பொது அமைப்புக்கள்

இணுவில் இளந்தொண்டர் சபை

இணுவில் கந்தசுவாமி கோயிலின் ஆலயப் பணி செய்யவென அச்சூழலில் வாழ்ந்த இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து அறப்பணியை ஏற்றனர். இவர்கள் தம் பணி செய் குழுவை ஒரு சபையின் அமைப்பாக அமைத்துத் தூய பணியாற்ற முன்வந்தனர். இவர்களுக்கு ஆதரவு தர முன்வந்த முருகபக்தரான இளையதம்பி இராசு (ஓம்முருகா) என்பவர் 1977 ஆவணி மாதக் கார்த்திகைத் திருவிழா அன்று மாலை, ஆலய வடகீழ் திசையிலிருந்த பலா மர நிழலிலிருந்து சிறந்த பணியாற்ற உதவு
தொகையாகப் பத்து ரூபாவைத் தந்து இயங்குமாறு கூறினார்.

அவரின் உந்துதலுடன் அன்று மாலை திருவிழா முடிந்ததும் ஆரம்பக் கூட்டத்தைக் கூடினர். அன்று அச்சூழலில் வாழ்ந்த சில இணுவைக்கந்தன் அடியவர்களினால் ஆரம்பித்த பெருமுயற்சி ஒரு சபையை உருவாக்க உதவியது. அவர்களின் ஏகமனதான தீர்மானத்தில் இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபை என்னும் பெயரில் இயங்கவும் தமது அமைப்புக்கான உபவிதியை அமைக்கவும் உறுதி செய்தனர்.

இவர்களின் இச் சிந்தனையை நிலை நிறுத்த மேலும் பலர் கூடினர். அவர்களின் உபவிதிப்படி முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட ஆண்கள் திருமணமாகாமல் ஆசார சீலராகவும் ஆலயப் பணியினை உள்ளன்போடு செய்யவும் முன்வரும் போது உறுப்பினராகச் சேர்த்துத் தம் அறப்பணியை விரிவடையச் செய்யவும் தீர்மானித்தனர்.

இவர்களின் தீர்மானப்படி அடுத்து வரும் 1978 பெருந்திருவிழாக் காலத்தில் ஆலய முன்றலில் ஐம்பது யார் தொலைவில் (தற்போதுள்ள அறிவாலயத்துக்கு முன்பாக) தற்காலிக நீண்ட பந்தலமைத்துத் தாக சாந்திக்காக தேர் தீர்த்த விழாக் காலங்களில் குளிர்பானம் வழங்கவும் விழாக்கால இருபத்தைந்து நாட்களும் இரவு விழா முடிந்ததும் பண்ணிசை, சமயச் சொற்பொழிவு, புராண நாடகங்களை நிகழ்த்தவும் ஏற்பாடானது.

இச் செலவினத்தை சபை உறுப்பினரும் பொது மக்களும் தாராளமாக வழங்கியதால் அவ்வருடத்திலிருந்து வருடா வருடம் தண்ணீர்ப்பந்தல் பணி தொடர்கிறது. இதுவே அச்சபையினரின் சிறப்பான பணியாக தொடர்கிறது. பெருவிழாக் காலங்களில் காலையிலும் மாலையிலும் சுவாமியின் பின் பசனை பாடும் பணியையும் ஏற்றனர். வயது வந்தவர்களுடன் எதிர்கால நன்மை கருதி இளஞ்சிறார்களையும் தம்முடன் இணைத்தனர். இச்சிறுவர்களின் பிஞ்சுக் குரலின் இனிமையை ஊக்குவிப்பதன் பேரில் அவர்களுக்கு இலவச வகுப்புகள் நடாத்தவும் தீர்மானித்தனர்.

வகுப்பறை வசதிகள்

1965 இல் ஆலய வடக்கு வீதியின் வடபால் அரசினால் புதிய நெசவுசாலை ஆரம்பிக்கப்பட்டபோது கிழக்கு நோக்கிய மண்டப அமைப்பில் அவர்களின் தேவைக்கென ஆரம்பிக்கப்பட்டு எஞ்சியிருந்த குறைவேலைகளைத் தொண்டர் சபையினர் பொது மக்களின் உதவியுடன் நிறைவு செய்து வகுப்புகளை நடாத்த முன்வந்தனர்.

வகுப்புகள்

தாம் முன்னர் தீர்மானித்தபடி இளஞ்சிறார்களுக்கான முன்பள்ளியை ஆரம்பித்ததும் சமய அறிவு, பண்ணிசை போன்ற வகுப்புகளையும் நடாத்தினர். முதலில் இவ்வகுப்புகளுக்கு இச்சூழலிலுள்ள ஆசிரியைகள் உதவிக்கரம் நீட்டினர். பண்ணிசை கற்பதற்குப் பல இளம் மாணவர்கள் முன்வந்தனர். இதனால் சமய வகுப்பு, பண்ணிசை, மிருதங்க இசை, சங்கீதம், நடனம் போன்ற பாடங்களைப் போதிக்கவும் ஏற்பாடானது.

முன்பள்ளி மாணவர்களும் இப்பாரம்பரிய கலை வகுப்புகளிற் கற்க இணைந்தனர். பண்ணிசை மற்றும் சங்கீத இசையை கலாபூஷணம் சிவஞானசேகரமும் மிருதங்க இசையை இ.அருணகிரிவாசனும் க.சங்கரசிவமும் வயலின் இசையை கலாபூஷணம் உ.இராதாகிருஷ்ணனும் ஆரம்பத்திற் போதித்தனர். மிருதங்க ஆசிரியர்கள் வேலை வாய்ப்புடன் வெளிச்சென்ற போது கலாபூஷணம் க.ப.சின்னராசா மிருதங்க இசையைப் போதித்தார்.

இதனால் பண்ணிசை, சங்கீதம், மிருதங்கம், வயலின் போன்ற வகுப்பாசிரியர் தொடர்ந்து இன்று வரை போதித்து வருவதால் வருடா வருடம் மாணவர் தொகையும் பெருகியது. இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் பாடத்துக்கமைவான அறநெறிப் பாடங்களும் வட இலங்கை சங்கீத சபையின் பாடத் திட்டத்துக் கமைவாக சகல கலை வகுப்புகளும் போதிக்கப்படுகின்றன.

இக்கலை வகுப்புகளில் இவ்வூர் மாணவர்களுடன் அயலூர் மாணவர்களும் இணைந்து கற்றனர். இவர்கள் வரன்முறைப்படி கற்பதால் வருடா வருடம் வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப் பெறும் சகல கலை வகுப்புகளிலும் நூற்றுக்கணக்கானோர் பல தரத்திலும் (1-6) தோற்றித் தேர்ச்சி பெறுகின்றனர். இளந்தொண்டர் சபையினர், பண்ணிசை, சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றில் போட்டிப் பரீட்சைகளை நவராத்திரிக் காலத்தில் வைத்து முதற் பரிசாகத் தங்கப் பதக்கத்தையும் ஏனையவற்றுக்காகச் சிறந்த பரிசில்களையும் வருடா வருடம் வழங்கி வருகின்றனர்.

இங்கு கற்கும் மாணவர் கல்வித் தர உயர்வால் உயர் தரத்தில் கலைகளிற் சிறப்பால் கூடுதலாக யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் அனுமதி பெற உதவுகிறது. மேலும் பலர் படிப்புகள் நிறைவு கண்டும் அரங்கேற்றம் காணு முன் வேலை வாய்ப்பைத் தேடி வெளிநாடுகள் சென்று தாம் கற்ற இசையை அப் பகுதியினருக்கு போதித்தும் சிறப்படைந்தனர்.

புதிய கட்டடங்கள்

இளந்தொண்டர் சபையின் உறுப்பினர் ச.சபேசன் இலண்டனில் வசிக்கிறார். இளந்தொண்டர் சபையின் முன்பள்ளி மாணவர்களின் நன்மை கருதி தமது மறுமை எய்திய மூத்த சகோதரர் ச.சசிகரனின் நினைவாக (50′ x 20′) ஆயிரம் சதுர அடி விசாலங்கொண்ட நவீன முன்பள்ளி மண்டபத்தை பெருந்தொகையான செலவில் நிறுவி 31.08.2005 அன்று சண்முகநாதன் (தந்தை) குடும்பத்தின் அன்பளிப்பாகக் கையளித்தனர். இந்த மண்டபத்தை அவர்களே தொடர்ந்து திருத்தஞ் செய்தும் மை பூசியும் பராமரித்து வருகின்றனர்.

புதிய கலாசார மண்டபம்

மாணவர்களின் கல்வி வசதி, இதர விழாக்களின் நோக்காக இன்று அமைந்துள்ள (100′ x 40′) நாலாயிரம் சதுர அடி விசாலமான மண்டபத்தை 2002ல் ஆரம்பித்தனர். அரசினர் மானியமாக மூன்று இலட்சம் ரூபா வழங்கினர். காலங்கள் கடந்தாலும் உறுப்பினர், ஊரவர்களின் பேருதவியுடன் தொண்ணூறு வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளது. இவ்விடத்தில் பாரம் பரிய கலை விழாக்கள், மாநாடுகள், அரங்கேற்றங்கள், திருமணங்கள், ஆலயப் பெருவிழாக்கள், திருமண நாட்களில் விருந்துபசாரம் யாவும் நடைபெறுகின்றன.

இன்றைய முன்னேற்றங்கள்

இளந்தொண்டர் சபையால் மாணவர்களுக்கான நாடகங்கள் கற்றுத் தரப்படுகின்றன. பல புராண இதிகாச நாடகங்கள் உள்ளூர், அயலூர் தேசிய மட்டம் வரை அரங்கேற்றப்பட்டு முதன்மை விருதுகளையும் சிறப்பையும் பெற்றுத் தந்தன. 2011 ஆண்டுக்கான ‘குட்டி அனுபவம்’ என்னும் நாடகம் அரச நாடக விழா கொழும்பில் பங்கு பற்றி நாடகம் மற்றும் துணை நடிகர்களுக்கான விருதையும் பரிசில்களையும் தேடித் தந்தன. நாடக அமைப்பாளர் மா.ந.பரமேஸ்வரன் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற வைத்தது.

குறிப்பாக இளந்தொண்டர் சபையில் முன்பள்ளி, அறநெறிக் கல்வி, கலைகள், நாடகம் இதர வகுப்புகள் பாரம்பரிய கலைகள் யாவும் வளர்க்கப்படும் இணுவையூரின் ஒரே மையமாக அமைந்தமை போற்றத் தக்கதாகும். மேலும் இளந்தொண்டர் சபையினரின் பெருமுயற்சியால் இணுவில் கந்தப் பெருமானுக்கோர் திருச்சப்பறமொன்று பொதுமக்களின் உதவியுடன் உருவாகி 01.07.1989 அன்று கந்தப் பெருமான் வீதியுலா வந்தமை இவர்களின் உயர்ந்த பணியாக அமைந்தது.

இங்கு நடைபெறும் சகல வகுப்புக்களிலும் முன்னூறு பிள்ளைகள் கற்று உயர்வடைகின்றனர். இணுவில் மேற்கில் உதயமான இளந்தொண்டர் சபையின் சேவை சமய, சமூக, கலை, கலாசாரப் பணியாகவும் பாரம்பரிய மரபுகளைப் பேணும் அறநிலையமாகவே அமைந்துள்ளது.

நூல் வெளியீடுகள்

இளந்தொண்டர் சபையினால் காலத்துக்குக் காலம் சில நூல்கள் வெளியானது. கந்தசஷ்டி கவசம், சகல கலாவல்லிமாலை இலவச வெளியீடாக வருடா வருடம் வெளிவருகிறது. அடுத்து கலாவித்தகர் க.சங்கரசிவம் எழுதிய மிருதங்க சாஸ்திரம் (1978), பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் (1982) பரராசசேகரப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ் (1985) அன்னை நாச்சியார் அருள் மஞ்சரி (கவிதை நூல்) ஆகியவை வெளியிடப்பட்டன.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?