இலந்தை முள்ளைத் திருத்தினாலும் இந்த இணுவிலாரை திருத்த முடியாது!

ஒரு பராம்பரிய இந்து கலாச்சாரம் நிலவி வரும் இணுவில் என்ற கிராமம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. காய்கறிகள், புகையிலை துணை உணவுத் தானியங்கள் போன்ற பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் மிகவும் எளிமையான பண்பான மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள்.

இங்கே நல்ல வளமான சிவப்பு வண்டல் இருந்தாலும் நீர்ப்பாசனத்திற்கு நிலத்தடி நீரினையே பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. 65 – 75 வருடங்களிற்கு முன்னர், இங்குள்ள பண்ணைகளில் துலாவின் மூலம் நீர் அள்ளுதல் பொதுவான ஒரு முறையாக இருந்தது. இந்த முறையில் நீர்ப்பாசனம் செய்ய மூவர் தேவைப்படுவர்.
அதாவது, ஒருவர் நீரை அள்ளுவதற்கும், ஒருவர் துலா மிதிப்பதற்கும், ஒருவர் நீரை ஊற்றுவதற்குமாக இந்த மூன்று பேர் தேவைப்படுவர்.

பக்கத்திலுள்ள பண்ணைகளும் சகோதர்களுடையதாக அல்லது உறவினர்களுடையதாக இருக்கும். அவர்களும் ஒருவருக் கொருவர் தோட்ட வேலைகளில் ஒத்தாசையாக இருப்பர். இவ்வாறாக நன்கு பிணைக்கப்பட்ட சமூக வாழ்வு கடந்த ஆறு தசாப்தங்களில் பல மாற்றங்களிற்கு உட்பட்டுள்ளது.

இணுவில் பூராகவும் பல கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பரராசசேகர பிள்ளையார் கோவில், செகராசசேகர பிள்ளையார் கோவில் என்பன யாழ்ப்பாண மன்னர் காலத்துப் பழமையான வரலாற்றுப் பிரசித்தி பெற்றவை. இந்தக் கோவில்கள் இந்தக் கிராமத்தின் சமூக வாழ்வியல் மையங்களாக திகழ்ந்தன. மதகுருமார், இசைக்கலைஞர்கள் (குறிப்பாக நாதஸ்வரம் மற்றும் தவில் வித்துவான்கள்), கைவினைஞர்கள் ஆலயங்களை சூழவிருந்து ஆலயப்பணி செய்தனர். இவ்வாறாக நல்ல செழிப்பான கலாச்சாரம் அங்கு நிலவியது.

பக்கத்து ஊர்களான மானிப்பாய், உடுவில் போன்ற இடங்களிற்கு கிறிஸ்தவம் வேரூன்றியும் அதனால் இணுவிலிற்குள் பரவ முடியாது போன அளவிற்கு இந்தக் கிராமத்தில் மிகவும் பலமாக இந்துக் கலாச்சாரம் காணப்படுகின்றது. அமெரிக்க மிசினரிமார் இணுவிலிலும் ,மானிப்பாயிலும் நுழைந்த பொழுது மானிப்பாய் சூழவுள்ள பல இடங்களில் மதமாற்றம் நடை பெற்ற போதிலும் இணுவிலில் இது சாத்தியமற்றுப் போகவே மனம் சலித்த மிசினரி மார் சொன்னார்கள் இலந்தை முள்ளைத் திருத்தினாலும் இந்த இணுவிலாரை திருத்தமுடியாது என்று.

இணுவில் 
மாணிக்கவாசகர் வைத்திலிங்கம்

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!