சிறப்புக்கள்

மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

சைவமும் தமிழும் ஆய கலைகளும் ஓங்கி வளர்ந்திடும் இணுவில் திருவூரில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பல சான்றோர்கள் தமது பணிச் சிறப்பால் மேன்மையுற்றனர். முத்தமிழின் அங்கமான இயற்றமிழும் கற்ற கல்விமான்களால் எம்மிணுவையூர் சிறப்படைந்தது. முத்தமிழில் இசை, நடனம் ஆகிய கலைகளில் பார் போற்றும் கலைஞராக எம்மண்ணிற் பிறந்து அலங்கரித்தவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் என்னும் கலைஞானச்சுடர்.

தமிழகத்தில் அமைந்த திருவூர்களின் சிறப்புப் பெயரால் அங்கு தோன்றிய கல்விமான்கள், கலைஞர்களின் பெயர் மேலும் துலங்க இறையருள் கைகூட்டியது. உதாரணமாக சீர்காழி கோவிந்தராசன். பாபநாசம் சிவன், பித்துக்குளி முருகதாஸ், மதுரைச் (சோமு) சோமசுந்தரம், காரைக்குறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை இராசரத்தினம், திருவெண்காடு சுப்பிரமணியம், குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற பலரின் பெயர்களை அறிந்தோம். எம்மினிய இணுவைத் திருவூரில் அவதரித்த வி.தட்சிணாமூர்த்தி, வீரமணி ஐயர் ஆகியோரின் வரவால் (இணுவில் சிறிய கிராமம் என்ற நோக்கில்) யாழ்ப்பாணம் என்னும் பெயர் கலைஞர்களாற் சிறப்படைந்தது.

எம்மவரின் பெயர்கள் யாழ்ப்பாணத்தின் அடைமொழியாக அமைந்து சிறப்பிக்கிறது. இணுவில் திருவூரின் தென் பகுதியில் பரராசசேகரப்பிள்ளையார் கோயிலின் மேற்கு வீதியில் வாழ்ந்த வேதியரான நடராசா (சின்னத்துரை) ஐயர் சுந்தராம்பாள் தம்பதியினரின் முற்றவப் பயனாக 15-10-1931 அன்று பிறந்த இரண்டாவது பிள்ளைக்குச் “சப்தரிஷி சர்மா” என்னும் திருநாமத்தைச் சூட்டி அகமகிழ்ந்தனர். அன்று பிறந்த பாலகன் சிவந்த திருமேனியும் உடலமைப்பும் பார்த்தவர்களைக் கொள்ளை கொள்ளும் வசீகர தோற்றமும் அமைந்து காணப்பட்டார்.

இளவயதில் வீரமணி ஐயர் 

 

பெற்றோரும் தமது இரு புதல்வரையும் இரு கண்களெனப் போற்றிப் பேணி வளர்த்தனர். வேதியர் குலத்தவரான நடராசா ஐயர் தமது குல ஆசாரங்களுடன் இசைவான வயலின் இசையிலும் வல்லுனராக விளங்கினார். இவர்களின் இல்லற வாழ்வு நல்லறமாகி அறப்பணியை நாடியது. நடராசா ஐயர் தமது நாளாந்தப் பணியாக அதிகாலையிலெழுந்து காலைக் கடனை முடித்ததும் ஆசார சீலராக இறைவணக்கம் செய்த பின் தமது வயலினை எடுத்து வாசிப்பார். சப்தரிஷியோ தொட்டிலிலும், தாயின் மடியிலிருந்து பாலுண்ணும்போதும் தந்தையின் இனிய வயலின் இசையைச் செவிமடுத்து இசையில் மூழ்கியிருப்பார்.

தொட்டிலிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற முதுமொழி இப் பாலகனுக்கும் ஏற்புடையதானது. பாலகன் எழுந்து, எட்டியடி வைத்து நடந்தோடி விளையாடி வளர்ந்து மழலைப் பருவம் மாறிப் பள்ளிப் பருவத்தை எட்டினார். தந்தை தமது குல ஆசாரப்படி செய்ய வேண்டிய விதிகளுக்கமைய அயலிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஏட்டுக் கல்வியைத் தொடர வைத்தார். ஏட்டுக் கல்வியுடன் இசையையும் தாமே புகட்டி ஆர்வத்தை யூட்டினார். ஓய்வு நேரங்களில் சப்தரிஷி சர்மா தம் ஒத்த வயதுடைய சிறுவர்களுடன் ஓடியாடி விளையாடுவார்.

இப் பருவத்தில் இவரின் குறும்புத்தனம் சொல்லிலடங்காது. மரங்களிலேறி மாங்காய் பிடுங்கித் தானுமுண்டு நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக எறிவார். அப்போது தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாடலில் வரும் கண்ணனின் குறும்புகளையுஞ் செய்து தன்னைக் கண்ணனென அழைக்கச் சொல்வார். ஒரு சமயம் இணுவில் கந்தசுவாமி கோயில் மணிக் கோபுரத்தில் ஏறி கண்டாமணியைப் பிடித்த வண்ணம் தான் மணியைப் பிடித்த வீரனென்றார். கூட இருந்த ஏனைய சிறுவர்கள் அவரை நோக்கி “வீரமணிதான் நீ விழாமல் இறங்கு” என்றனர். அன்றிலிருந்து தனது பெயரை வீரமணியென்றே மாற்றுமாறு தந்தையிடம் வாதிட்டார்.

இதனால் தந்தையும் இவர் பெயரை வீரமணியென்று மாற்றி வைக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். அன்றிலிருந்து எம்மினிய கலைஞரின் பெயர் வீரமணி என மாற்றம் பெற்றது. இவர் தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார். மானிப்பாய் இந்துக் கல்லூரியிற் கற்ற காலத்தில் கலை நிகழ்வுகளிற் பங்குபற்றித் தங்கப் பதக்கங்களையும் வென்றெடுத்தார். இதனால் இவருக்குக் கலைஞானம் பெறும் ஆவலும் ஏற்பட்டது. இச் சம காலத்தில் பெற்றோர் இருவரும் மறுமை யெய்தினர். தமது மூத்த சகோதரர் கந்தசுவாமி ஐயரின் பாதுகாப்பில் வளர்ந்தார். வீரமணி தமது ஏட்டுக் கல்வியுடன் நடனம், சங்கீதம் ஆகிய கலைகளிலும் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இசை நடனப் பயிற்சி

கலைகளில் இவரின் முற்பிறவியின் தொடர்பு இருந்தது. இறையருளும் அண்ணனின் அரவணைப்பும் உற்சாகமும் இருந்ததால் இவரைத் தென்னிந்திய அடையார் கலாசேத்திர நடனக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு சகோதரர் அனுப்பி வைத்தார். ஏறக்குறைய 1950 அளவில் ஒரு வாலிபன் தமிழகத்தில் படிப்புக்கான கல்லூரிக் கட்டணம், தங்குமிட வசதி, உணவு மற்றும் இதர செலவுகள் சிக்கனமாகப் பேணுமிடத்து ரூபா இருபத்தைந்து மட்டும் போதுமானது. வீரமணி தமது திறமையாலும் மதி நுட்பத்தினாலும் மாதந் தோறும் அண்ணனிடமிருந்து வரும் காசுக்கட்டளை (MONEY ORDER)யில் தங்கியே வாழ்ந்து கலைப் பயிற்சியிற் சிறந்து விளங்கினார்.

இதனால் நடனக் கல்லூரி அதிபரான திருமதி ருக்குமணி அருண்டேலின் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவரானார். (குருவான ருக்குமணி அம்மையாரை கல்லூரியில் யாவரும் “ருக்கு” என்றே அழைப்பதால் வீரமணிக்கு எந்த நேரமும் ருக்கு என்னும் வார்த்தை சிந்தனையில் தவளும். அவர் திருமணமானதும் ஒருவர் பின் ஒருவரான இரு மனைவியரையும் “ருக்கு” என்றே அழைப்பதை யாவரும் அறிவர்)

வீரமணியின் மதிநுட்பமும் விவேகமும் இறையருளும் கைகூட்ட நடனக் கலையின் சகல நுணுக்கங்களையும் கற்று உரிய பயிற்சியை நிறைவு செய்து பட்டத்தையும் பெற்றார். இவரின் சிந்தையில் ஊறியிருந்த சங்கீத ஞானம் இவரைச் சங்கீதத்திலும் கற்றுத்தேற இறையருள் பாலித்தது. தனக்கு நடனக் கலையூட்டிய அன்னை ருக்குமணி அருண்டேல் அம்மையாரை நன்றியறிதலுடன் தனது இதயக் கோயிலில் இருத்திப் பூசித்தார். மேலும் வீரமணி ஐயரின் விருப்பின்படி சங்கீதக் கலையையும் சிறப்புடன் கற்றுப் பெரும் புகழீட்டுமாறு வாழ்த்தினார்.

வீரமணி சிறப்புக் கலையான சங்கீதப் பயிற்சியைப் பிரபல சங்கீதமேதை எம்.டி.இராமநாதையரிடம் குருகுலக் கல்வி மூலம் பயில ஆரம்பித்தார். இயல்பாகவே கலைஞான ஊற்றின் உறைவிடமான வீரமணியின் சிந்தனையில் ஆழ்ந்திருந்த இசைஞானம் தமிழிசை அருவியாகப் பாய்ந்ததால் இசையின் வரைவிலக்கணப்படி இசையின் சகல கலை நுட்பங்களையும் கற்றார். மேலும் ஏற்பட்ட இசை ஆர்வத்தினால் தாமே இசையின் பல்வேறு வடிவங்களையும் ஆராய்ந்தார். ஏற்படும் சந்தேகங்களைத் தமது குருவிடமும் இசைமேதை பாபநாசம் சிவனிடமும் கேட்டறிந்தார்.

பாபநாசம் சிவன் மூலம் மேலும் பல அற்புதமான இசையின் வடிவங்களை ஆக்கும் நுணுக்கங்களையும் கேட்டறிந்தார். வீரமணி தமது விதிவசத்தால் பண்ணிலும் பரதத்திலும் ஈடிணையற்ற புலமை பெற்றபோதும் வறுமையின் பிடி அவரை வருத்தியது. சகோதரரிடமிருந்து வரும் பணம் (இருபத்தைந்து ரூபா) வரப் பிந்தினால் செலவுக்காக ஏங்கித் தவிப்பார். ஒரு சமயம் வழமை போலச் சக்தி வழிபாட்டுக்காக மயிலாப்பூர் கற்பகாம்பாளைத் தரிசிக்கச் சென்றார்.

அன்னை கற்பகாம்பாளின் அழகிய திரு வுருவத்தைக் கண்டதும் தாயே என்னை ஏன் கவலையால் வாட்டுகிறாய் என்று கூறித் தமது கவலையை அன்னை கற்பகாம்பாளின் திருப் பாதங்களில் சூட்டி கண்ணீர் மல்க முதன் முதல் பாடிய பிரபல பாடல்,
“கற்பகவல்லிநின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா” எனத் தொடர்கிறது.

இப் பாடலை முதலாகக் கொண்டு மயிலைக் குறவஞ்சி என்னும் நூலை கற்பகாம்பாள் மீது பாடி எழுதினார். இப் பாடலின் சொற்சுவை, பொருட்சுவை மிகுந்து காணப்பட்டதால் யாவரும் விதந்து பாராட்டினர். வீரமணியின் கவலை நீங்கவும் அன்னையின் பேரருள் கிடைத்ததால் வீரமணி இசை ஞானத்தின் உச்சியில் வைத்து மதிக்கப்பட்டார். இவ் வாலய அறங்காவலர்கள் இப் பாடலைக் கருங்கல்லிற் பதித்து ஆலய முன்றலில் அமைத்தனர். பாடலின் இறுதியில் பாடியவர் யாழ்ப்பாணம் வீரமணி எனவும் எழுதப்பட்டிருந்தது.

பாடலின் சிறப்பு

வீரமணி ஐயர் தமது இருபத்தாறாம் வயதில் பண்ணும் பரதமும் முறைப்படி கற்றுத் தேறிய புலமையில் முதன் முதல் சக்திக்கு அர்ப்பணித்த பாடல் பாரெங்கும் பரவியது. மேலும் இப்பாடல் பிரபல இசைமேதை ரீ.எம்.சௌந்தரராசனின் இனிய குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுத் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் இல்லங்கள் தோறும் ஒலிக்கிறது. ஐம்பத்தேழு வருடங்கள் சென்றும் பாடலின் இசையமைப்புடன் கூடிய பாடலின் இன்சுவை என்றும் மங்காப் புகழுடன் ஒலிக்கிறது.

மயிலைக் குறவஞ்சி என்னும் நூலுக்கு அணிந்துரை எழுதிய சங்கீத மேதைகளான கு.அய்யாசுப்பிரமணிய முதலியார் மற்றும் க.சோமசுந்தர முதலியார் ஆகியோர் தமது உரையில் திரு மயிலாப்பூரில் குடிகொண்டுள்ள கற்பகாம்பாள் மீது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களும் புலவர்களும் பல பிரபந்தங்களைப் பாடியுள்ளனர். இவற்றுள் குறவஞ்சி என்னும் பிரபந்தம் கிடைக்கவில்லை. வீரமணியின் மயிலைக் குறவஞ்சி மூலம் இதுவும் நிறைவு பெற்றுள்ளது என விதந்துரைத்துள்ளனர்.

இச்சிறப்பான நூல் பிரபல இசை மேதையான கொத்தமங்கலம் சுப்பு என்பவரின் தலைமையில் நூற்றுக்கணக்கான இசை விற்பன்னர்களும் ஆயிரக்கணக்கான இரசிகப் பெருமக்களும் கூடிய மகாசபையில் அரங்கேற்றங் கண்டது. யாவரும் வீரமணியை வாழ்த்தி ஆசீர்வதித்தனர். வீரமணியின் திறமையை மெச்சிய சாகித்திய குருவான பாபநாசம் சிவனின்கூற்றையும் அறிவோம்.

“தித்திக்கும் தீந்தமிழில் நவரசமுடன் பக்திப் பரவசம் ததும்ப இலக்கணச் சுவை குன்றாது மயிலைக் குறவஞ்சி என்ற சிறிய அரிய நூலிழைத்துக் கூடு கட்டியிருக்கும் அற்புதச் சிலந்தி நமது திரு.வீரமணி என்னும் அடையார் கலாசேத்திர மாணவன்” எனப் புகழ்ந்துரைத்தார். எமது யாழ் மண்ணின் கல்வியின் பிதாமகரான கல்விமான் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை பின்வருமாறு போற்றினார்.

“முத்தமிழும் வல்லோன் முதுமறையோன் வீரமணி
அத்திமுகனுக்கூஞ்சலாதியன – தித்தித்துத்
தேனொழுகு தீந்தமிழிற் செய்தளித்தான் கீர்த்தநற்
கானமெழு நாவனிவன் காண்”

பலராலும் போற்றப்பட்ட வீரமணியை எம் மண்ணிலுள்ள அன்பர்கள் அவர் தாயகம் வந்த போது பெரு வரவேற்புபசாரமும் பரிசில்களும் விருதுகளும் தந்து குதூகல விழா எடுத்தனர்.

பெண் வேடத்தில் வீரமணி ஐயர்

நடன இசைப் பணி

தாம் விருப்புடன் தேடிக் கற்ற கலைக் கல்வியை எமது யாழ் மண்ணில் பலரும் கற்க வேண்டுமென்ற பெரு விருப்பினால் முதல் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இசை ஆசிரியராகவும், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியராகவும் பணியேற்றார். இவரின் கற்பித்தல் திறமையால் இரு பாடசாலைகளும் பல போட்டிகளிற் பங்கு பற்றிச் சிறப்புப் பரிசில்களைப் பெற்று மேன்மையடைந்தன. பல மாணவர்களை ஊக்குவிப்பதன் பேரில் முன்னூறுக்கும் மேற்பட்ட நாட்டிய நாடக ஆக்கங்களை எழுதினார். இவற்றுட் பல நூலுருவில் வெளி வந்தன.

தனிப்பட்ட நடன மாணவர் பலரை உருவாக்கினார். இவரிடம் கற்ற பலர் வெளிநாடுகளில் போதனாசாலைகளை அமைத்து பெருமதிப்படைந்தனர். இவரிடம் கற்று லண்டனில் வதியும் சிவசக்தி என்பவர் அவ்விடத்தில் பல மாணவர்களை அரங்கேற்றிப் பிரபலமடைந்துள்ளார். இவர் தமது குருவான வீரமணி ஐயரைப் போற்றிப் பெருமதிப்பளித்தார். வீரமணி ஐயரின் திறமையை நன்கறிந்த கோப்பாய், மற்றும் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் இவரைத் தமது கலாசாலைகளில் நடன விரிவுரையாளராக நியமித்தனர்.

இராமநாதன் நடனக் கல்லூரியிலும் விரிவுரையாளராக அரும்பணியாற்றி அதிக மாணவர்களை அரங்கேற்றியுள்ளார். யாழ் பல்கலைக் கழக நுண்கலைப்பீடம் மருதனார்மடத்தில் அமைய அரும்பாடுபட்டு வெற்றி கண்டதுடன் இசை நடனத்துறையை விருத்தி செய்தார். இன்றும் போற்றப்படுகிறார்.

குன்னக்குடி வைத்தியநாதனின் பாராட்டுச் சான்றிதழ்

இசைப்பணி

வீரமணி ஐயர், பாடல்கள், ஊஞ்சற்பாடல்கள், பிரபந்தங்கள், நாட்டிய நாடகங்கள் பலவற்றைத் தாம் கற்ற கல்வியறிவுடன் நெஞ்சிற் குடிகொண்ட தெய்வங்களின் ஆசியினால் எழுதியுள்ளார். ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆலயங்களின் பேரில் பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்களிற் பல ஒலிப்பதிவு செய்யப்பட்டு மக்களின் சங்கீத ஆவலைப் பூர்த்தி செய்கின்றன.

நாற்பது வருடங்களுக்கு மேல் இசை நடன ஆக்கப்பணியாற்றியும், தம்மை நாடிவரும் நண்பர்கள் முன்னாள் மாணவர்கள் தமக்கேற்படும் சந்தேகங்களைக் கேட்க வரும்போது எதுவித மறுப்புமின்றி அவர்களுக்கு உதவுவார். ஒரு சமயம் இரு நண்பர்கள் ஐயருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அவரின் முன்னாள் மாணவியும் நடன ஆசிரியையுமானவர் கண்ணன் நடனத்தில் ஒரு சந்தேகத்தைக் கேட்டிருந்தார். அச்சமயம் ஐயர் முட்டு வருத்தத்தில் வருந்திக் கொண்டிருந்தார். கேட்டவரின் சந்தேகம் நீக்குவதன் பேரில் தாம் நோயினால் அவதியுற்றபோதும் திடீரெனக் கதிரையிலிருந்து கீழே இறங்கிக் கண்ணனைப் போலத் தவழ்ந்து அபிநயஞ் செய்தார்.

அப்போது அவர் நோயினால் மேலும் அவதிப்பட்டார். உடனிருந்த அன்பர் அவரை நோக்கி “ஐயா இது உங்களுக்கு அவசியமா ஏன் வருந்துகிறீர்கள்” என்று கேட்டார். ஐயர் சிறிது நேரஞ் சென்றதும் ஒரு குருவிடம் கேட்கும் சந்தேகம் செயலில் காட்ட வேண்டியது கற்றவனின் பண்பாகும் என்று கூறினார். மெய் வருத்தம் பாராது ஐயர் தமது கலைப் பணியைச் சிறப்பித்தார்.

உலகிலேயே பிரசித்தி பெற்ற வீரமணி ஐயரைப் பல நிறுவனங்களும் சமூகங்களும் பாராட்டிப் பட்டங்களும் விருதுகளும் வழங்கிக் கௌரவித்தனர் யாழ் பல்கலைக்கழகம் “முதுகலைமாணி” பட்டத்தையும் இலங்கை அரச சமாதான நீதிபதி (JP) பட்டத்தையும் வழங்கினர். இவர் மேலும் முத்தமிழ் வித்தகர், இயல் இசை வாரிதி, சாகித்தியசாகரம், மதுரகவி, சாகித்திய சிரேஷ்டமணி, மகாவித்துவான் போன்ற பல சிறப்புப் பட்டங்களையும் பெற்றார்.

வேதியராக 15-10-1931 அன்று இணுவை மண்ணிற் பிறந்து தமது திறமையால் இயல், இசை, நடனம் யாவற்றையும் சிறப்புடன் கற்றுக் கற்றாங்கொழுகி, அநேக கலைஞர்களை உருவாக்கி பாரெல்லாம் தம் பெருமையாற் புகழப்பட்டு யாவர்க்கும் இனியவராக கலைத் தெய்வத்துக்கே தன்னை அர்ப்பணித்த ஐயரின் மறைவு 18-10-2003 அன்று நடைபெற்றது. இவரின் ஊன் உடம்பு மறைந்தாலும் புகழுடம்பு என்றும் மண்ணில் பிரகாசிக்கும். உலகப் புகழ் பெற்ற இவ்வரிய கலைஞனால் எம்மிணுவை மண் மாதா பூரிக்கும் மூன்றாவது பெருமையாக அமைந்துள்ளமை இறையருளேயாகும்.

வீரமணி ஐயர் தம்பதிகள்

இயற்றிய பாடல்கள்

நல்லூர் முருகன் பாடல்கள்,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாடல்கள்,மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் மீதான பாடல்கள்,கோண்டாவில் சிவகாமியம்மன் பாடல்கள் – பாடியவர்: சீர்காழி எஸ். சிவசிதம்பரம்,காரைநகர் திக்கரை முருகன் பாடல்கள்,சுட்டிபுரம் கண்ணகை அம்மன் பாடல்கள் – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்.இவரின் அனேக பாடல்களை தென்னிந்திய இசைகலைஞர்கள் பாடினர். பாடல்களுக்கு மெட்டும் இவரே அமைத்தமை குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயமாகும்.

இயற்றிய சாகித்யங்கள்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் (ராகமாலிகை)- பாடியவர்: டி. எம். செளந்தரராஜன்
சின்ன வயதினிலே (சாகித்யம்) – பாடியவர்: சுதா ரகுநாதன்
சரஸ்வதி வீணை (ராகமாலிகை) – பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்
தசாவதாரம் ( ராகமாலிகை), என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம்
ஏனடா முருகா, என்னடி பேச்சு சகியே, கஜமுகாகுஞ்சரன், சோதராகுழல் ஊதி விளையாடி, மட்டுநகர், நவரச நாயகி, சாரங்கன், மருகனேவண்ண, வண்ணகற்பக விநாயகனே, தாமரை இதழிலே, நாதம் கேட்குதடி, நயினையம்பதி.

இயற்றிய உருப்படிகள்

72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர்,போன்ற சிலரே.அவர்களில் ஒருவரகா நம் மண்ணை சேர்ந்த மகாவித்துவானும் இடம்பெற்றது எம் மண்ணிற்கு பெருமை.

கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில் மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்தியஸ்ரீ ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப் பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?