கல்விக்கூடங்கள்

இணுவில் இந்துக் கல்லூரி

இணுவில் கந்தசுவாமி கோயிலின் பின்புறமாகவும் பரராசசேகரப்பிள்ளையார் கோயிலின் வடதிசையாகவும் அமைந்த பெருநிலப்பரப்புள்ள காணி இவ்வூர் வேதியரொருவரின் சொத்தாக இருந்தது. இக் காணியில் கற்றறிந்த வேதியரான மு.வெங்கடாசலம் ஐயர் தமது பரோபகார சிந்தனையுடன் ஒரு திண்ணைப்
பள்ளியை அமைத்துத் தம்மை நாடி வந்த மாணவர்களுக்குக் கல்வி போதித்தார்.

இவருக்கு உறுதுணையாக கல்வியில் ஆர்வம் மிக்க நடராசையரும், அம்பிகைபாகரும் இருந்து உதவினர். இவர்கள் தாம் மேலும் கற்றறிய எண்ணி நாவலர் பெருமானிடஞ் சென்று படித்தனர். இவ்விருவரையும் தூண்டிய நாவலர் பெருமானின் முயற்சியுடன் வெங்கடாசலம் ஐயரின் திண்ணைப்பள்ளி 1864 இல் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையாக உருவெடுத்தது.

இவ்வாறு உருவெடுத்த பாடசாலையில் இவ்வூர் மாணவர்களுடன் அயலூர்களிலுமிருந்து வந்த பல மாணவர்களின் வரவு கூடியதால் பாடசாலை விரிவடைய நேர்ந்தது. ஆறு வருடங்களின் பின் பரராசசேகரப்பிள்ளையார் கோயிலின் தென் பகுதியில் புதியதோர் நீண்ட குடிசை அமைத்து அவ்வருடத்தில் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலை இடம் மாறியது. இப்பணியில் வெங்கடாசலம் ஐயர் நடராசையர் ஆகியோருடன் அம்பிகைபாகரின் பணி மேலோங்கியிருந்தது. இதனால் இப்பாடசாலையைப் பொதுமக்கள் ‘அம்பியர் பள்ளிக்கூடம்’ என அழைத்தனர்.

1870 இல் இப்பாடசாலையின் இட வசதிக்கேற்ப மாணவர் வரவும் அதற்கேற்ப ஆசிரியர்களின் சேவையும் அதிகரித்தன. அக்காலத்தில்  தரம் ஒன்று முதல் எட்டு வரை மாணவர்கள் படிக்க முடிந்தது. இந்த நிலையில் அரசின் நன்கொடை பெறும் பாடசாலையாக அமைந்தது. அம்பிகைபாகரின் பின் அவரின் மகன் வைத்திலிங்கமும் தொடர்ந்து இவ்வூர்க் கல்விமானும் கல்வி ஆர்வலருமான அ. மாணிக்கச்சட்டம்பியாரும் இப்பாடசாலையை நன்கு வழிநடத்தினார்.

பாடசாலையின் வளர்ச்சியால் இப்பாடசாலை யாழ் சைவ வித்தியா விருத்திச் சங்க நிறுவனத்துடன் இணைந்தது. இக்காலத்தின் தொடர்பாக இவ்வூர் வை.கதிர்காமநாதன் (தம்பிவாத்தியார்) பண்டிதர் இ.இராசலிங்கம் போன்ற பல கல்விமான்கள் தலைமையாசிரியர் பணியேற்கவும் பண்டிதர் இ.திருநாவுக்கரசு பிற்காலத்தில் பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை போன்ற பலர் உதவியாசிரியர்களாகவும் பணி செய்தனர். சைவமும் தமிழும் மாணவர்களின் பாரம்பரிய சொத்தான கல்விக்கு வழி சமைத்தன.

பண்டித வகுப்புகள் மேலதிக சிறப்புத் தேர்வுகளுக்கான போதனைகளும் போதிக்கப்பட்டன. கல்வி அபிவிருத்தி மேலோங்கியது. இதனால் இடைநிலைக் கல்வி
யின் S.S.C  பரீட்சைக்கான கல்வியும் போதிக்கப்பட்டது. 1960இல் அனைத்துப் பாடசாலைகளும் அரசுடமையாக்கப்பட்ட போது இப் பாடசாலை அரச பாடசாலையாக மாறியது.

1984 இல் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலின் தெற்கு வீதியிலிருந்த சைவப்பிரகாச வித்தியாசாலையின் மண்டபம் தற்போதைய இந்துக் கல்லூரியின் அமைவிடத்துக்கு மாற்றப்பட்டு பல புதிய மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டதால் பாடசாலையின் வளர்ச்சியும் காணப்பட்டது. 1993 இப் பாடசாலை
தரமுயர்த்தப்பட்டு ‘இணுவில் இந்துக்கல்லூரி’ எனப் பெயர் மாற்றப்பட்டது.

இதன் பேறாக ஒன்று முதல் பதின்மூன்றாண்டு வரையான வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. கல்வி முன்னேற்றமும் காணப்பட்டது. பாடசாலையின் சகல அபிவிருத்திகளுக்கும் இப் பகுதியைச் சேர்ந்த பல வர்த்தகப் பிரமுகர்கள் தாராளமாக உதவினர். பல வளங்களையும் கொண்ட இக் கல்லூரியில் மாணவர்கள் காட்டிய திறமைகள் போற்றத்தக்கவை. மாணவர் வரவும் அறுநூற்றைம்பதைத் தாண்டவில்லை. குறுகிய காலத்தில் அதிபர்கள் அடிக்கடி மாற்ற மேற்பட்டு மாணவர் வரவு குறைந்தாலும் மாணவர்களின் சாதனை சிறப்பாக அமைந்துள்ளது.

இப்பாடசாலையின் வளர்ச்சி கருதிய புலம் பெயர்ந்து வாழும் உள்ளங்கள் தாராளமாக உதவுகின்றனர். 2011இல் கனடா வாழ் இணுவில் திருவூர் ஒன்றியம் வருடா வருடம் நடைபெறும் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழாக்களை தமது வட்டிப் பணத்தின் மூலம் பெறும் வகையில் ஆறு இலட்சம் ரூபாவை நிலையான வைப்பில் இட்டமை சிறப்பாகும்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?