பொது அமைப்புக்கள்

பரமானந்தா வாசிகசாலையும் நூலகமும்

இந்த நிலையம் 1936 இல் இணுவில் கிழக்கில் சித்தர் பெரிய சந்நியாசியாரின் சமாதியடைந்த சூழலில் பல ஆசிரியர்களின் பெருமுயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. சில வருடங்களின் பின் காங்கேசன்துறை வீதி.வ.செல்லப்பாவின் காணியில் இணுவில் மத்திய வாசிகசாலை என்னும் பெயரில் இயங்கியது. இக்காணி வேறு கைமாற வாசிக சாலையும் செயலிழந்தது. பின்னர் சேதுலிங்கச் சட்டம்பியாரின் இல்லத்தில் நடைபெற்ற போது உடுவில் கிராம சபையால் நாளேடுகள் வழங்கவும் இரவுப் பாடசாலை நடாத்தவும் உதவியது.

பின்னர் இளந்தலைமுறையினர் பொறுப்பேற்றுப் பரமானந்தவல்லி வாசிகசாலையெனப் பெயரிட்டு நடாத்தி வந்தனர். அக்காலத்தில் அந்த இடத்தின் புதிய காணிச் சொந்தக்காரரின் வேண்டுதலுக்கமைவாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் ஊர் மக்கள் பலர் ஒன்றிணைந்து நிதி திரட்டி இன்று வாசிகசாலை அமைவிடக் காணியை விலையாக வாங்கிப் புதிய வாசிகசாலை தோன்ற இறையருள் கைகூட்டியது.

பல வாலிபர்களின் பெருமுயற்சி திருவினையாக அமைந்தது. இவர்களின் பெரு முயற்சியால் நூலகத்துக்கென ஒரு கட்டடம் அமைக்கவும் நாளேடுகள் படிக்கவும் ஏற்ற வகையில் கட்டடம் அமைந்தது. இதனால் இந்த அமைப்பின் பெயர் நிரந்தமாகவே பரமானந்த வாசிகசாலை நூல்நிலையமென்ற பெயரில் இன்றுவரை இயங்கி வருகிறது.

இந்த நிலையம் அமைக்கும் போது இரு பிரதான அறைகளாகவும் இரு புறமும் இரு சாலைகள் (பத்திரிகை வாசிக்கவென கதவுகளில்லாதவாறும்) அமைக்கப்பெற்றன. ஒரு அறையில் இந்த வாசிகசாலையின் நூல்கள் பாதுகாப்பாகப் பேணப்படுகிறது. அடுத்த அறை இணுவில் உப தபாற்கந்தோர் பாவனைக்கேற்றவாறு அமைக்கப் பெற்று உபதபால் நிலையம் இயங்குவதால் அதன் வாடகை, வாசிகசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வாசிகசாலை நிர்வாகம் இன்றுவரை இளைஞர்களாலேயே இயக்கப்படுகிறது. இந்நிலையம் புதிய கட்டடம் அமையும் காலத்தில் இச்சூழலில் வாழ்ந்த பாடசாலை மாணவர்கள் கடைச் சிப்பந்திகள் ஏனைய அரச சார்பற்ற ஊழியர்கள் எனப் பல உறுப்பினராக இருந்தனர். அவர்கள் தாமாகவே முன்வந்து தமது நிலைய வளர்ச்சிக்காக இதனருகே இருந்த வெங்காயச் சங்கத்துக்குத் தேவையான வெங்காயக்கூடைகளைப் பின்னி வழங்கினர்.

இந்த உறுப்பினர்கள் பதினைந்து பேர் தமது பகல்நேரப் பணி முடிந்ததும் இரவு ஏழு மணிமுதல் நள்ளிரவு வரை ஒருவர் இருபத்தைந்து கூடைகளைப் பின்னியும் வழங்கி வந்தனர். இதனால் ஒரு கூடையின் கூலி 2 சதமாக இருபத்தைந்து கூடைக்கும் ஒருவர் 50 சதம் பெறுவதாகவும் மாதம் 30 நாளும் ஒருவர் 15 ரூபா பெறவும் 15 பேரும் தவறாது வந்து ஒரு மாதத்தில் 225 ரூபாவுக்கான சிரமதானப் பணி செய்து வாசிகசாலை வளர்ச்சிக்காக வழங்கியதாகவும் இவர்களின் பணி சமூக வளர்ச்சிக்காக பல வருட காலம் அயராது உழைத்தே உதவியதாக இணுவில் மேற்கைச் சேர்ந்த  இ.திருச்செல்வம் (72) என்பவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இவ்வாசிகசாலை வளர்ச்சியில் அன்று பண்டிதர் கா.செ.நடராசா, க.அம்பலவாணர், பொ.பஞ்சாட்சரம், தம்பிராசா போன்ற பலர் அயராது செயலாற்றியதால் இன்றுவரை இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குவதாகவும் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?