பொது அமைப்புக்கள்

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்

இணுவில் தெற்கு பரராசசேகரப் பிள்ளையார் கோயிலின் தெற்குப் பகுதியில் (இன்று திருமண மண்டபம் இருக்கும் இடத்தில்) கிழக்குப் பகுதியில் 1948 ஆம் ஆண்டு ஒரு குடிசை அமைத்துக் கணேசா வாசிகசாலை என்னும் பெயருடன் இயங்கியது. அக்காலத்துப் பெரியார்களினுதவியுடன் இயங்கிய இந்த வாசிகசாலை மூலம் பொது மக்களின் நாளாந்தத் தகவல்கள் அறியும் வாய்ப்பு இருந்தது. நாளேடுகள் இவ்வூர் அன்பர்கள் சிலரின் உதவியுடனும் பிற்காலத்தில் உடுவில் கிராமசபையின் சிறு நன்கொடை உதவியுடனும் வாசிகசாலை இயங்கியது.

1984இல் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலின் தெற்கு வீதியிலிருந்த இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை இணுவில் இந்துக் கல்லூரியின் வளாகத்திற்கு இடம்மாற்றி அவ்விடத்தில் திருமண மண்டபம் அமைக்க இருந்ததால் கணேச வாசிகசாலையும் அவ்விடமிருந்து இடம் மாறவேண்டியிருந்தது. உரிய இடம் கிடைக்காததால் இவ்வாசிகசாலை நடமாடும் நிலையமாக சில வருடங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சில வருடங்களின் பின் தற்போதைய அமைவிடத்தில் பொது நூலக அமைப்புடன் கணேசா வாசிகசாலையின் பணிகளும் தொடர்ந்தன. இணுவில் தெற்கு வாழ் மக்களின் அன்றாட தகவல்கள் மட்டுமன்றி பொதுவான நூலறிவை யாவரும் அனுபவிக்க வேண்டி இறையருளும், நூலக சேவையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த இவ்வூர் இளைஞர்களின் விடாமுயற்சியும் அவர்களுக்கு உதவுகரந் தந்து உற்சாகப்படுத்திய பொதுமக்களும் இவர்களின் வேண்டுதலுக்கு ஏற்றவாறு கைகொடுத்தனர்.

உள்ளூர், வெளிமாவட்ட வர்த்தப் பிரமுகர்களும் பொதுநல சேவையை ஊக்குவிக்கும் கால நேரமும் கைகூட இன்றைய அமைவிடத்தில் இணுவில் பொது நூலகம் உதயமானது. இதனைச் செயற்படுத்தும் நிர்வாக உறுப்பினர்கள் இவ்வூர் மற்றும் அயலூர் மக்களும் கற்றுணர வேண்டுமென்ற அயராத பெருமுயற்சியால் பொதுப் பணிச்சேவையில் பொது நூலகம் வளரத் தொடங்கியது.

கல்லூரி மாணவர்கள் கற்கைநெறியை விரும்பும் சமூகத்தினர் யாவரும் தமது ஆவலைப் பூர்த்தி செய்யும் பேரில் வாசகர்களின் வரவும் கூடியது. இதனால் பொதுநூலகம் விரிவடைய வேண்டிய தேவை ஏற்பட்டது. எம்மவரின் தேவையை உணர்ந்த் இவ்வூரிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரும் கற்றல்
வசதிக்கெனத் தாராளமாக உதவினர்.

இந்த நூலகத்தின் தென்பகுதியில் இணைந்த காணியை விலையாக வாங்கி கட்டடப் பணி தொடர்ந்தது. இதன் பேறாக சிறுவர்களின் தேவை கருதி முன்பள்ளி, சிறுவர் பூங்கா, சிறுவர் நூலகப் பணியாவும் உதயமானது. வருடா வருடம் நடைபெறும் விழாக்களில் தமது வரவுகளையும் அதன் வரவால் அமைந்த அபிவிருத்தியையும் தம்மை எதிர்நோக்கும் அவசியத் தேவைகளையும் தவறாது தெரிவிப்பதால் முன்னர் வழங்கியவர்களே வாரி வழங்கினர். பொது நூலகமும் வளரத் தொடங்கியது.

தற்போது சிறுவர் பாடசாலைக்கு தனியாக காணி வாங்கி கட்டடம் அமைத்து அதனோடு சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

நூலக வசதிகள்

நூலக உறுப்பினர்களின் அயராத பணியினால் கருத்தரங்கு மண்டபம், கலாசார மண்டபம், சிறுவர் மண்டபம், சிறுவர் பூங்கா, கணினிப்பிரிவு மற்றும் சர்வதேச தொலைக்காட்சிப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளன. கணேசா வாசிகசாலை இன்று இணுவில் பொது சனசமூக நூலகமென்னும் பெயருடன் சிறுவர் பாடசாலையுடனான பல வசதிகளுடன் இயங்குகிறது.

இவர்கள் தமது தேவைகளைத் தாம் ஆரம்பித்து வைத்த சர்வதேச வலைப்பின்னல் ஊடாக தமது அபிவிருத்தியையும் சிறுவர்களின் முன்னேற்றம் வாசகர்களின் கூடிய வரவு யாவற்றையும் வெளிப்படுத்துவதால் புலம்பெயர்ந்து உலகளாவிய ரீதியில் வாழும் எம்மூரவர்கள் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முடிகிறது.

இவர்களின் பெருமுயற்சியின் பேறாக புராண, இதிகாச, வரலாற்று நூல்கள் மற்றும் பல்வேறு வகையான நூல்கள் மற்றும் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்ட இந்திய மற்றும் நாடுகளின் சஞ்சிகைகள், சிறுவர்களுக்கான சிறுகதை, கவிதை நூல்கள் போன்ற பலவித நூல்கள், கற்றல் உபகரணங்கள், யாவும் கிடைக்கப் பெற்றுள்ளன.

மாணவர்களுக்கான தொலைத் தொடர்புச் சாதனங்கள் மற்றும் கணினிப் படிப்புகளும் நடைபெறுகின்றன. மாணவர்கள் மட்டுமன்றி வயது வந்தோரும் காலை ஏழு மணிமுதல் இரவு பத்து மணிவரை திறந்திருப்பதால் தமது வாசிப்பைத் தொடரலாம்.

இப்பொது நூலகம் பரராசசேகரப் பிள்ளையாரின் பேரருளால் நூலக நிர்வாக உறுப்பினரின் விடா முயற்சியும் உதவி வழங்குவோரின் நல்லாதரவும் கிடைப்பதால் பல உறுப்பினரின் வேண்டுதலுக்கேற்ப இரவல் வழங்கும் நூல்களுக்கும் ஆய்வு சம்பந்தமான பணிகளுக்கும் நல்லாதரவு தருவதுடன் இதன் அங்கமான முன்பள்ளிகற்கை நெறியும் தொடர்ந்து படிக்கும் சிறுவர்
நூலகப் பிரிவும் சிறப்பானது.

இதன் ஆரம்பமான கணேசாவாசிகசாலை இணுவையூரின் ஏனைய வாசிகசாலைகளைப் போல நீடிய காலச் சேவை செய்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சனசமூகநிலையம் என்ற வகையில் பொதுமக்கள் எவரும் எந்த நேரமும் கட்டணமேதுமின்றி உள்ளூர் கொழும்பு புதினப் பத்திரிகைகள் (நாளேடுகள், வாரமலர்கள், ஆங்கில ஏடுகள் வரை) பார்க்கும் வசதியும் கிடைக்கிறது.

இப்பொழுது நூலகத்தினர் நூலக சேவை மற்றும் தகவல் துறை சேவையுடன் வெளிக்கள வேலையாகச் சிரமதானம் மற்றும் பொது வேலைகள் செய்வது பாராட்டக்கூடியதாகும். இவர்களால் ஆரம்பிக்கப்பட்டுச் சிறந்த சேவை செய்யும் கணினியிற் கல்வியால் பல மாணவர் சிறப்படைவதும் இன்றைய காலத்தின் தேவையுணர்ந்து செயற்படும் நற்பணியுமாகின்றது.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?