பொது அமைப்புக்கள்

இணுவில் கலைஒளி மன்றம்

இணுவில் திருவூரின் சிவநெறி முத்தமிழ்க் கல்வி மரபு, கலையின் ஒளி பிரகாசிக்கும் கவிதை, நாடகப் படைப்புகள், உடலுறுதி நல்கும் விளையாட்டு, சமய சமூக நலன் காக்கும் பொதுப்பணி யாவற்றையும் பாரம்பரிய முறைப்படி யாவரும் ஒழுக வேண்டிய தேவையை நெறிப்படுத்தவெனச் சிந்திக்க வைத்தது இறையருள். பொது நோக்குடைய மேலோர் பலரின் ஆசியுடன் எமதூரின் இளம் சமுதாயத்தினர் 1965 இல் ஒன்று கூடினர்.

இணுவையில் கல்வி, சமய, சமூக, பொதுப்பணிக்கு உதவ முன் வந்த ஒழுக்க சீலர் பலரின் சிந்தனைப்படி ஆசிரியரான செ.சண்முகநாதன் (அமரர்) தலைமையில் சி.ஞானமூர்த்தி(அமரர்) செயலாளராகவும் ப.ஆனந்தமோகனதாசன் பொருளாளராகவும், பொ.சந்திரலிங்கம், சி.கருணாமூர்த்தி, மா.ந.பரமேஸ்வரன், மா.விசுவநாதன், வி.பரஞ்சோதி (அமரர்), சூரியகுமார், தி.புலேந்திரன் ஆகியோர் கொண்ட நிர்வாக உறுப்பினர் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களுட் பலர் அன்று இணுவில் சைவமகாஜனா வித்தியாசாலைச் சமூகத்திலிருந்ததால் அப்பாடசாலையையே மையமாக வைத்துப் பணியேற்றனர். இவர்களின் பணிக்கு அரச விளையாட்டுத் துறையினர் உதவ முன் வந்ததால் வலி தெற்கு பிரதேச செயலகத்தில் 1985 புரட்டாதி மாதம் ஒன்பதாம் நாள் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இயங்கியது.

கல்விப் பணியுடன் பாரம்பரிய விளையாட்டுத்துறையிலும் சமூக நலன் கருதி ஐந்து ஆண்டுகள் சிறப்பான பணிகளை ஆற்றி வந்தனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் நிர்வாக உறுப்பினர் பலர் இடம் மாறவும் எப்பணியும் செய்ய இயலாத நிலையால் 1990 இல் இப்பணி நலிவுற்றது. ஒருசில உறுப்பினரின் அயராத உழைப்பினால் இச்சபை 2000ஆம் ஆண்டில் புதிய நிர்வாக சபையை உருவாக்கி பணிகளை முன்னெடுத்தனர்.

சமூகப் பணியாக முதன் முதல் கல்விச்சாலைகளிற் சிரமதானப்பணி சுறுசுறுப்பாக நடைபெற்றதுடன் யாவரும் பொதுப்பணிக்கான முதலுதவி பயிற்சி பெற்று ஆலயங்களில் வீதி ஒழுங்கு, பாதுகாப்பு, முதலுதவி ஆகியவற்றில் தம்மை அர்ப்பணித்தனர். தேவைக்கேற்ப யாழ் பொது மருத்துவமனையில் இரத்ததானம், அனாதைச்சிறுவர்கள், முதியோர்களுக்கான உதவிகளையும் பேணி வருகின்றனர்.

கல்விப் பணியாக மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள், போட்டிப்பரீட்சைகள், வழக்காடு மன்றங்கள், உயர் வகுப்பு மாணவர்களுக்கான பிரத்தியேக ஆங்கில வகுப்புகள், பொது அறிவுப் போட்டிகள் மூலம் தொடர்ந்து உதவி வருகின்றனர். மேலும் மாவட்ட ரீதியில் ஓவியப்போட்டியையும் வருடா வருடம் நடாத்துவதால் இணுவை மாணவர் பலர் ஓவியத் துறையில் முன்னணி வகிக்கின்றனர்.

இணுவில் மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை நூலக வளர்ச்சிக்கு (2013) உதவியுள்ளனர். மேலும் சித்திரக்கண்காட்சி, சிறுவர் காப்பக (கிளிநொச்சி) மாணவர்களுக்கான உபகரணம் வழங்கியும் உதவினர். கலைப்பணியாக முதன்முதல் ஆரம்பத்தில் இம்மன்றத்தினால் உருவாக்கப்பெற்ற ‘இருளில் ஒளி’ மற்றும் ‘புத்தி வந்தது’, ‘சித்திரலேகா’ , ‘நீதி தேவன்’ போன்ற பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இதனால் முதன்மைப் பரிசில்களும் தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும்பெற்றனர். (1973)

விளையாட்டுத் துறையில் நன்கு செயற்பட்டதால் உள்ளூர் மட்டத்தில் பிரகாசித்தனர். மற்றும் பிரதேசமட்டத்தில் எல்லே (1988) உதை பந்தாட்டம், துடுப்பாட்டத்திலும் முன்னிலை வகித்தனர். இணுவில் மத்திய கல்லூரியில் ஆரம்ப பாடசாலை விளையாட்டரங்கைப் புனரமைத்துதவினர். தொடர்ந்து விளையாட்டுக் கழகங்களிடையே சுற்றுப்போட்டிகளை நடாத்தி (தாமும் பிற கழகங்களும்) சிறப்பித்தனர். இந்த நிகழ்வுகள் யுத்தகால ஓய்வின் பின் 2012இல் மீண்டும் செயற்படுகிறது.

 

இணுவில் மத்திய கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்களையும் பரிசில்களையும் (2013) வழங்கினர். இக்கல்லூரியின் மைதானத்தில் தமது பயிற்சியை மையமாக வைத்து நடாத்தி வருவதுடன் இணுவில் அறிவாலய சமூகத்தின் நிர்வாகிகளின் பேருதவியுடன் (2013) அறிவாலயத்தில் தமக்கென ஒரு பணிமனையையும் ஆரம்பித்துள்ளனர்.

கலை ஒளி மன்றம் தமது உறுப்பினர்களான ஞானமூர்த்தி எழுதிய ‘இலகு திருமணப்பொருத்தம்’ என்னும் நூலையும் செல்வி யோகேஸ்வரி சின்னத்தம்பி எழுதிய ‘சித்திரக்கலை’ என்னும் நூலையும் கலை ஒளி மன்ற வெளியீடாக வெளியிட்டனர். 2012இல் ‘நாங்களும் எங்கள் பயணத்தின் பதிவுகளும்’ என்னும் கையேட்டினையும் வெளியிட்டனர். மேலும் தமது பணிச் சிறப்பை 1970, 1975, 1980, 1985 ஆகிய ஆண்டுகளில் சிறப்பு மலர்களையும் வெளியிட்டு நற்பெருமையடைந்தனர்.

சங்க முன்னாள் செயலரும் புலம் பெயர்ந்து பிரான்சில் வசிப்பவருமான சி.சத்தியமூர்த்தி எமது மண்ணின் பெருமையைக் குறிக்கும் ‘தெய்வீகராகம்’, ‘பரிஸ் வந்தோம்’, ‘சுனாமி’ என்னும் இறுவட்டுக்களைத் தாமே தயாரித்து மன்ற வெளியீடாக வெளியிட்டு இணுவை மண்ணுக்குப் பெருமை சேர்த்தார். இணுவை மக்களின் நன்மை கருதிப் பொதுப் பணிகளைச் சிறப்புடன் ஆற்றிவரும் கலைஒளி மன்றத்தினர் தமது இன்றைய சிறப்பினால் 2015இல் தமது ஐம்பதாம் ஆண்டு விழாவையும் நிறைவு செய்திருக்கின்றனர்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?