பொது அமைப்புக்கள்

இணுவில் கலாஜோதி சனசமூக நிலையமும் கிராம அபிவிருத்திச் சங்கமும்

இணுவில் வடக்குப் பிரதேசம் முழுவதும் விவசாய நிலப்பரப்பாகும். இணுவில் புகையிரத நிலையத்தின் தென்திசையில் மிக வறிய நிலையையுடைய விவசாய மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் தமது நிதி வசதி குன்றிய காரணத்தினாலும் கல்வியில் நாட்டமில்லாததாலும் தமது பிள்ளைகளின் கல்வியிலும் அக்கறையின்றி இருந்தனர். ஆரம்பப் படிப்பையே நிறைவு செய்யவிடாது தம்முடன் விவசாயப்பணியில் இணைத்தனர். இவர்களுட் சிலர் தமது விடா முயற்சியால் கிராமத்து ஏனைய பிள்ளைகளைப் போல் தமது பிள்ளைகளையும் நகரப் பாடசாலைகளில் இடைநிலைக் கல்வி பயில வைத்தனர். நகரப் பாடசாலைகளிற் பயின்ற துடுக்கான மாணவர்கள் தமது ஆர்வத்தினால் கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தனர்.

மேலும் கலை நிகழ்வுகளிலும் நாடகத்துறையிலும் ஆர்வம் மிகுந்து காணப்பட்டனர். இதன் பேறாகத் தமது பின் தங்கிய சூழலில் விளையாட்டு, சமூக முன்னேற்றம், ஏனைய மாணவர்களின் கல்வி போன்றவற்றிலும் நாட்டங் கொண்டனர். இவ்வாறு முன்வந்த வாலிபர்கள் தமக்கென ஒருசில ஆதரவாளர்களையும் இணைத்து சனசமூக இயக்கமாகப் பதிவுசெய்து பொது நலனை நிலைநாட்ட முன் முன் வந்தனர்.

அவர்களுள் சி.தர்மலிங்கம், சி.கந்தையா, கா.கந்தையா, கா.இரத்தினசிங்கம், சி.கதிரவேலு போன்ற ஒருசிலர் விளையாட்டுக் கழகமாக இயங்க எடுத்த முயற்சிக்கு பெரியவர்களான ஆ.சண்முகம், அப்புக்குட்டி, வே.கார்த்திகேசு போன்றவர்களும் நல்லாதரவு தந்தனர். இதன் பேறாக மேற்குறிப்பிட்ட ஆரம்பகால உறுப்பினர்களுடன் வேறு பலருஞ் சேர்ந்து 1959 பங்குனி மாதம் பதின்நான்காம் திகதி இணுவில் ‘கலாஜோதி’ சனசமூக நிலையத்தை நிறுவினர்.

இச் சனசமூக நிலையம் நாளேடுகளை வாசிக்கவும் விளையாட்டு, நாடகம், கலைகள் பயிலவும் மாணவர் கல்வி, பொதுமக்கள் சுகாதாரம், சமூகநலன் யாவற்றையும் மேம்படுத்த ஆரம்பித்தனர். விளையாட்டுக்கள் பயின்றதுடன் நாடகங்கள் பயின்று மேடையேற்றியும் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியும் சமூகத்தில் தமது திறமையைக் காண்பித்தனர். சிறுவர் நலன் நாடி முன்பள்ளியை 1972இல் ஆரம்பித்துத் திறம்பட நடாத்தி வருகின்றனர். பின்தங்கிய பகுதியில் தமது பணிகளை முன்னெடுக்கவெனச் சுகாதாரப் பகுதியினரின் சேவையும் சமூக முன்னேற்றத்துக்கான அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியும் கிடைத்தன. சமூகம் முன்னேறியது. பல மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் சிறப்படைந்தனர்.

வருடா வருடம் இல்ல விளையாட்டுப் போட்டியும் நாடகங்கள் மேடையேற்றமும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை நாற்பது நாடகங்கள் மேடை யேற்றப்பட்டன. கலாஜோதி சனசமூக நிலையத்தின் நாடகத் தயாரிப்புக் குழுவில் த.நடராசா, ஆ.சின்னையா, இ.செல்வரத்தினம், ந.கனகேந்திரம், சு.தம்பிராசா,  சி.மகாலிங்கம் , ந.நக்கீரன் போன்றோர் ஆக்கமும் ஊக்கமும் தந்து இச்சூழலைப் பெருமையடையச் செய்கின்றனர். விளையாட்டுத் துறையில், தாச்சிச் சுற்றுப்போட்டி, துடுப்பாட்டம், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்துள்ளனர்.

யுத்த கால நெருக்கடியால் இவ்வாலிபர்கள் தமது நிகழ்வுகளை விட்டு ஒதுங்கினர். கடந்த நான்கு வருடங்களாகச் சிறப்புடன் இயங்கி வருகின்றனர். 1990 சித்திரைப் புத்தாண்டில் தொடங்கிய விளையாட்டு விழா வருடந்தோறும் சிறப்பாக நடாத்தப்படுகிறது. வருடா வருடம் கல்வி, விளையாட்டு , கலைநிகழ்வுகளில் சிறந்து விளங்குபவரக்ளுக்குப் பரிசில்கள் வழங்கி  ஊக்குவிக்கின்றனர். வருடா வருடம் சனசமூ நிலைய நிர்வாக உறுப்பினர் தேர்வும் நடைபெற்று வருகிறது. இவர்களின் விடாமுயற்சியின் பேறாக கிராம முன்னேற்றச் சங்கம், மாதர் முன்னேற்றச் சங்கம் ஆகியனவும் தோற்றுவிக்கப்பட்டுச் சிறப்பாக இயங்குகின்றன.

இந்த நிறுவனங்களின் பணியினால் பல இளைஞர்களும் யுவதிகளும் கற்று முன்னேறி அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதுடன் சமய, சமூக, கலை, கலாசார விழுமியங்களில் உயர்வடைந்தமை சிறப்பாகும். இச்சிறப்பினால் முன்னர் இருந்த வாழ்வாதார நிலையிலிருந்து மேலோங்கியமை இணுவை மண்ணுக்குப் பெருமையாகும்

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?