கல்விக்கூடங்கள்

இணுவில் மத்திய கல்லூரி

இணுவில் திருவூர் மக்கள் சைவத்தையும் தமிழையும்  கண்களென போற்றி வாழ்ந்தனர். தம் சிறார்களுக்கு சைவத் தமிழ் சிறக்க உள்ளூரில் கல்விகற்பிற்க விரும்பினர். இதன் பேறாக இணுவில் தெற்கில் சைவப்பிரகாச வித்தியாசாலையும் இணுவில் வடக்கில் உள்ள இணுவில் மருதனார்மட சூழலில் இராமநாதன் கல்லூரியும் இறையருளால் அமைந்தன.

தமது மதத்தை பரப்பும் நோக்கில் அமெரிக்க மிஷனரிமார் இணுவில் மத்தியில் ஒரு ஆரம்ப பாடசாலையை நிறுவினர். இக் கத்தோலிக்க பாடசாலையை நாடாது சைவத் தமிழையே கற்பதன் பேரில் இச் சூழலில் வாழ்ந்த மக்கள் பிற பாடசாலைகளை நாடினர். இப்பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் சைவத் தமிழ் அபிமானங் மூன்று பரோபகாரிகள் முன் வந்தனர்.

இன்று இணுவில் மத்திய கல்லூரி மேற்பிரிவு அமைவிடத்தில் பிரபல சுதேச வைத்தியரான அப்பாக்குட்டி என்பவரின் மூன்று பரப்புக் காணியில் ஏற்கனவே திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்தது. இணுவில் கிழக்கில் வாழ்ந்த சிங்கப்பூரில் அரும்பணியாற்றி வந்த சிதம்பரநாத உடையாரின் மகன் மயில்வாகனம் என்பவர் மற்றும் அன்று கல்வீட்டு பொன்னையா என்றழைக்கப்பட்ட பொதுச் சேவையாளர் பொன்னையாவும் அப்பாக்குட்டியை நாடினர்.

கிராம மக்களின் நன்மைக்காக சைவத் தமிழ்ப் பாடசாலையை நிறுவவேண்டிய தேவையை உணர்ந்த மூவரும் இறையருள் கைகூடியதால் அப்பாக்குட்டியர் உரிய காணியின் மூன்று பரப்பை அன்பளிப்பாகவும், கட்டிடம் அமைக்கும் செலவை மயில்வாகனம் வழங்கவும், கட்டிடம் மற்றும் வேலிகளை நிறுவவும் ஏனைய பணிகளை மேற்கொள்ளும் முகாமைத்துவ பணியை பொன்னையா ஏற்கவும் மூவரும் பகிர்ந்து கொண்டனர்.

இணுவை மக்களின் எதிர்காலச் சிறப்புடன் இறையருளின் சித்தப்படி மூவரின் பணி சிறக்க 1930 ஆனித் திங்கள் உத்தர நட்சத்திரத்தில் இணுவில் சைவமகாஜனா வித்தியாசாலை என்னும் பெயருடன் இணுவில் மத்தியில் உதயமானது. அன்று 26 பிள்ளைகளும் மூன்று ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். காலங்கள் செல்லச் செல்ல மாணவர்கள் பலரின் வரவால் பாடசாலை விஸ்தரிக்க ஏறக்குறைய 1940 இல் பாடசாலைக்கான புதிய கட்டிடங்கள் உதயமானது.
இப் பாடசாலையில் கற்ற அனைவரும் இன்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள் கடல் கடந்த வெளிநாடுகளில் வாழ்வாதாரம் தேடி வாழ்ந்தாலும் ஊரோடும் உறவோடும் வாழ்வோரை வாழ்வித்த அற நிலையங்களை அனுசரிக்கும் தூய பணியை ஏற்றுள்ளனர். பாடசாலைகள் யாவும் அரசுடைமையான போதும் அரசு வழங்காத பாடசாலைத் தேவைகளை எமதூர் மைந்தர்கள் தந்துதவுதலால் தன்னிறைவு காண்கிறது.

இன்றைய நகரப் பாடசாலைகளுக்கு இணையாக வகுப்பறைகள் கட்டவும் இதர வசதிகள் செய்யவும் கல்வி வசதிகளுக்கு ஏற்ப இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள், அறப்பணியாளர்கள், சிக்கன வாழ்வு வாழ்ந்து தமது தேட்டத்தில் ஒரு பகுதியை வாரி வழங்குகின்றனர். இவ் நற்பணியில் உள்ளூரினதும் புலம்பெயர்ந்தும் வாழ்பவர்களினதும் பேருதவியால் இணுவில் மத்திய கல்லூரி பல வளங்களை தனதாகியது.

கிராமப் பாடசாலைகளில் இன்றைய சூழ்நிலையில் கல்வியால், இதர நெறிகளுக்கான சாதனையால் பணியினால் பாடசாலையின் பல்வேறு வளங்களினால் நிமிர்ந்து நிற்கும் உயர்வுக்கு நாற்பது வருடகாலம் அயராது நற்பெயர் துலங்க வைத்த முதல் இரு அதிபர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. ஆரம்பம் முதல் பதினெட்டு வருடகாலம் தலைமை ஆசிரியராக இருந்த செல்லப்பாவின் பெருமுயற்சி இன்றைய நிலைக்கு அடித்தளமிட்டது.

அன்னாரின் மறைவின் பின் தலைமையாசிரியராக 1948இல் பொறுப்பேற்று 1970 வரை ஆழ்ந்த சிந்தனையுடன் தமது ஆற்றலையும் அரவணைப்பையும் பயன்படுத்தி இன்றைய நிலையை அடைய வைத்தவர் நடராசா என்னும் பேராசானாவார். இவரின் செய்நன்றியை மறவாத மாணவ சமூகம் அன்னாரின்
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர்.

1970இன் பின் இங்கு பணியாற்றிய பலரும் முன்னையவர்களின் பணிக்கு மெருகூட்டினர். 2006 இல் அதிபராக இருந்து பதவி உயர்வு பெற்றுச் சென்ற இவ்வூர் துரை எங்கரசுவைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர் அ.சதானந்தன். இவர் முத்தமிழிலும் பற்று மிகுந்தவர். ஒரு பாடசாலை எவ்வாறு முன்னேற வேண்டுமென்பதைத் திட்டமிட்டுச் செயற்படுத்தியவர்.

பாடசாலைக் கல்வி சிறக்கவும மேலதிகமாக இசை, நடனம், நாடகம் சிறக்கவும் தமது கலைஞானத்தால் பல நாடகங்களை மாணவர்களிடத்தே புகுத்தியவர். இவற்றுள் இரு நாடகங்கள் தேசிய விருதினைப் பெற்றன. மேலும் நாட்டிய நாடகங்கள், இதர கலை நிகழ்வுகள், தனிநடனம் ஆகியவற்றையும் ஊக்குவித்தவர். இதனால் பல தேசிய விருதுகளையும் நன்மதிப்பையும் எமது பாடசாலைக்குத் தேடித் தந்தார். இந்த நிகழ்வுகளுக்கான பயிற்சி, பக்க வாத்தியம் பல்வேறு செலவினங்களை வழங்கக்கூடிய இணுவில் மக்களை நாடி வெற்றி கண்டார்.

1960இல் அரசுடைமையாக்கப்பட்ட  நிலையில் காலம் கனிந்து வந்தது போல் 1992இல் வடமாநிலக் கல்விப் பணிப்பாளராக இருந்த இ.சுந்தரலிங்கம் வழங்கிய சிபார்சின் பேரில் சைவ மகாஜன வித்தியாசாலையும் அமெரிக்க மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையும் இணைக்கப்பட்டு இணுவில் மத்திய கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டதை யாவரும் அறிவர். எம் மத்தியில் பல சாதனையாளர்களை மாணவப் பருவத்திலிருந்தே தோற்றுவித்த பெருமையும் இக் கல்லூரிக்கு உண்டு.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?