக்தியை மேம்படுத்தும்  அரிய சிற்பங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஒரு கவர்ச்சியான மையமாகவும் அமைந்துள்ளது. இணுவில் கிராமத்தில் நாலாவதாக நிறுவப்பட்ட இந்துசமய அறநெறிப் பாடசாலை இவ்வாலயத்தினால் வழிநடாத்தப்படுகிறது.

இவ்வாலயத்தின் முகப்பில் 18′ உயரமான ஆஞ்சநேயர் சிலைக்குப் பின்னால் மேல்மாடி உயர்த்திற்கு மேலாக 64 அடி உயரங்கொண்ட இராச கோபுரமும் அதன் இரு மருங்கும் அமைந்த இரு உயர்ந்த மணிக்கோபுரத்தில் இரு பெரிய கண்டாமணிகள் ஒலிப்பது ஆஞ்சநேயர் மீது பக்தியை மேலோங்க வைக்கிறது.

2010 மார்கழி மாதத்தில் இவ்வாலயத்தில் அழகிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் ஓடியது. இவ்வாலயத்தின் வடகீழ் திசையில் 60 அடி உயரங் கொண்ட மிகப் பெரிய ஆஞ்சநேயரின் திருவுருவச் சிலை யொன்று அமைக்கப்பட்டு கும்பாபிசேகமும் செய்யப்பட்டமை இறையருளேயாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!