பொது அமைப்புக்கள்

இணுவில் இளந்தாரி கோயிலடி சனசமூக நிலையமும் இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கமும்

இளந்தாரி கோயில் சனசமூக நிலையம் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும் உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான (அமரர்) வி.தருமலிங்கம் அவர்களால் 1954இல் திறந்து வைக்கப்பெற்றது. இதன் பிரதான உறுப்பினர்களாக பண்டிதர் வித்துவான் இ.திருநாவுக்கரசு, சு.செல்லத்துரை, க.அம்பலவாணர் (இராசா) கா.நடராசா, கிருஷ்ணபிள்ளை, பெ.கனகசபாபதி, செ.இலகுநாதன், தி.சி.சண்முகலிங்கம், செ.செல்வரத்தினம் மற்றும் சிலரும் இச்சங்கம் வளர உழைத்தனர்.

சமய, சமூக, கலை விழாக்கள் வெகுசிறப்பாக நடாத்தப்பட்டன. மேலாக மூன்று நாட்களாக முத்தமிழ் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பெற்றன. பல பெரியார்கள், கல்விமான்கள், கலைஞர்கள் மேடையை அலங்கரித்தனர். இவ்வூர் மாணவர்கள், இளங்கலைஞர்களின் பேச்சுக்கள், பட்டிமன்றம், கலை நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன. (இத்தகவல் அன்றைய நிர்வாக உறுப்பினரின் புகைப்படத்துடன் 1961 சனசமூக நிலையங்களின் சமாச வெளியீடான சமூகத் தொண்டன் என்னும் சஞ்சிகையில் வெளிவந்தது)

இந்த நிலையம் அமைந்த காணியை இவ்வூர் க.அம்பலவாணர் (இராசா) வழங்கினார். இதில் நிறுவப்பட்ட கட்டடத்திற்கு சு.செல்லத்துரையும் வேறு பலரும் உதவிகள் வழங்கினர். இந்த மண்டபத்தில் மாதர் சங்கம், இளைஞர் கழகமும் இணைந்த சங்கங்களாக இயங்கின. அனைவரது அபிலாசைகளும் காலப் போக்கில் இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கமாக உருவெடுத்தது. வருடா வருடம் பொங்கல் விழா, சமய, சமூக, கலை விழாக்களும் நடைபெற்று இத் திருவூரின் பெருமைக்கு வித்திட்டன.

இச்சங்கம் இவ்வூரிலுள்ள விவசாயிகளான பொதுமக்களின் நன்மை கருதி வீதிகளை அகலித்தும் புதியனவாகத் திறந்தும் போக்குவரத்துக்கு உதவினர். விவசாயிகளின் தேவை கருதிக் காலத்துக்குக் காலம் கடன் வசதிகளையும் செய்து கொடுத்தனர். இவர்களின் விளைபொருட்கள் சந்தைப்படுத்துவதன் பேரில் வெங்காயச் சங்கமாக இயங்கியும் மேலும் பல சந்தை வாய்ப்புகளையும் தேடித்தந்தனர்.

1975இல் படித்த யுவதிகளின் வேலை வாய்ப்புக்காக நெசவு நிலைய மொன்றையும் திறந்து உதவினர். மேலும் கனேடிய அரச தூதுவரின் உதவியுடன் பிரதான மண்டபத்தின் முன்பாக ஒரு மண்டபத்தை 1985இல் நிறுவிப் பெண்களுக்கான தையற் பயற்சி மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு உதவினர். இதற்கு முன் அமரர் ம.கந்தசுவாமியின் இல்லத்தில் நடைபெற்ற முன்பள்ளியை 1985இல் இக்கிராம அபிவிருத்திச் சங்கம் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடாத்தினர்.

இதன் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவு விழாவையும் 2011இல் கொண்டாடினர். திறம்பட இயங்கும் இச்சிறுவர் பாடசாலை வருடா வருடம் விளையாட்டுப் போட்டி மற்றும் சிறுவர் கலை விழாவினை நடாத்தி வருகின்றனர். இக்கிராம அபிவிருத்திச்சங்க வளர்ச்சியால் வருடா வருடம் விழாக்கள் நடைபெறவும் உள்ளூர் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றவும் உதவுகிறது. விவசாயிகளின் தேவைகளை அவ்வப்போது பல்வேறு காலங்களிலும் நிறைவு செய்கின்றனர்.

இச்சூழலின் சிறுவர் மற்றும் தாய்க் குலத்தின் சுகாதார மேம்பாட்டுக்கென மருந்துத் தாதியொருவரின் காரியாலயம் இயங்குகிறது. சிறுவர்கள் ஏனைய மாணவர்கள் போட்டி நிகழ்வுக்காக கோட்ட, பிரதேச, மாவட்ட மட்டத்திற் பங்குபற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்திச் சங்கத்தை மையமாக வைத்து விளையாட்டுக் கழகங்கள் இயங்குகின்றன. இச்சங்கவளர்ச்சிக்காக ஆரம்பகால உறுப்பினர்களை விட இடைக்காலத்தில் செ.இலகுநாதன், பெ.கனகசபாபதி, தி.சி.சண்முகலிங்கம் போன்றோர் கடின முயற்சி மூலம் சிறப்பித்தனர்.

பிற்காலத்தில் க.கண்ணபிரான், ந.காசிவேந்தன், ந.தவசோதிநாதன், செ.உதயகுமாரன், இ.தயாகரன் போன்றோர் இச்சங்க வளர்ச்சியில் கூடுதலாகக் கவனமெடுத்து உதவியதால் சிறுவர் பாடசாலையின் 25ஆம் ஆண்டுவிழாவை நடாத்த முடிந்தது. இவர்களுள் தலைவராகப் பணியாற்றிய ந.காசிவேந்தன் சமுர்த்தி முகாமையாளராகப் பணியாற்றியபோதும் சங்கவளர்ச்சியுடன் ‘வெள்ளிவிழா மலர்’ ஒன்றையும் தொகுப்பாசியராக இருந்து வெளியிட்டார்.

இப்பணிக்காலத்தில் இளம் வயதில் மறுமை எய்தியபோதும் (இளந்தாரி கோயில்) இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்தார். தொடர்ந்து ஏனைய அங்கத்தவர்களின் பேருதவியால் இச்சங்கம் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?