ஆலயங்கள்

இணுவில் செகராஜசேகரப் பிள்ளையார் கோவில்

சீரோங்கு புகழ் மலிந்த பேரிணுவைத் திருவூரில் கருணை மழை பொழியும் ஆலயங்கள் மிகுந்ததால் மக்களும் சிவநெறி பேணி நலமுடன் நல்வாழ்வை மேற்கொண்டுள்ளனர். அதிகாலையில் அனைவரையும் துயிலெழுப்பும் ஆலய மணியோசை நற்சிந்தனையுடன் அறப்பணியாற்றத் தூண்டுகிறது. இணுவையூர் மக்களை நற்பண்புடன் வாழ உறுதுணை புரியும் ஆலயங்கள் பல உள. பண்டைய தமிழ் மன்னர்களால் அமைக்கப்பட்ட நான்கு முதுபெரும் ஆலயங்களுள் இணுவில் மேற்கில் அமைந்த செகராசசேகரப் பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும்.

இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான செகராசசேகரனால் அமைக்கப்பட்டு வழிபட்ட திருத்தலம் செகராசசேகரப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் இயற்கை வனப்பின் சரித்திரத்தை எடுத்துக் கூறும் நற்பெயருடன் கணபதி நாமத்தை எடுத்தோதுகிறது. முற்காலத்தில் இணுவில் மத்தியில் அமைந்த இணைந்த குளங்களால் நீர் பாய்ச்சப்பட்டு இப் பகுதியில் பருத்தி (அடைப்புக்களில்) விளைந்த பூமி இதுவாகும். இணுவில் கிராமத்தின் அன்றைய வனப்பினால் அமைந்த பருத்திச் செய்கையை இன்றும் நினைவூட்டும் சான்றாக இவ்வாலயம் “பருத்தி அடைப்புப் பிள்ளையார் கோயில்” என எம் மக்களால் போற்றப்படுகிறது.

சரித்திரப் பிரசித்தி பெற்ற வனப்புடன் கூடிய இவ்வாலயத்தை பண்டைய மக்கள் உள்ளன்போடு பூசித்து வந்தனர். இயற்கை அன்னையின் திருவருளும் செகராசசேகரப் பிள்ளையாரின் இறையருளும் நிறைந்ததால் இவ்வூர் மக்கள் அகப்பொலிவுடன் அறப்பணியாற்றி நற்பண்புடன் இனிதே வாழ்ந்தனர் . இதனால் சிவநெறியும் தமிழ் மரபும் மேலோங்கியிருந்தன. காலங்கள் கடந்தன. அந்நியராட்சியில் யாவும் சிதைந்தன. சைவமும் தமிழும் தடை செய்யப்பட்டபோது எம்மக்கள் அகத்தளவில் சிவநெறியைப் பேணினர்.

சைவத்தையும் தமிழையும் வளர்க்கவென அவதாரஞ் செய்த நாவலர் பெருமானிடம் பயின்ற இவ்வூர் சுப்பிரமணியம் சட்டம்பியார் நாவலர் பெருமானின் தூண்டுதலால் இவ்வாலயத்தின் தென் பகுதியில் அமைந்த திண்ணைப் பள்ளியை நடாத்தினார். இவர் மூலம் இணுவில் மேற்கில் சைவமும், தமிழும் வளர்ந்தன. இவரின் மருமகனான சங்கரப்பிள்ளை என்பவர் தமது இறைபக்தி மேலீட்டினால் சிறு குடிசையிலிருந்த இவ்வாலயத்தைப் பராமரித்து வந்தார். விவசாயியான சங்கரப்பிள்ளை தமது ஓய்வு நேரத்தில் இவ்வூரில் பிடியரிசி எடுத்து வந்து ஆலயத் திருப்பணியை மேற்கொண்டார்.

சிறு மண்குடிசை சுண்ணச்சாந்துக் கட்டடமாக மாறியது. இவ்வாலய வழிபாடும் மேம்பட்டது. சங்கரப்பிள்ளை தமது முதுமைக் காலத்தையும் நோக்காது தொடர்ந்து பிடியரிசி எடுத்துத்தள்ளாடும் வயதிலும் ஆலயப் பணியே தமது மூச்செனப் போற்றிப் பணியாற்றினார். வெள்ளை வைரக் கற்களால் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை நிறைவேறின. சங்கரப்பிள்ளையின் பணிச்சிறப்பால் கவரப்பட்ட அவரது மகன் சின்னத்துரையும் தம்பணி சிறக்க ஆலயப் பணியைச் சிறப்புடன் செயலாற்றினார். சின்னத்துரையின் மூத்தமகன் சுந்தரலிங்கம் தமது மூதாதையர் போற்றிப் பணிந்து வந்த ஆலயப் பணியைப் பொறுப் பேற்றார்.

தமது ஆன்மிக உணர்வினால் ஆலயப் பணிக்காகத் தமது முழு நேரத்தையும் அர்ப்பணித்தார். இதன் பேறாக அத்தியாவசிய கட்டுமானப் பணிகளைப் பொது மக்களின் உதவியுடன் நிறைவேற்றினார். தேர்த்திருவிழா உபய காரரான பண்டிதர் வித்துவான் சைவப் புலவரான திருநாவுக்கரசு என்பவர் தமது குடும்ப உறவினர்களினதும் நெருங்கிய நண்பர்களினதும் உதவியுடன் புதிய சித்திரத்தேரொன்றை அமைக்க உதவினார். இத்தேர் பாதுகாப்பான தேர்த் தரிப்பிட மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆலய அறங்காவலரின் அயராத முயற்சியால் ஆலயத் திருப்பணிகள் மேலோங்கவும் விநாயகப் பெருமானின் அடியார்களின் பக்தியும் மேம்பட்டது. ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் யாவரும் தவறாது காலையில் விசேட பொங்கலிட்டு எம்பெருமானின் விசேட பூசைகளிலும் வழிபாட்டிலும் இன்புறுகின்றனர். விநாயகப்பெருமானின் கருணையின் சிறப்பால் ஆலய ராஜகோபுர வேலை தொடங்கியது. நீடிய திட்டத்தில் எம்பெருமானுக்கு பஞ்சதளம் கொண்ட நெடிய கோபுரம் அமைந்து குட முழுக்கை யாவரும் கண்டு களிக்கும் பேற்றினையும் பெற்றனர்.

பண்டைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் வருடாந்தப் பெருவிழா சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தியில் கொடியேற்ற விழாவுடன் ஆரம்பிக்கிறது. பத்தாம் நாளான தேர்த்திருவிழா வெகு சிறப்பாக அமைகிறது. அடுத்த நாளான சித்திரைப் பூரணை தினத்தன்று தீர்த்த விழாவும் சிறப்புடன் நடைபெறுகின்றது. இவ்வாலயத்தின் பெருவிழாவினைத் தொடர்ந்து மாதந் தோறும் மாதப்பிறப்பன்று பொங்கல் பூசை யாவும் சிறப்பாக அமைகிறது. மேலும் வருடம் முழுவதும் சதுர்த்தி விழாவும் கார்த்திகையில் விநாயகர் விரத காலம் 21 நாளும் சிறப்பான பூசை விழாக்களும் இறுதி நாளன்று அதி விசேட விழாவும் விநாயகப் பெருமானின் வீதியுலாவும் நடைபெறும்.

மார்கழி மாதத்தில் திருவெம்பாவை உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாலய ஊஞ்சற் பாடலை தேர்த்திருவிழா உபயகாரர் பண்டிதர் இ.திருநாவுக்கரசு பாடி வைத்தார். பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் செகராசசேகரப்பிள்ளையார் பிள்ளைத்தமிழ் நூலை எழுதி ஆலயத்துக்காக அன்பளிப்புச் செய்தார். ஆலய நித்திய நைமித்திய பூசைகள் விழாக்கள் பெருவிழாக்கள் மற்றும் திருப்பணிகள், ஆலயத்தொண்டுகள் யாவும் ஆலய அறங்காவலரின் பேருதவியுடன் ஊர்ப் பொது மக்களே முன்னின்று சிறப்புடன் நிறைவேற்றுகின்றனர்.

செகராசசேகரப் பிள்ளையாரின் பேரருளால் அவரின் பக்தர் யாவரும் சைவமும் தமிழும் சிறக்கவும் வாழ்வாதாரம் சிறக்கவும் திருவும் கல்வியும் சகல சிறப்புகளும் பெற்று இனிது வாழ்கின்றனர். செகராசசேகரப் பிள்ளையாரின் மீதிருந்த எம் மக்களின் பக்தியும் பெருமானின் வற்றாத பெருங்கருணையும் மக்களின் இடையறாத பெருமுயற்சியும் ஒன்றுசேர பல சீரும் சிறக்கிறது. தம்மை வாழ வைக்கும் தெய்வத்தை மேலும் பூசிப்பதற்காக ஆலயத்தை அணி செய்யவும் திருப்பணிகளை நிறைவேற்றவும் எவரும் பின்நிற்பதில்லை.

இவ் ஆலயத்தின் தெற்கு வாசலில் அரியதோர் கோபுரத்தை அமைக்குமாறு எம்பெருமான் உணர்த்தியதால் அறங்காவலர் ஆலய தெற்கு வாசல் கோபுரத்தை 2011 இல் ஆரம்பித்து மூன்று தளத்தில் அமைத்துள்ளார். விநாயகப் பெருமான் தம் மக்களுக்கு அள்ளிக் கொடுத்ததை நன்றியாக ஏற்றே இக்கோபுரத் திருப்பணிக்கு யாவரும் தாராளமாகத் தந்துதவினர். 2012 இல் செகராசசேகரப் பிள்ளையாரின் பெருங் கருணையால் அவரின் தயவில் நல்வாழ்வு மேற்கொண்ட இவ்வூர் வாலிபர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் எம் பெருமானின் கருணையை வியந்து பாடலாக்கி ஒலிப்பதிவு நாடாவில் வெளியிட்டனர். இவ் ஒலிப்பதிவு நாடா எம்
மக்களின் இல்லங்கள் தோறும் அருள் நாதத்தை ஒலிக்க வைத்ததும் சரித்திரப் பிரசித்தி பெற்ற செகராசசேகரப் பிள்ளையாரின் அற்புதமேயாகும்.

இப்புதுமை மிகு விநாயகப் பெருமானின் ஆலயச் சிறப்பு நோக்கி பக்தர்கள் எம்பெருமான் உலாவருவதற்கென அழகிய திருச்சப்பறமொன்றை உருவாக்கியுள்ளனர். இச்சிறப்பை நோக்கினால் கோபுரங்களின் அமைப்புகளுள்ள பெருவிழாக்காணும் இணுவில் திருவூரின் நான்கு திருத்தலங்களிலும் தெய்வங்களின் அருள்மிகு ஊர்வலச் சிறப்புக்கான சிறப்பான சப்பறங்கள் அமைந்ததும் இறையருளேயாகும்.

மேலும் இவ்வருட (2013) தேர்த்திருவிழாவின்போது முருகப் பெருமானின் ஊர்வலத்துக்கான சித்திரத் தேரொன்றை தேர்த்திருவிழா உபயஞ் செய்து வந்த பண்டிதர் இ.திருநாவுக்கரசுவின் குடும்பத்தினர் உபயமளித்துள்ளனர். அருள்மிகு கணபதியின் சிறப்பு மேலும் இணுவை மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென உள்ளன்போடு பூசைப் பணிகளைச் சிறப்புடன் நடாத்தும் பிரதம சிவாச்சாரிய குருக்களின் பணிச் சிறப்பே. இவ்வாலயத்தின் இன்றைய சிறப்புகளுக்கு உதவ எம் பெருமான் அருள் பாலிக்கிறார்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?