இணுவில் சிவகாமசுந்தரி சனசமூக நிலையம்

0Shares

இணுவில் சிவகாமி அம்மன் கோயில் சூழலில் வாழ்ந்த விவசாய சுருட்டுவேலை செய்வோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என்ற வேறுபாடின்றி ஆர்வமுள்ள வாலிபர்கள் பலர் சனசமூகநிலையமொன்றை நிறுவ முன்வந்தனர். இவர்களுக்கு உதவுவதன் பேரில் வே.பெரியதம்பி, வ.நாகலிங்கம், வ.சுப்பிரமணியம் போன்ற பலர் இவ்வமைப்புக்கான நிலையத்தை நிறுவ முன்வந்தபோது இணுவில் சிவகாமி அம்மன் கோவில் வடமேல் வீதியில் வசித்த பெரியார் கதிர்காமு என்பவர் அரைப்பரப்புக் காணியை அன்பளிப்புச் செய்தார்.

இக்காணியில் பலர் சேர்ந்து முன்வந்து 1948இல் ஒரு குடிசை அமைக்கப் பல வகையிலும் உதவினர். இரு நாளேடுகள் முதலில் வழங்கப்பட்டன. நாட்கள் செல்ல உடுவில் கிராம சபையும் வருடாந்த அன்பளிப்பு புதினப்பத்திரிகைகளுக்காக வழங்கப்பட்டது. நூல்நிலையம் வளர்ச்சி கருதிய பலர் நிலையத்தைக் கல்லினால் கட்டவும் உதவினர். வருடா வருடம் புதிய நிர்வாக சபை இளைஞர் மட்டத்தில் தெரிவாகி கிரமமாக சந்தாப்பணம் செலுத்தினர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பொது உறுப்பினராக அமைந்தனர். இவர்கள் யாவரும் சிறந்த சமய பக்தர்களாக இருந்தனர்.

ஆலயப் பெருவிழாக்கள் இதர விழாக்களில் சுவாமி ஊர்வலம் வரும் நாட்கள் மற்றும் நவராத்திரிக் காலங்களில் இதர குருபூசைத் தினங்கள் போன்ற சமய விழாக்காலத்தில் இவ்வுறுப்பினர்கள் தாம் ஒவ்வொரு வரும் வருடத்தில் ஒருநாள் உபயமாக ஏற்று எல்லைமானப் பந்தல் அமைத்து சுவாமி வரும்போது அர்ச்சனையும் கூட வருவோர்களுக்கு அவல், கடலை போன்ற பிரசாதமும் வழங்கி இன்புறுகின்றனர். குறிப்பாக இவ்வாலய நவராத்திரி ஒன்பதாம் நாள் மகிஷாசுரன் போரும் மறுநாள் மானம்பூ உற்சவமும் நடைபெறும் போது பக்திப் பரவசத்தால் பலர் ஆனந்தக்கூத்தாடி மகிழ்வர்.

உறுப்பினர்கள் யாவரும் இளம் சமுதாயமானதால் தமது ஆனந்தக் கூத்தை முகமூடியுடன் கூடிய வேடதாரி ஆட்டமாக ஆடவும் எண்ணி 24 வருடங்களுக்கு முன் நான்கு முகமூடி ஆடை களைத் தமது செலவில் அமைத்து முக மூடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவ்வாட்டத்தின் விருப்பின் பேரில் இதர உறுப்பினர்கள் தாமும் வாங்கி ஆடுவதன் நோக்கில் ஒரு சிறுதொகைப் பணத்தை அன்பளிப்புச் செய்து ஆடித் தமது ஆவலை நிறைவு செய்கின்றனர். இவ்வாறு சேரும் பணம் முகமூடிகளுக்குப் பொறுப்பான ஒரு குழுவினர் மட்டும் பொறுப்பேற்று அதன் பராமரிப்புச் செலவுக்கும் மேலதிக உடுப்புகள் சேர்க்கவும் உபயோகித்தனர்.

இதனால் இன்று இவர்களிடம் பத்திற்கும் மேற்பட்ட முகமூடி உடுப்புகளும் இரு குதிரைகளும் ஆலய நவராத்திரி இறுதி நாட்களில் எம் மண்ணின் பாரம்பரிய வேடதாரிகளின் முகமூடி ஆட்டம் என்னும் கலையைப் பேணி வருகின்றனர். ஆண்டு தோறும் இவ்வாட்டத்தின் பேரில் கிடைக்கும் சிறுதொகைப்பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. மேலும் பல ஆட்ட உடுப்புகள் செய்யவும் எம் மண்ணில் பாரம்பரியம் பேணும் இக் கலையை வளர்க்கும் இணுவில் சிவகாமி சனசமூக நிலைய உறுப்பினரின் சேவை சிறப்பானது.

இந்த நிறுவனத்தினரின் அருஞ் சேவையால் இணைந்த அறையில் ஒரு நூலகம் உருவாகி உடுவில் பிரதேச சபையின் உதவியில் நூல்கள் கிடைக்கப் பெற்று வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் உதவுகிறது. இச்சனசமூக நிலையம் நன்கு இயங்குவதால் பலர் நன்மை அடைகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!