ஆலயங்கள்

இணுவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயம் ( காரைக்கால் சிவன் கோவில்)

சரித்திரப் பிரசித்தி பெற்றதும் வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டதுமான இச்சிவாலயம் காலத்தால் முந்தியது. இணுவில் கிழக்கு, கோண்டாவில் வடக்கு, உரும்பிராய் தென்மேற்கு ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரு நிலப்பரப்பில் அமைந்த புண்ணிய பூமி காரைக்கால் என வழங்கப்பட்டது. இங்கு அமைந்த சிவாலயமும் ஆலயத்தின் தென்கிழக்கெல்லையில் அமைந்த உருத்திர தாண்டவ பூமியான காரைக்கால் மயானமும் சிவபூமியாகவே திகழ்கின்றன. இந்தியத் திருநகரான காசியில் விசுவநாதப் பெருமான் விசாலாட்சி அம்பாள் அதனருகேயுள்ள மயானம் போன்ற பல சிறப்புக்களையும் கொண்டதாகவே இவ்வாலயமும் அமைந்துள்ளமை இம்மண்ணின் பெருமையைத் துலக்குகிறது.

இவ்வாலயத்தின் கருவறையில் மேற்கு நோக்கியிருக்கும் பெருமான் பஞ்சலிங்க அமைப்பாகவே நிறுவப்பட்டுள்ளது. வேறெங்கும் காண முடியாத இப்பஞ்சலிங்கத் தோற்றம் ஐந்தடி உயரமும் பரந்த சுற்றளவும் கொண்ட கருங்கற் சிலையாகவே அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படாத இத் தோற்றம் இந்தியாவில் வேறிரு இடங்களில் மட்டும் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2010 ஆம் வருடம் இவ்வூரில் வருகை தந்து இவ்வாலய மண்ணிற் தமது கால் பதித்து இவ்வாலயச் சூழலை மேலும் புனிதமாக்கிய தருமபுரி ஆதீனத்தைச்சேர்ந்த முனைவர் ஸ்ரீமத் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் இச்சிவாலயத்தை நன்கு தரிசித்த பின் ஆலயத்திலமைந்த பஞ்சலிங்க மூர்த்தத்தையும் ஆலய அமைப்பு முறையையும் நன்கு அவதானித்த பின் பின்வருமாறு கூறினார்.

“இச்சிலையானது மிக அற்புதமானது. வெகு அரிதாகவே இது போன்ற உருவ அமைப்புத் தரிசிக்க முடிந்தது என்றும் இப்பிரதேசத்தின் சிறப்புக்கு இச்சோலை நடுவே அமைந்துள்ள ஆலயத்தின் கருவறையில் எழுந்தருளியிருக்கும் பஞ்சலிங்கத் திருமேனியே காரணமாக அமைந்துள்ளது” என்றும் வியந்தார். இவ்வாலயத்தின் பரிவார மூர்த்தங்களாக ஏற்கனவே அமையப் பெற்ற மாரியம்பாளும் வைரவரும் புதுமையும் அற்புதங்களும் நிறைந்த தெய்வங்களாகவே காணப்படுகின்றன. இச்சிறப்பான சிவாலயத்தின் கருணையால் பற் பல அற்புதங்கள் அன்று முதல் இன்று வரை நடந்தவற்றை நோக்குவோம்.

குலோத்துங்க சோழனின் படைத் தளபதியான கருணாகரத் தொண்டமான் யாழ்ப்பாணத்திலிருந்தபோது இப் பகுதியின் சிறப்பையறிந்து இங்கு வந்து தங்கி இவ்வாலயத்தையும் தரிசித்தான் எனச் சான்றுகள் பகர்கின்றன. காலப்போக்கில் இச்சூழல் மரஞ்செடி கொடிகளால் மூடப்பட்டும் கருவறையைச் சுற்றி விசப்பாம்புகள் புற்றெடுத்துக் குடி கொண்டதால் இவ்வாலயம் மேவப்பட்டும் இருந்தது.

பெரிய சந்நியாசியார்

1860 இல் இணுவில் கிழக்கில் அவதரித்த சுப்பிரமணியம் என்னும் விவசாய வாலிபன் தமது குடும்ப ஆநிரைகளை இச்சூழலில் மேய்த்து வந்தார். அவருக்குரிய மதிய உணவை அவரது தாயார் தலையில் சுமந்து கொண்டு வந்து தருவார். ஒரு நாள் மாரியம்பாளின் திருவிளையாடலினால் தாயார் மகனின் மதிய உணவை உரிய நேரத்துக்குக் கொண்டு வரவில்லை. பசியால் வாடிய சுப்பிரமணியம் மாரியம்பாளின் சூழலிலுள்ள மர நிழலில் உறங்கிவிட்டார். தன்பிள்ளை பசியால் உறங்கியதை அறிந்த மாரியம்பாள் தானே அவரின் தாயின் உருவத்தில் நேரில் வந்து ஞானம் கலந்த திருவமுதான மதிய உணவைத் தந்து உண்ண வைத்ததும் மறைந்து விட்டார்.

அன்னை முத்துமாரியின் திருவமுதில் கலந்த ஞானம் சுப்பிரமணியத்தைச் சித்தராக்கியது. யாவரும் வியக்க வைக்கும் அருட் பணிகளைத் தமது சித்து மகிமையால் செய்த பெருமை இச்சிவாலயத்துக்கே சேரும். பெருஞ்சித்தரான சுப்பிரமணியத்துக்கு இறைபணிகள் பல உற்சாகமூட்டின. முதலில் இச் சிவாலயத்தை யாவரும் வழிபடும் வண்ணம் புனிதமாக்க முன்வந்தார். பெருஞ்சித்தரின் பெருமையை அறிந்து ஊர் மக்கள் திரண்டு வந்து அவர் தம் பணிக்கு உடலால், பொருளால், உள்ளத்தால் உதவ முன் வந்தனர்.

அவர் இட்ட பணிகளை மன எழுச்சியுடன் ஏற்று நிறைவேற்றினர். ஆலயமும் சூழலும் பரிசுத்தமாகப் பிரகாசித்தது. ஆலயப் பூசை வழிபாடுகள் மேம்பட்டன. ஆலயச் சூழல் பசுமையாக அமைய வேண்டுமென்ற தூய சிந்தனையுடன் நறுங்கனி தரும் மரங்கள், மூலிகை மரங்கள், தெய்வீக மரங்கள், நற்பயன் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் யாவும் உட்பட 1008 மரங்களை நாட்டினார். மரங்களுக்கு நீருற்றவும் கால்நடைகளின் குடிநீருக்குமாக இரு கிணறுகளையும் ஐந்து திருக்குளங்களையும் கொண்ட ஏழு புனித நீர்நிலைகளைத் தோண்டு வித்தார்.

பெரியாரின் தூய சிந்தனைக் கேற்ப யாவும் ஓங்கி வளர்ந்து சோலை வனமாக மாறியது. குறுகிய காலத்தில் மரங்கள் பெரியவரான சந்நியாசியார் தம்மை நாடி வருபவர்களுக்கு மணி மந்திரமோதித் திருநீறிட்டு உடல் உளப் பிணிகளை அகற்றினார். மூலிகை மரங்கள், செடிகளின் இலை, பூ, காய், வேர், பட்டை போன்றவற்றின் உதவியுடன் சுதேச வைத்தியமும் இலவசமாகவே செய்து அரும்பணியாற்றினார். அக்காலத்தில் தமது ஆலய வழிபாட்டுடன் தொண்டுகள் புரியும் அருளாளர்களுக்குப் பசிதீர அன்னதானமுஞ் செய்தார்.

இவரால் தொடரப்பட்ட அன்னதானப் பணி இன்றுவரை இவ்வூரில் நிலைத்துள்ளது. சைவசமய வழிபாட்டுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே அறப்பணியை நிலைநாட்டும் உறவுப்பாலமாகவே இப்பெரிய சந்நியாசியாராகிய பெருஞ்சித்தர் அமைந்தார். ஊர் சிறக்க நாடு போற்ற அறப்பணிகள் தொடர நாட்டிலே சாந்தியும் அமைதியும் இறையுணர்வும் சிறப்புற வைத்த பெரியார் தமது குறித்த கால நேரத்தில் சமாதியடைந்தார். இவரின் பின் இவ் ஆலயம் எவரும் பிரவேசிக்க முடியாதவாறு பல புறச்சூழல்களாலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

மூல மூர்த்தி

சித்தர்களின் நாட்டம்

இறையருளையே தமது மேன்மையான கொள்கையாகக் கொண்டு மண்ணில் அவதரித்த சித்தர்களும் ஞானிகளும் நாடு நலம் பெறும் வகையில் காரைக்காலை மையமாகக் கொண்டு ஓரணியாகக் கூடினர். இவர்களுள் நயினை முத்துக்குமார சுவாமிகள், வடிவேல் சுவாமிகள், யோகர் சுவாமிகள், கோண்டாவில் குறுமுனியான முதுபெரும் அம்பலவாணர் சுவாமிகள், கந்தையா (குடைச்) சுவாமிகள் உள்ளிட்ட அநேக பெரியவர்கள் இச்சிவாலயத்தில் எதிர்கால நன்மை கருதிப் பிரார்த்தித்தனர்.

இவர்களுள் வடிவேல் சுவாமிகளும் முத்துக்குமார சுவாமிகளும் கூடிய சிரத்தையுடன் ஆலயப் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். உரிய கால நேரம் வரவும் இச்சூழலைச் சேர்ந்த கிராமத்திலுள்ள தொண்டர்களும் தம்மை அர்ப்பணித்து வெற்றி கண்டனர். இக் காலத்தில் ஆலய எதிர்காலத்தை நோக்கிய கொக்குவில் சுதேச வைத்தியர் நடராசபிள்ளையும் சேர்ந்து இறைவனைப் பிரார்த்தித்தனர். நடராசபிள்ளை இறையருளால் தன் கனவிற் தோன்றிய அம்பலவாணர் என்பவரைத் தேர்ந்தெடுத்து தமது சீடனாக ஏற்று நற்சிந்தனையை உருவாக்கினார் .

அம்பலவாணர் தமது குருவிடம் சுதேச வைத்தியம், விஷக்கடி வைத்தியம், உள நோயாளிகளுக்கான சிகிச்சை முறை, பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை முறை, ஆலய பரிபாலனம் வழிபடுமுறை, மணிமந்திரமோதி திரு நீறிடல் போன்ற பல ஆற்றல்களையும் இலகுவில்
கற்றுக்கொண்டார்.

அம்பலவாணரின் சிறப்புகள்

அம்பலவாணர் தமது பொறுப்புகளை ஏற்கும் நேரம் வந்ததும் உள்ளூர் அடியார்கள் பலர் அவருக்குப் பலவாறு உதவியளித்து உயர்வடைய ஊக்கமளித்தனர். இவர் இவ்வாயலத்தில் அமைந்துள்ள வைரவப் பெருமான் மீது தணியாத பக்தி பூண்டு தமக்கு வேண்டிய யாவற்றையும் தருமாறு பிரார்த்தித்து ஆசி பெற்றே எக்காரியத்தையும் செய்யத் தொடங்குவார். ஆலய முன்னேற்றத்தைச் சிறப்புடன் செய்வதற்காக பெரிய சந்நியாசியாரால் நாட்டப்பட்ட மரங்கள், நீர் நிலைகள், ஆலய நிர்வாகம் யாவற்றையும் நன்கு பேணி வந்தார். இவற்றின் பாதுகாப்பின் பேரில் மரங்களில் ஒரு கிளையையேனும் எவரும் தறிக்க அனுமதிக்காது தமது கண் எனப் போற்றி வந்தார்.

ஆலய பூசை வழிபாடுகளை அம்பலவாணர் சுவாமிகள் மெய்யன்பர்களாலும் ஊர் மக்களாலும் கிடைத்த நல்லாதரவினால் நடாத்தி வந்தார். “அன்பே சிவம்” எனவும் “மக்கள் சேவை மகேஸ்வரன் சேவை” என்னும் தாரக மந்திரங்களுக்கேற்ப தன்னை நாடி வருபவர்களின் துயர் துடைத்து மகிழ்வித்தார். மணி மந்திரமோதி திருநீறிட்டு வைரவர் ஆலய வாசலில் அமர்ந்து நல்வாக்குரைத்து உடல், உளப் பிணியை நீக்கினார். இறையருளினாலும் கற்ற சுதேச வைத்தியப் பயிற்சியின் அனுபவத்தினாலும் எவரும் மாற்ற முடியாத தீராத நோய்களையும் தீர்த்து வைத்தார்.

இப்பணிக்கென எவரிடமும் ஏதும் பெறாது இலவசமாகவே செய்து வந்தார். இதனால் சுவாமிகள் ஆதரிக்கும் சிவாலயப் பணிக்கான நிதியம் சேர்ந்தது. இவரின் வைத்தியத் திறமையும் ஆலய அருளாட்சியும் வேறூர் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. இதனால் காரைக்கால் சிவன் ஆலயச் சூழல் சுதேச வைத்தியத்திற்கு நற் பெயரை ஏற்படுத்தியது.

ஆலய அபிவிருத்தி

பொது மக்கள் பலரின் வேண்டுதலுக்கமைய இவ்வாலயம் புனர்நிர்மாண வேலையை ஆரம்பித்தார். ஆலயத்திருப்பணி இறையருளாலும் அன்பர்கள், ஆதரவாளர்களாலும் மேலோங்கியது. ஆலயக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன வெள்ளை வைரக் கற்களால் அமைக்கப்பட்டன. உள் வீதியில் விநாயகர், முருகன், நவகோள் நாயகர்களுக்கான தனியான ஆலயங்கள் மற்றும் யாகசாலை, வசந்தமண்டபம், மணிக்கோபுரம் யாவும் அமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த மாரியம்பாள், வைரவர் ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன. 1969 இல் கொடித்தம்பம் நிறுவப்பட்டு பன்னிரு நாட்கள் பெருவிழாவும் ஏற்படுத்தப்பட்டன.

ஆடி மாதப் பூரணை தினத்தன்று தீர்த்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறும். மறுநாள் விசாலாட்சி சமேத விஸ்வநாதரின் திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடைபெறும். பொது மக்களின் அன்பளிப்பாக ஆலய வீதியுலாவுக்கான வாகனங்களும் தரப்பட்டன. கட்டுத் தேரில் எம்பெருமானின் வீதியுலாச் சிறப்புடன் நடைபெற்றன. இவ்விழாக் காலங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு நிறைவான அன்னதானமும் நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை மாலை வேளையிலும் சில குறிப்பிட்ட நாட்களிலும் அன்னதானம் நடைபெற்றன.

ஆலய விழாக் காலங்களில் விசேட மங்கல வாத்தியங்களும் பண்ணிசை சொற்பொழிவுகளும் நடந்து ஆலய விழாவை அலங்கரித்தன.  இவ்வாலய அறப்பணியாளர்களின் வேண்டுதலை ஏற்ற ஆறு.திருமுருகன் அவர்கள் ஒரு பெரு விழாக்காலம் முழுவதும் (பத்து நாட்கள்) மாலை நேரத்தில் தொடர் சொற்பொழி வாற்றினார். இவ்வாலயத்தில் தமது சமயத் தொடர் சொற்பொழிவின் கன்னி முயற்சியில் சொல்லழகும் சொல்லலங்காரமும் சொற்பொருளும் கேட்க வந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. அவரின் சிறப்பை நோக்கிய ஆலய சமூகத்தினர் “செஞ்சொற்செல்வர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தனர்.

அவரின் சொற்பொழிவு பாரெல்லாம் பரந்து புகழ் பெற்றாலும் இன்று வரை “செஞ்சொற்செல்வர்” என்ற பட்டத்தைத் தமதாக்கிக் கொண்டார். இச்சிறப்பும் இவ்வாலயத்தின் பெருமையாகும். இவ் வாலயத்தின் சமய மேம்பாடு காரைக்கால் அம்பலவாணர் சுவாமியாரின் அரவணைப்பால் யாவரும் போற்றும் வண்ணம் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாலயத்தின் பிரதோச விழா வைபவம் வருடம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஒரு சிவாலயத்தால் நடாத்தப்படும் எல்லா வைபவங்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றன.

சிவனுக்குரிய சிறப்பான சிவராத்திரி விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நாலு சாமப் பூசை சமய வேதங்கள், திருமுறைகள் ஓதுதல், சிவ வழிபாட்டுக்குரிய சிறுவர் கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பரிசளிப்பு யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்பலவாணர் சுவாமியார் தமது வாழ்வில் முப்பது வருடங்களுக்கு மேலாக அரிய சிறப்புப் பணிகள் ஆற்றி ஆலயத்தையும் பிரகாசிக்க வைத்துள்ளார். 1979 இல் காரைக்கால் அம்பலவாணர் சுவாமியாரின் சமாதிநிலையைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடாத்தி வருகின்றனர்.

விழாக்கள், அன்னதானம், பூசைகள், ஆலயத் தொண்டுகள் யாவும் ஏற்கனவே செய்து வந்த அடித்தொண்டர்கள் இளைஞர் சமுதாயத்தையும் சேர்த்து வெகு சிறப்பாக நடாத்தி வருகின்றனர். ஆலயப் பெருவிழாவுக்கான அன்னதானம் சில வருடங்களுக்கு முன் வைரவர் ஆலய முன்றலில் அமைந்த தற்காலிக பந்தலில் வருடா வருடம் நடைபெற்றது. அன்னதானத்தின் போது ஆடிக்காற்றின் புழுதியால் ஏற்பட்ட சிரமங்களை நோக்கிய அன்னதான சபையினரின் வேண்டுதலை ஏற்ற மூ.பஞ்சலிங்கம் அவர்கள் 80 லட்ச ரூபா செலவில் புதிய தோர் அழகிய மண்டபத்தை இவ்வாலய வடதிசையில் 2008 இல் அமைத்துள்ளார்.

இந்த மண்டபம் அன்னதான சேவையுடன், எம்பெருமானின் தேர் வீதியுலாவின் பின் இளைப்பாற்றும் விசேட அர்ச்சனை பூசைகள் செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இச்சூழலில் நடாத்தப்படும் திருமண, கலை, கலாசார நிகழ்வுகளுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு முன் பொதுமக்களின் அன்பளிப்பாகப் புதிய சித்திரத்தேர் பல இலட்சம் ரூபாவில் அமைக்கப்பட்டதால் எம்பெருமானின் தேர்ப்பவனி சிறப்பாக நடைபெறுகிறது. ஐந்து வருடங்களுக்கு முன் பொது மக்களின் பேருதவியால் உள் வீதி மண்டப வேலைகள் நிறைவடைந்துள்ளன.

2010 ஆம் வருடம் புனருத்தாபன வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கட்டுமானச் சிதைவுகள், கூரைவேலைத் திருத்தம் போன்ற வேலைகள் நிறைவு கண்டதும் 2011 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வருடாந்தப் பெருந்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயச் சிறப்புக்கேற்ப விசாலாட்சி அம்பாளுக்குப் பெருவிழா எடுப்பதன் பேரில் கொடிமரம் நாட்டப்பட்டு 2012 தை மாதத்தில் விழாக்கள் இனிதாக நிறைவேறியது. மிகப்பழையதும் அற்புதங்கள் நிறைந்ததுமான சிவாலயமாகவே திகழ்வதுடன் இப் பகுதி சிறப்படைவதற்கு அருள்பாலிக்கும் அருள் வள்ளலாக அமைந்துள்ளார்.

புதிய கயிலாய வாகனமும் புதிய சப்பறமும்

காரைக்கால் பதியிலுறை விசுவநாதப் பெருமானின் பெருங் கருணையால் நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழும் இரு குடும்பங்கள் இவ்வாலயப் பெருவிழாவில் எட்டாம், பத்தாம் திருவிழாக்களை ஆரம்ப காலந் தொட்டே செய்து வந்தனர். அவர்கள் இருவரும் தமக்குக் கிடைத்த பேறுகளை எண்ணி எம்பெருமானை அலங்காரப் பவனியில் அழைத்துவர எண்ணினர். அதன் பயனாக எட்டாந் திருவிழாவைச் செய்து வரும் கதிரவேலு அசுபதி குடும்பத்தினர் தமது பங்களிப்பாகப் பல இலட்சம் ரூபாவில் புதியதோர் கயிலாய வாகனம் (2012) பெருவிழாவில் வெள்ளோட்டம் காணவும் எம்பெருமான் வீதியுலா பவனியாக வரவும் இறையருள் பாலித்தது.

இச்சிவாலயத்தின் வடமேற்கு வீதியில் குடியமர்ந்த சி.அப்பையா ஆரம்பத்தில் வறிய நிலையிலிருந்து எம் பெருமானின் ஆலயத் திருப்பணிகளை உடலாலும், பொருளாலும் நிறைவேற்றினார். இதனால் இறைவன் கொடுத்த அருட்கொடையால் ஏழு பிள்ளைகளும் பல சீரும் பெற்று நல்வாழ்வு வாழ்கின்றனர். ஆரம்ப காலத்திலிருந்தே இவ்வாலயத்தின் பத்தாந் திருவிழாவான சப்பறத் திருவிழாவைச் செய்து வருகின்றனர். அப்பையாவும் மனைவியும் மறைந்தாலும் அவர்களது பிள்ளைகள் இறையருளின் கருணைக்காகப் புதிய தோர் சப்பறஞ் செய்ய முன்வந்தனர். இறையருளும் அப்பையா குடும்பத்தினரும் பொருள் மற்றும் மனநிறைவும் அணி செய்ய 2012 பெருவிழாவில் புதியதோர் சப்பறம் 30.07.2012 அன்று வெள்ளோட்டங் கண்டது.

இரு நாட்களின் பின் நடைபெற்ற சப்பறத் திருவிழாவில் பல லட்ச ரூபா செலவில் உருவாக்கப்பட்ட நாற்பத்தொரு அடி உயரமும் அழகிய கட்டமைப்புக்களும் யாவராலும் வியந்து போற்றப்படும் வகையில் அமைந்த திருச்சப்பறத்தில் எம்பெருமான் வீதியுலா வந்த காட்சி அருட்காட்சியாகும். இத்திருச்சப்பறம் இவ்வாலயத் தெற்கெல்லையில் புதியதோர் மண்டபத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல இவ்வாலயத்தின் வடபால் வசிக்கும் அம்பலவாணரின் மகள் பாஸ்கரன் மனோகரி குடும்பம் தமது நேர்த்தியாகப் புதியதோடர் அழகிய சர்ப்ப வாகனத்தை 2012 இல் இறைவனின் வெளி வீதியுலாவுக்காக
உதவியுள்ளனர்.

மேலும் 2012 தை மாதம் முதன் முதல் கொடி மரம் நாட்டப்பட்டு விசாலாட்சியம்பாளின் பெருவிழா நடைபெற்றது. இவ்வாலயத்தில் வடபால் வசிக்கும் இரத்தினம் என்பவர் 2013 தை மாதம் நடைபெற்ற விசாலாட்சி அம்பாளின் பெருவிழாக்கால வெளிவீதியுலாவின் பேரில் புதியதோர் அழகிய சிம்ம வாகனமொன்றை அமைத்துள்ளார். இறைவனின் பெருங் கருணையும் அதனை அனுபவிக்கும் பெருமக்களின் இறை பக்தியும் எம்மிணுவை மக்களின் பெருமைக்கு வித்தாக அமைந்துள்ளது.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?