கல்விக்கூடங்கள்

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடம்

இணுவில் திருவூரின் புனித மண்ணில் பெண்கள் கல்லூரியை நிறுவ முன் வந்த சைவப் பெரியார் சேர்.பொன்.இராமநாதன் இதே வளாகத்தில் இசைக் கல்லூரியையும் நிறுவச் சித்தங் கொண்டார். அவரின் கனவு நிறைவேற முன் சிவகதியடைந்தார். இவரின் மருமகனும் கல்விமானுமாகிய சு.நடேசப்பிள்ளை மாமனாரின் அபிலாசையை நிறைவேற்ற முன் வந்தார். இராமநாதன் வாழ்ந்த இவ்விடத்தில் கற்றலுக்கு வேண்டிய சகல வசதிகளையும் ஏற்படுத்தியதால் 09.10.1960 இல் ‘இராமநாதன் இசைக்கல்லூரி’ என்னும் பெயரில் புனிதமானதோர் கலைச் சோலை உருவானது.

இச்சோலையை  அண்ணாமலை இசைப் பல்கலைக்கழக உபவேந்தர் நாராயணபிள்ளை தொடக்கி வைத்தார். இக்கல்லூரியின் முதல் அதிபராக  மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நியமனம் பெற்றார். சிறந்த கல்வி மற்றும் கலைஞானம் மிக்க பெரியார்கள் விரிவுரையாளர்களாகப் பணியேற்றனர். இதனால் இக் கல்லூரி சிறப்படைந்தது.

 

பல மாணவர்கள் நுண்கலைகளைக் கற்க முன் வந்தனர். இக்கல்லூரியில் நான்கு வருடம் கற்றுத் தேறியவர்கள் ‘சங்கீத இரத்தினம்’ என்னும் பட்டச் சான்றிதழைப் பெற்றனர். 1960 பிற்பகுதியில் இராமநாதன் இசைக் கல்லூரியும் அரசுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கீதம், மிருதங்கம் போன்ற துறைகள் பிரபலமடைந்தன. இதனால் பல நூற்றுக்கணக்கான நுண்கலை மாணவர்கள் கலைஞானம் பெறும் பேறு பெற்றனர்.

மிருதஙக் இசை பயினற் க.ப.சின்னராசா, மகேந்திரன் போன்ற மிருதங்கக்கலைஞர்கள் உருவாக்கப்பட்டு இன்று வரை பிரகாசிக்கின்றனர். 01.03.1973 தொடக்கம் செல்வி.கிருஷாந்தினியின் தலைமையில் நடன நெறி போதிக்கப்பட்டது. 1974 இல் இராமநாதன் நுண்கலைப்பீடம் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.

இதனால் கலைக்கல்வி விஸ்தரிக்கப்பட்டு இசை, நடனம், மிருதங்கம், பண்ணிசை போன்ற துறைகள் ஆரம்பிக்கப்பட்டன. பேராசிரியர் க.சிவத்தம்பியின் தலைமையில் தனித்துவமாக யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பீடமாக இயங்கியது. காலங்கள் செல்லவும் நுண்கலைப்பீடத்தின் வளர்ச்சியும் மாணவர்களின் இணைப்பும் அதிகமானதால் இராமநாதனால் ஏற்கனவே உடமையாக்கப் பெற்றிருந்த வெற்றுக் காணியில் (இராமநாதன் கல்லூரியின் கீழ் திசையில்) பல புதிய மண்டபங்கள் நிறுவப்பட்டன.

இவ் விஸ்தாரங் கொண்ட வடபகுதிக்கான யாழ் பல்கலைக்கழகமாக இப்பீடம் பல வசதிகளையும் கொண்ட அரச நிறுவனமாக அமைந்துள்ளது. இராமநாதனின் ஆரம்ப அபிலாசையை அவரின் மருமகனார் சு.நடேசபிள்ளை நிலைநாட்டியதால் முதலில் உருவானது இராமநாதன் நுண்கலைக் கல்லூரியாகும். அரசு அதே ஆண்டில் பொறுப்பேற்றதும், இராமநாதன் நுண்கலைப் பீடமாக உருமாறியது.

காலங்கள் சென்றதும் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடமாக வட இலங்கை மாணவர்களுக்கான நுண்கலைகளின் உயர் பீடமாக அமைந்து வட பகுதியில் மட்டுமன்றி அகில இலங்கையிலும் உயர்கலைக் கல்வியின் சிறந்த போதனா பீடமாகப் பல வசதிகளையும் கொண்ட பிரபலமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

எமதூர் மைந்தனும் தமிழகஞ் சென்று இசை நடனத் துறையில் நற்கல்வி கற்றுத் தமது திறமையை உலகம் போற்றி வியக்கும் தகைமையுடைய மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயரின் அயராத பெருமுயற்சியால் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடம் சகல துறைகளுடனும் இணுவை மண்ணில் அமைந்தமை எம் மண்ணுக்கே பெருமை சேர்க்கிறது.

சைவமும் தமிழும் வளமாக வாழும் இணுவை மண்ணில் பல சிறப்புக்களுடனும் பல்கலைக்கழக உயர் கல்வியின் அங்கமான நுண்கலைகள் யாவும் இணைந்து வளர்ந்துவரும் இப் புனிதமான புண்ணிய பூமியில் கல்வித் தாயான சரஸ்வதிதேவி அக மகிழ்வுடன் உறைந்து அருள்சுரக்க இணுவை மக்களாகிய நாம் செய்த
முற்றவத்தின் பெருமைக்கு நிகரேது?

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?