இணுவில் இளந்தாரி கோயில்
இணுவில் கிராமத்தின் ஆலய வழிபாடுகளில் நடுகல் வழிபாடு இணுவில் இளந்தாரி கோயிலில் நடைபெறுவது சிறப்பாகும். இலங்கையில் வேறெங்கும் காணப்படாத இவ்வழிபாடு பல அற்புதங்களின் மையமாகவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர் ஆட்சி செய்த காலத்தில் இணுவில் திருவூரை மையமாக வைத்து அமைத்த பெரும்பாகத்தை நிர்வகிக்க வந்த திருக்கோவலூர் பேராயிரவனைத் தொடர்ந்து காலிங்கராயன் என்பவன் ஆட்சிக்கு வந்தான்.
அவனைத் தொடர்ந்து மகன் இளந்தாரியாக இருந்த கயிலாயநாதன் பட்டத்தை அடைந்தான். இவன் இளந்தாரி (வாலிபன்) ஆனதால் துடிப்பும், நற்பண்பும் நீதியும் குடிமக்கள் மீது பேரன்பும் கொண்டு நல்லாட்சி செய்து வந்தான். இவனது ஆட்சிக்காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலமென்பர். இவன் தந்தையின் குண நலப்படி குன்றாத சமய பக்தியும், செந்தண்மையும் கொண்டிருந்தான். குடிமக்களும் இவனைத் தெய்வமாகவே போற்றி வந்தனர்.
இவன் அயலிலுள்ள சிவகாமி அம்பாளை உள்ளன்போடு தினமும் தரிசித்து வந்தான். இவன் ஆலய தரிசனத்துக்கும் அரச பணிக்கான சுற்றுலாவுக்கும் செல்லும்போது கருணை மிகு சிவகாமி அம்பாள் ஊர்வலத்தின் முன் சென்றதாகவும் கூறுவர். இவனிடமிருந்த தெய்வீக உணர்வால் முக்காலத்தையும் அறிந்து தமது பிற்கால நிகழ்வுகளையும் குடி மக்களுக்குத் தெரிவித்திருந்தான். இவன் சிவகாமி அம்மன் ஆலயத்தின் வடமேல் திசையில் இருநூறு யார் தொலைவில் பதினாறு அறைகளைக் கொணட் பெரியதும் நாற்சார் அமைப்புங் கொண்ட மாளிகையில் வசித்து வந்தான்.
இவன் குடிமக்களுக்கு ஏற்கனவே கூறியிருந்தபடி தமது மாளிகையின் வடபால் நூற்றைம்பது யார் தொலைவிலுள்ள புளியமரத்தில் (தற்போது இளந்தாரி கோயில்) குடி மக்களின் கண்ணெதிரே ஏறி உருக்கரந்தான் (பச்சைக் கூட்டுடன் மறைந்தான்) அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் யாவரும் தெய்வீக நிகழ்வை எண்ணி வியந்தனர். சில நாட்கள் சென்றதும் இளந்தாரி அம்மரத்தடியில் கூடி நின்ற மக்கள் முன் தோன்றி தம்மை வழிபடும் நெறிகளையும் தெய்வீகத்தையும் கூறி மறைந்தருளினான்.
அவனது அறிவுரைப்படி பக்தி மேலிட்ட மக்கள் அப்புளிய மரத்தடியில் சிறுகுடிசையமைத்து ஒரு கல்லையும் நாட்டி அந்த கல்லை வழிபட்டு வந்தனர். இதனையே தமிழறிஞர்கள் நடுகல் வழிபாடென விதந்துரைத்தனர். மக்கள் தொடர்ந்து உள்ளன்போடு அவ்விடத்தில் தினமும் விளக்கேற்றிப் பூசித்து வந்தனர். அவன் உருக்கரந்த நாள் திதியில் வருடாவருடம் அவனது அறிவுரைப்படி (பிரதி வருடமும் வருடப்பிறப்புக்கு முந்திய வெள்ளிக்கிழமை மக்களெல்லாம் ஒன்றுகூடி பொங்கலிட்டு மடை பரவி வழிபட்டனர்.
ஆலய நிர்வாகி தமது ஆலய முன்றலில் பெரிய கிடாரத்தில் பொங்கி மடை பரவி பலகாரவகை, பழ வகை, பொங்கல், யாவற்றையும் மூன்று பெட்டிகளில் ஏந்திய வண்ணம் பறை மேள வாத்தியமும் நாட்டார் பாடலும் ஆடலுடன் முன் செல்ல ஊர்வலமாகத் தீவெட்டி வெளிச்சத்தில் இளந்தாரி வழிபட்ட சிவகாமி அம்பாளுக்கு முதற்படையல் படைத்துப் பால், இளநீர் அபிசேகித்து கர்ப்பூரம் கொழுத்தி நீற்றுப் பூசணிக்காய் வெட்டி வழிபட்டனர். தொடர்ந்து சிவகாமி அம்பாளின் ஆலயத்தில் பின் வீதியலமைந்த காவல் தெய்வமான பத்திரகாளி உடனுறையும் மாணிக்க பைரவப் பெருமானுக்கும் படையலிட்டு வழிபட்டதும் திரும்ப வந்து இளந்தாரி கோயிலின் வடபாலுள்ள இளந்தாரியின் மெய்க்காப்பாளரான அண்ணமார் உருக்கரந்த ஆலமரத்தடியிலும் படையலிட்டு வழிபட்டனர்.
இதன் பின்னரே இளந்தாரி கோயிலின் சூழலில் பொங்கிப் படையலிட்டிருப்பதைப் பெரு மடையாக ஏற்று வழிபட்டனர். கால மாற்றங்களும் காலப்போக்கும் ஏற்பட இப் பொங்கல் வழிபாடும் ஊர்வலமும் அருகி விட்டபோதும் ஆலய முன்றலில் வருடாவருடம் குறித்த திதியில் பொங்கி மடை பரவுவதும் இதர விழாக்கள் நடைபெறுவதும் ஏனைய ஆலய விழாக்களின் மாதிரியாக மாற்றப்பட்டும் பொங்கலும் நடைபெறுகிறது.
காலங்கள் கடந்தபோதும் அன்று தொட்டு ஆலய பரிபாலகரின் பரம்பரையினர் தொடர்ந்து இன்றுவரை பூசை செய்து வருகின்றனர். முன்னூறு வருடங்களுக்கு முன் இச்சூழலில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இவ்வாலயத்தின் சிறப்பையறிந்து தமது மதிநுட்பத்தாலும் கவிபாடும் ஆற்றலினாலும் இளந்தாரியின் ஆலய வரலாற்றினை நூலாகத் தொகுப்பதன் பேரில் நன்காராய்ந்து குறிப்புக்களாகவே குறித்தார். ஆனால் அவரால் நூலாக உருவாக்க முடியவில்லை. இவ் ஆலயத்தின் பரிபாலகர் வழியில் வந்த நாகலிங்கம் என்பவர் ஆலயக் குறிப்புக்களைப் பேணி வைத்தார்.
தமிழவேள் இ.க.கந்தசுவாமி ‘பஞ்சவர்ணத் தூது’ என்னும் நூலாக வெளியிட இறையருள் கிட்டியது. இத் தொகுப்பின் ஒரு பகுதியான ‘நடுகல் வழிபாடு’ என்னும் கட்டுரை தமிழவேள் இ.க.கந்தசுவாமி மூலம் மொறீசியஸ் தீவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் இவ்வாலயம் பற்றிய பதிவுகள் தெரிவிக்கப்பட்டன. இதனால் இளந்தாரி கோயிலின் பெருமையுடன் இணுவில் திருவூரின் சிறப்பும் மேலோங்கியது.