இணுவில் இராமநாதன் மகளிர் கல்லூரி
இணுவில் இராமநாதன் மகளிர் கல்லூரி சேர் பொன் இராமநாதனால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெண்களுக்கான பாடசாலையாகும். இது இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிதெற்கு பிரதேச சபையின் கீழ் இணுவில் வடகிழக்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் மருதனார்மடம் சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாகும்.
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தேசிய எழுச்சியின் விளைவாக யாழ்ப்பாணத்தில் இந்துப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை அமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இந்துக் கல்லூரிகள் தொடங்கின. அக் காலத்தில் இலங்கைச் சட்டநிரூபண சபையில் உறுப்பினராக இருந்த சேர். பொன். இராமநாதன், தேசியப் பள்ளிகளுக்கு ஆதரவாகச் சட்ட நிரூபண சபையிலும், வெளியிலும் செயற்பட்டு வந்தார்.
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட இந்துப் பாடசாலைகள் ஆண்பிள்ளைகளுக்கான பாடசாலைகளாகவே இருந்தன. சைவப் பெண் பிள்ளைகள் கல்வி பெறாத நிலையையும் அதற்கான பாடசாலைகள் இல்லாத நிலையையும் மாற்றும் நோக்குடன் இராமநாதன் இந்தப் பெண்கள் கல்லூரியை அமைக்க முன்வந்தார்.
யாழ் மண்ணில் சைவத் தமிழ்ப் பெண்களின் சைவமரபு, தமிழ்ப்பற்று, தமிழர் தம் குலப் பெருமை, நற்பண்பு, கலை, கலாச்சாரம் யாவும் ஒருங்கமையக் கற்பிக்கும் நோக்கில் சமய சமூகப் பெருவள்ளல் இராமநாதன் இதனை உருவாக்கியிருந்தார்.
மானிப்பாயைச் சேர்ந்த இராமநாதன் இறையருள் துணை நிற்க இணுவில் மருதனார்மடத்துச் சந்தியின் வடகீழ்த் திசையில் 25 ஏக்கர் நிலத்தை விலையாக வாங்கி நாற்புறமும் சுற்று மதில் அமைத்தார்.
எதிர்காலச் சூழலுக்கு ஏற்றவாறு தகுந்த இடத்தில் ஆயிரம் பிள்ளைகள் வசதியாக இருந்து கற்கும் மண்டபங்களை அமைத்தார். மேலும் பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி, விளையாட்டு மைதானம், நூலகம், தூர இடத்து மாணவர் தங்கியிருந்து படிக்கும் விடுதி வசதிகள் போன்ற வசதிகளை அமைத்தார்.
சே.பொன்.இராமநாதன்
இவ் வசதிகள் யாவும் மேலைத்தேசங்களில் இருக்கும் பாடசாலைகள் தரத்தில் அமைந்தமை சிறப்பு. மாணவர்களின் கல்விக்கு மட்டுமன்றி சைவத் தமிழ் போதிக்கும் ஆசிரியர் பயிற்சியும் இங்கு போதிக்கப்பட்டது. இராமநாதனின் மறைவிற்கு பின் இராமநாதனின் மருமகனும் சிறந்த கல்விமானுமாகிய சு.நடேசப்பிள்ளை நிர்வாகத்தை பொறுப்பெடுத்தார்.
இவரின் காலத்தில் 1960 ஆம் ஆண்டு இராமநாதன் இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இவ் இசைக்கல்லூரியில் யாழ் மாவட்டத்தில் இருந்து பலர் வந்து கற்றுச் சிறந்த கலைஞர்களாக திகழ்ந்தனர். 1960 இன் பிற்பகுதியில் அரசின் கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக இராமநாதன் கல்லூரி மற்றும் இசை நடனக் கல்லூரிகள் யாவும் அரசுடமையாக்கப்பட்டது. இராமநாதனின் சிந்தனைகள் பலவும் மாற்றம் கண்டது.
2013 ஆம் ஆண்டளவில் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடி தனது பழைய கம்பீரத்துடனும் மிடுக்குடனும் இன்றும் பல ஆயிரம் மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் சிறந்து விளங்குகின்றது.
இராமநாதனின் தூய சிந்தனைப்படி அவரின் மருமகனால் நிறுவப்பட்ட இசை நடனக் கல்லூரி அரசினால் பொறுப்பேற்க்கப்பட்டதும் இலங்கையின் வடபகுதிக்கான பல்கலைக்கழக நுண் கலைப்பீடமாகப் பல வசதிகளுடன் கலைசார் கற்கை நெறி புகட்டும் பெருமையும் பெற்றுள்ளது.
அவரின் தீர்க்க தரிசனப் படி வாங்கிய இருபத்தைந்து ஏக்கர் காணி இன்று கல்லூரியாக பல்கலைக் கழக நுண்கலைப் பீடமாக மற்றும் கல்விப் பணியாளர்களின் பணிமனைகளாக ஒரே இடத்தில் அமைந்தமை எம் இணுவை மண்ணின் பெருமையையும் சிறப்பையும் உணர்த்துவதால் இணுவை மக்களாகிய நாமும் பெருமையடைகின்றோம்.