பொது அமைப்புக்கள்

இணுவில் ஒன்றியங்கள்

இணுவில் திருவூரிற் பிறந்து வளர்ந்து இங்குள்ள சைவநெறி, தமிழ் மரபு, கலையார்வம், நாடி வந்தோரை உற்றார் உறவினரை ஆதரித்து உபசரித்து நன்மை தீமை விழாக்களில் மேலும் பல உறவுகளுடன் உறவாடி, மகிழ்ந்த பண்பு வற்றாத பாச உணர்வுடன் தொப்புள் கொடி உறவாக எம்மக்கள் எங்கு வாழ்ந்தாலும் ஊரோடும் உறவோடும் நிறைவான வாழ்வை அனுபவித்த பாங்கு நிலையானது மாறாதது.

எம்மண்ணில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு அல்லலுற்றதை பொதுவான செய்திகளால் அறிந்தாலும் உண்மைச் சம்பவங்களையும், அறிவுப் பசி தேடுவோரின் இயலாமையையும் புலம் பெயர்ந்து வாழ்பவர்களால் அறிய முடியவில்லை. இவர்கள் எம் மண்ணின் வாசனையால் தாம் வாழுமிடங்களில் சமய நெறிப் பிணைப்பால் ஆலயங்களை அமைத்து, நிர்வகித்து, விழாக்கள் நடாத்தி ஒன்றுகூடலின்போது பிறந்த மண்ணின் வேதனைகளையும் உணராமலில்லை.

இணுவில் ஒன்றியம் பிரித்தானியா

எம்மண்ணின் பல இன்னல்களுக்குமிடையே சைவமும் தமிழும் வளரவும், நாவலர் காட்டிய அறவழிச் சென்று எம்மவருக்கு எம் மண்ணில் நற்போதனை செய்து துயரங்களிலிருந்து ஓய்வு பெற வைத்த எம் மண்ணின் மைந்தன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் அக்கரைச் சீமைக்குச் சென்றபோது தமது பேச்சுக்களினிடையே இணுவை மக்களின் துன்ப துயரங்களையும் எடுத்துக்கூறினார். அவர், எம் மக்களின் அறிவுப்பசி சமய, கல்வி, சமூகத் தேவைகளை
அறிவித்தார்.

இதனால் உண்மை நிலையை உணர்ந்த (முதலில்) இலண்டன் வாழ் இணுவை மக்கள் பல்வேறிடங்களிலிருந்தும் ஒன்றுகூடி திருமுருகன் அவர்களை ஆதாரமாகக் கொண்டு தமக்கென ஒரு யாப்பைத் தயாரித்து உறுப்பினர்கள் யாவரும் ‘ஊருக்கொரு பிடி உழைப்பில்’ என்னும் மகுட வாசகத்தை தாரக மந்திரமாக ஏற்று எமதூரில் நடைபெறும் அறப் பணிகளுக்குத் திருமுருகனூடாக அனுப்பவும் முடிவு செய்தனர். அன்று அவர்கள் கூட்டிய அமைப்பை ‘பிரித்தானியா இணுவை மக்கள் ஒன்றியம்’ என்னும் பெயருடன் இயங்கினர்.

பின்னர் இப்பெயர் மாற்றஞ் செய்யப்பட்டு ‘இணுவில் மக்கள் ஒன்றியம் UK ‘ என இன்றுவரை இயங்குகிறது. இவ்வமைப்பின் ஆரம்ப கால அமைப்பாளராகவும் முதலாவது தலைவராகவும் இணுவையூர் கந்தையா விவேகானந்தன் அவர்களும் எம்மவர்களான நடராசா சச்சிதானந்தன், பதஞ்சலி நவேந்திரன், ச.அரியராசா, வை.தனகேசவன் (யாவரது பெயர்களும் கூற முடியவில்லை) போன்ற பல அறப்பணியாளர்கள் ஆற்றிய ஆர்வம் இணுவை மக்களின் அறிவுப் பசிபோக்க ஆரம்பமானது.

முதலில் இணுவையூரின் மத்தியில் ஒரு சிறந்த நூலகத்தை நிறுவி எம் மண்ணிலுள்ள ஏனைய நூல் நிலையங்களையும் கல்வி வசதிகளையும் ஏற்படுத்த முன்வந்தனர். இலண்டனில் அமைந்த இணுவில் திருவூர் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கமைவாக கனடா வாழ் இணுவை மக்களும் ஒன்றுகூடி இணுவையில் நூலகம் மற்றும் கல்விக் கூடங்களுக்கான தேவைகளுக்கும் உதவ முன்வந்தனர். இணுவில் கிழக்கைச் சேர்ந்த மயில்வாகனம் இராசகுலசூரியர் மற்றும் பலரும் இப்பணி சிறக்கத் தம்பங்களிப்பைச் செலுத்த முன்வந்தனர்.

முதலில் இலண்டன் ஒன்றியத்தினரின் செயற்திட்டத்துக்கமைவாக இணுவில் மத்தியில் அமையவுள்ள நூலகத்துக்கான காணியை எமதூர் குகவரதன், கருணாமூர்த்தி ஆகிய இருவரும் கொள்வனவு செய்து தந்தனர். இவ்விடத்தில் அமைக்கும் நூலகத்துக்கான சகல பொறுப்புக்களையும் ஏற்கும் சபையொன்று இணுவையில் உருவானது. இச்சபைக்கு செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் புரவலராகவும் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்கள் தலைவராகவும் அ.குகதாசன் அவர்கள் செயலாளராகவும் து.சிவராசா பொருளாளராகவும் மற்றம் பேராசிரியர் க.தேவராசா, சு.பொ.நடராசா அவர்களுடன் வைத்திய கலாநிதி க.பாலசுப்பிரமணியம், த.கந்தசாமி ஆகியோரைக் கொண்ட சபை தம்பணியேற்றது.

இலண்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள இணுவில் ஒன்றிய மக்களின் பூரண ஒத்துழைப்பினால் பொது நூலகத்துக்கான நிதிகள் வரவும் கட்டட வேலைகள் ஆரம்பமானது. நாட்டு நிலைமைகளும் நிதி வழங்கும் ஒன்றியங்களின் தாமதங்களும் ஏற்பட்டதால் அறிவாலயம் என்னும் நூலகத்துக்கான கட்டடப் பணி நிறைவேற்றக் கால தாமதமேற்பட்டது.

எடுத்த பணியை நிறைவேற்ற இலண்டன் ஒன்றியத்தினர் பங்களிப்புச் செய்தனர். கட்டி முடிந்த பின்பும் மண்டபத்துக்கான மை பூசுதல் மற்றும் குறை வேலைகள் அவர்களால் நிறைவு செய்யப்பட்டன. இலண்டன் மற்றும் கனடா ஒன்றியத்தினர் இணுவில் மத்திய கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரிக்கான விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழாவுக்கென வருடா வருடம் பெருநிதியை வழங்கினர்.

வருடா வருடம் கொடுப்பதிலும் உரிய பணம் வட்டியாக வரும் அளவுக்கான பணத்தை (இணுவில் மத்திய கல்லூரி 9 இலட்சம், இணுவில் இந்துக் கல்லூரி 6 இலட்சம்) வங்கியில் நிலையான வைப்பிலிட்டு அதனை எமது திருமுருகன் மூலம் கனடா ஒன்றியத்தினர் கையளித்தனர். இதன் பேறாக 2012ஆம் வருடத்துக்கான வட்டியைப் பாடசாலைச் சமூகங்கள் நன்றியறிதலுடன் பெற்றுக்கொண்டன.

இணுவில் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது வாழும் நாடுகளிலுள்ள ஒன்றியங்கள் மூலமாக எமதூரில் பற்பல கல்வி, சமூக, பொதுப் பணிகளுக்குத் தேவைக்கேற்ப வழங்குவது பாராட்டக்கூடியது. இலண்டனில் முன்னர் இணுவில் ஒன்றியத்தின் நிர்வாகிகள் பலர் வயது கூடியதால் இளஞ் சமுதாயத்தினரை நிர்வாகப் பணியில் அமர்த்தித் தமது ஆலோசனைகளையும் உதவிகளையுஞ் செய்து வருகின்றனர்.

அதே போல இணுவையிலும் முன் பணியாற்றிய உறுப்பினரை ஆலோசகர்களாகவும் திருமுருகனின் கண்காணிப்பில் இவ்வூரில் பரவலாக இளம் தலைமுறையினர் நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எமது திருவூரின் அத்தியாவசிய பொதுத் தேவைகளை இலண்டன், கனடா மற்றும் ஏனைய நாடுகளில் வாழும் இணுவில் ஒன்றியத்தினர் சிறப்பாக நிறைவேற்ற எமதூர் தெய்வங்கள் அருள் பாலிக்க இறைஞ்சுவோமாக.

இணுவில் ஒன்றியம் ஜேர்மனி 

 

இணுவில் திருவூர் ஒன்றியம் கனடா

கனடாவில் 1988 ம் ஆண்டு இணுவில் மக்களால் தொடங்கப்பட்ட அமைப்பு இணுவில் கனேடிய மக்கள் நடுவம். இங்கு நிர்வாகசபை இல்லை இருப்பினும் ஆலோசனைக்காக தலைமை செயலகம் ஒன்றிருந்தது .இதில் தலைவர் செயலாளர் பொருளாளர் இருக்கவில்லை.

இவ் அமைப்பில் ஆறுமுகம் கதிர்காமநாதன், இரத்தினம் சிவகுமார், சுப்பிரமணியம் சிவலிங்கம், சீவரத்தினம் விக்கினேஸ்வரன், ஆனந்தர் குமார், தில்லையம்பலம் விஜயனாதன் (வாணி சந்திரன்), பஞ்சாட்சரம் காசிநாதன், கனகசபை கங்காதரமூர்த்தி(கடாச்சன்), திருநாவுக்கரசு மோகனதாஸ், கார்த்திகேசு கணேஸ்வரன் இந்த பத்து பேரும் செயல்பாட்டில் இருந்தனர்.

யாப்பு கனகசபை கங்காதரமூர்த்தி(கடாச்சன்) தயாரிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டு 1989 இல் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.
வருட இறுதியில் கந்தசஷ்டி சூரன்போர் எம் ஊரவரே இணுவில் கனடா அங்கத்தவர்களே செய்வது வழக்கம்.

1991 -1999 வரை கோடைகால ஒன்றுகூடல் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி தை மாதத்தில் பொங்கல் விழா இப்படி அனைத்தும் 10 பேரின் தீர்மானத்துடனும் முதலீட்டுடனும் நடந்தது. பொங்கல் விழாவில் கிடைக்கும் அன்பளிப்பை இணுவில் இரு பாடசாலைகளுக்கும் பங்கிட்டு கொடுத்தார்கள். அத்தோடு அரச வைத்தியசாலைக்கும் (இணுவில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு) (government dispensary) சில உபகரணங்கள் வாங்கி கொடுத்திருந்தார்கள்.

2000 ம் வருடம் கோடைகாலம் ஆறுதிருமுருகன் கனடா வந்த போது அவர் எல்லோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெயர் மாற்றுவது என்றும் யாப்பில் பிரச்சனை இல்லை என்றும் விழாக்கள் உள்ளபடி நடக்கும் என்றும் பொது கூட்டத்தில் 15 பேர் கொண்ட நிர்வாகம் அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன் பின் அவரின் தூண்டுதலில் 15 பேர் கொண்ட குழுவுடன் இணுவில் திருவூர் ஒன்றியம் கனடாவில் உதயமாகியது.

அதன் பிற்பாடு 2000-2015 வரை அதே நிர்வாகம் முன்னர் எவ்வாறு எல்லா நிகழ்வுகளும் செய்தார்களோ அதே போல அவற்றை செய்து வந்தனர். 2018 இல் நிர்வாகசபை மாறியது. தலைவர் சோமசுந்தரம் ரவிமோகன், உபதலைவர் சொர்னலிங்கம் சந்திரகுமார், செயலாளர் முருகேசு கிருபா, பொருளாளர் சாந்தி சர்வானந்தா இவர்களுடன் இன்றும் தொடர்கிறது.

தற்போது இணுவில் கனடா என்றும் இணுவிலை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இங்குள்ளவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இணுவில் கனடாவில் எட்டு பேர் கொண்ட குழுவே இயங்குகின்றது. இங்கு என்ன வேலை செய்தாலும் பொது நூலகத்தினூடாக செய்துவருகின்றார்கள். அதனடிப்படையில் ஜனவரி, ஏப்ரல், ஜுன், அக்டோபர் மாதங்களில் பாதிக்கபட்ட 5 – 6 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தொழில் செய்யும் வழியை அமைத்து கொடுத்துள்ளார்கள்.

மாறாக கடந்த ஜுனில் அதனை நிறுத்தி 115 – 120 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் கொடுத்துள்ளார்கள். இவர்களின் சுற்று வட்டத்தில் கனடாவில் 200 குடும்பங்கள் இருக்கின்றன. ஒன்றிணைந்து வேலைத் திட்டங்கள் செய்து வருகின்றனர். மேலும் இணுவில் இந்துக்கல்லூரியில் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலாம்வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு 2021 இல் பாடசாலை சீருடைக்கான அவர்களது கட்டணம் கல்விக்கான உபகரணங்கள் கொடுத்து ஊக்குவிக்கின்றார்கள்.

வரும் காலங்களிலும் செய்ய உத்தேசித்துள்ளார்கள். மேலும் இணுவில் இந்துக் கல்லூரியில் நவீன தொழில்நுட்பத்துடன் இரு வகுப்பறைகள் (smart classes) அமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் பிள்ளையார் கோவில் பாலஸ்தாபனம் செய்து புனருதான வேலைகள் நடைபெறுவதால் அவர்களுக்கும் மக்கள் தரும் நிதியினை பெற்று அவ்விடம் அனுப்பி வருகின்றார்கள்.

இத்தனைக்கும் கனடாவில் குதூகல விழாக்களோ ஒன்று கூடலோ இதுவரை செய்யவில்லை வரும் காலங்களில் அதனை மேற்கொண்டால் தான் அடுத்த தலைமுறையையும் அவர்களுடன் இணைத்துக் கொள்ளலாம் என எண்ணுகின்றனர்.

 

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?