பொது அமைப்புக்கள்

இணுவில் திருநெறிய தமிழ்மறைக் கழகம்

இணுவில் திருவூரின் ஆலயங்கள் யாவும் அருள்வளம் சுரப்பதால் இணுவையூர் மக்கள் யாவரும் நியமந் தவறாது ஆலய தரிசனஞ் செய்து மனநிறைவடைகின்றனர். இவ்வாறு வழிபடுவோருள் தத்தமது சூழலிலுள்ள தெய்வங்களின் மீதுள்ள பற்றுறுதியால் அவ்வாலயங்களில் தம்மாலியன்ற தொண்டுகளைச் செய்வதில் வியப்பில்லை. இணுவில் தெற்கிலமைந்த சரித்திரப் பிரசித்தி பெற்றதும் பல அற்புதங்களைப் புரிந்ததுமான பரராசசேகரப்பிள்ளையார் ஆலயத்தின் சூழலில் எழுபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நான்கு தொண்டர்கள் இச் சூழலில் பிடியரிசி எடுத்து ஆலய வளர்ச்சிக்கு உதவினர்.

அன்று முதல் விநாயகரின் அருட்பார்வை எம் மக்கள் மீது கிடைத்ததால் ஆலய வளர்ச்சி மேலோங்கியது. தொண்டர்கள் பணியும் வாழையடி வாழையாக வளர்ந்து பக்தி நெறி குன்றாத ஊர் நன்மைக்கான பொதுப்பணிகளும் நடைபெற்றன. ஆலய தரிசனைக்கு வரும் முதியோரும் சிறார்களும் பாடித் துதிக்கவும், தூய சைவநெறி பேணவும் ஆலயத் தொண்டுகள் புரியவும் முன்வரும் பக்தர்களை நெறிப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டது.

அச் சிந்தனையைக் கருத்திற் கொண்ட இவ்வூர் கல்விமான்களும் சைவப் பெரியார்களுமான பண்டிதர் சபாஆனந்தர், வை.கதிர்காமநாதன் (தம்பி வாத்தியார்) கலைஞானி வீரமணி ஐயர் மா.ஆனந்தர் ஆகிய நால்வரின் சிந்தனையில் உதித்த செயல் வடிவமே இன்றைய திருநெறிய தமிழ்மறைக் கழகமாகும். 1991இல் இப்பெரியார்கள் இவ்வாலய தரிசனையில் ஆழ்ந்த பக்தியால் சைவமும் தமிழும் தமது மூச்சென வாழ்ந்த வயது அறுபது வந்த இவ்வூர் பண்டிதர் நா.இராசையா, சோ.பரமசாமி, மா.இராசரத்தினம் ஆகியோருடன் முற்கூறிய பெரியார்கள் தமது சிந்தனையைப் பகிர்ந்தனர்.

அதன் பேறாக 1991இல் பரராசசேகரப் பிள்ளையாரின் ஆலய முன்றலிற் கூடிய மக்களிடையே ‘திருநெறிய தமிழ்மறைக் கழகம்’ என்னும் பெயரில் ஒரு நிறுவனம் உருவானது. சைவப் பெரியார்களான பண்டிதர் சபா.ஆனந்தர், வை.கதிர்காமநாதன், வீரமணி ஐயர் ஆகியோரைக் காப்பாளராகக் கொண்டு பண்டிதர் இராசையா தலைவராகவும் சோ.பரமசாமி ஐயர் செயலாளராகவும், மா.இராசரத்தினம் பொருளாளராகவும் மேலும் சிலர் உறுப்பினராகவும் கொண்ட சபை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

இக்கழகத்தினருள் துடிப்பு மிக்க தொண்டரான மா.இராசரத்தினத்தின் பெருமுயற்சியால் ஆலய முன்றலில் மாதங்கள் தோறும் கழகக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. கழகத்தின் நோக்கம் இத்திருவூரில் வாழும் அனைவரும் சைவமும் தமிழும் துலங்க ஆலய தரிசனை, திருமுறை ஓதுதல், நற்கல்வி, நற்பண்பு, கீழ்ப்படிவு, பெரியோரை மதித்தல், ஒரு சபை நடுவே மேடைக் கூச்சமின்றிப் பேசவும், திருமுறைகளைப் பிழையின்றி அட்சர சுத்தியோடு இனிமையாகப் பாடவும், பாலர் முதல் மாணவர், மாணவிகள் மற்றும் வளர்ந்த வாலிபர், யுவதிகளை நெறிப்படுத்தி மேலோங்கச் செய்வதுமே திருநெறிய தமிழ்மறைக் கழகத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்பட்டது.

சிறுவர் முதல் முதியோர் வரை இக்கழகத்தின் நோக்கங்களுக்கு நல்லாதரவு தந்தனர்.

வகுப்புகள்

இதன் பேறாக இவ்வூரில் வாழ்ந்த ஆன்மிகநெறியுடன் கற்பிக்கும் ஆசிரியர்களான திருமதி அன்னலட்சுமி சின்னராசா, திருமதி பராசக்தி சந்திரசேகரி, திருமதி வை.கணேசபிள்ளை, திருமதி சோமநாதன் ஆகியோர் சைவமும் தமிழும் போதிக்க முன்வந்தனர். ஆரம்ப காலத்திலிருந்தே இராசரத்தினம் ஆசிரியர் பண்ணிசை வகுப்பை நடாத்தினார். தொடர்ந்து பலர் பண்ணிசை வகுப்பை இன்றுவரை நடாத்தி வருகின்றனர்.

பிள்ளைகள் கிரமமாக வகுப்புக்களைக் கற்கவும், சமய அறிவு, பண்ணிசை மற்றும் கலை அறிவுப் போட்டிகளிற் பங்கு பற்றவும் ஆர்வங் கொண்டனர். யுத்த நெருக்கடிகள், காலநிலை மாற்றங்கள் இடையிடையே ஆசிரியர்கள் மாறவும் வெவ்வேறு ஆசிரியர்கள் மூலம் போதிக்கப்பட்டும் வகுப்புக்கள் தொடர்ந்தன.

இதர பணிகள்

ஆலய வழிபாட்டுடன் அன்றைய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக இராசரத்தினம் ஆசிரியரின் ஏற்பாட்டில் செல்வி மீனாட்சி, திரு.தங்கராசா ஆகியோரால் ஆலய முன் மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. கற்கும் மாணவர்களுக்கு வருடாந்தம் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்து முதற்பரிசாக தங்கப் பதக்கமும் வேறு தரமான பரிசில்களும் வழங்கப்பட்டன.

திருமறைக் கழகத்தின் பேராதரவில் வருடந்தோறும் விழாக்கள் நடாத்தி மக்களை உற்சாகப்படுத்தினர். இவர்களால் வருடந்தோறும் சிவராத்திரி, நவராத்திரி, திருவாசக முற்றோதல் போன்ற விழாக்கள் நடாத்தவும் இறையருள் பாலித்தது. சுருங்கக் கூறின் இணுவில் திருநெறிய தமிழ்மறைக் கழகம் தனது அயராத முயற்சியால் இணுவில் தெற்கில் வாழும் மக்களின் சமய, சமூக, கலைப் பணிக்கு வித்தாக அமையவும் இச்சூழலில் ஒரு அறநெறிப் பாடசாலையை அமைக்கவும் முடிந்தது.

இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை

நாட்டில் ஏற்பட்ட யுத்தகால நெருக்கடிகள் காரணமாக எமது தமிழ் மண்ணில் ஏற்பட்ட தடைகள் காரணமாக சமய வழிபாடுகள் யாவும் பின்னடைவு ஏற்பட்டது. 1996இன் பிற்பகுதியில் சமய வகுப்புகள் தொடரவும் அறப்பணிகள் மலரவும் ஏதுவானது. இக்காலத்தில் திருநெறிய தமிழ்மறைக் கழகத்தின் ஆதரவில் பரராசசேகரப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை ஆரம்பமானது. இப்பாடசாலை ஆரம்பிப்பதற்கு மா.இராசரத்தினம் ஆசிரியர் பெருமுயற்சி எடுத்தார்.

பிள்ளைகள் அறநெறிப் பாடசாலைக்கு வரத் தயங்கினர். இராசரத்தினம் ஆசிரியர் வீடு வீடாகச் சென்று மாணவர்களை அழைத்து வந்து அறநெறிப் பாடசாலை வகுப்புகளை நடாத்தினார்.

அறநெறிப் பாடசாலையின் சிறப்பு

அறநெறிப் பாடசாலையில் பண்ணிசையை இராசரத்தினம் ஓதுவித்தார். திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை சமய பாடத்துடன் ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நீதிக்கதைகள் போன்ற பல நற்போதனைகளைப் போதிக்க முன் வந்தார்.

இவருக்கு உறுதுணையாக திருமதி. அன்னலட்சுமி சின்னராசா, திருமதி. பராசக்தி சந்திரசேகரி, திருமதி. சின்னம்மா போன்ற பல ஆசிரியைகள் விருப்புடன் போதித்தனர். மேலும் பலர் அறக்கல்வியுடன் சிவப்பணிகளான மாலை கட்டுதல், கோலம் போடுதல் போன்றவற்றையும், நல்லொழுக்கம் நற்பண்புகளையும் போதித்தனர்.

வருடா வருடம் பரராசசேகரப் பிள்ளையார் ஆலயப் பெருவிழாவை யொட்டிச் சமய வகுப்புகளுக்கான அறிவுப் போட்டி, மனனப் போட்டி, கலை வகுப்புகளுக்கான போட்டி போன்ற பல முன்னேற்றங்களுக்கும் தங்கப் பதக்கம் உட்பட சிறப்பான பரிசில்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த மாணவர்கள் வருடாவருடம் இந்து சமய கலாசாரத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் சமய அறிவுப் பரீட்சைகளிற் தோற்றி மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களிலும் பரிசில்களை வென்றனர்.

மேலும் இந்து கலாசாரத் திணைக்கள யாழ் மாவட்ட மட்டத்தில், நல்லூர் ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், நல்லூர் கந்தசுவாமி கோயில் பெருவிழாக் காலக் கலை நிகழ்வுக்காக மாணவர்களை அழைத்துச் சென்று சிறப்பான கலைவிழாவில் பங்கு பற்றி நன்மதிப்பைப் பெறுகின்றனர். இந்து கலாசாரத் திணைக்களத்தினால் மாணவர்களுக்கான சீருடை, சமயப் புத்தகங்கள், உபகரணங்கள், ஆசிரியைகளுக்கான சீருடை, வருடம் ஒருமுறை உதவு தொகையாக இரண்டாயிரம் ரூபா மற்றும் பாடசாலைத் தளபாட உதவுதொகையாகவும் வழங்கப்படுகின்றன.

இங்கு கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு திருநெறிய தமிழ் மறைக்கழக மூலம் பொதுமக்களின் அன்பளிப்புகள் அறநெறிப் பாடசாலை வளர்ச்சிக்கு உதவுகிறது. இணுவில் திருவூரின் அறநெறிக்கல்வி மூலம் சமய மரபைப் பேணும் மூன்று பிரதான இந்து நிறுவனமாகப் பணியாற்றும் மூன்று நிறுவனங்களும் திருநெறிய தமிழ் மறைக் கழகமும் ஒன்றாக அமைந்து அரும்பணியாற்றுகிறது.

இன்று பரராசசேகரப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலையை ஆரம்ப கால உறுப்பினரும் அறக்கல்வியை இன்றுவரை போதிக்கும் கலாபூஷணம் திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை இவ்வறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியராக இருந்து மாணவர்களை நெறிப்படுத்துவதால் இங்கு கற்கும் பிள்ளைகளும் சிறப்பாகத் திகழ்கின்றனர்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?