சிறப்புக்கள்

இணுவையூரின் பெருமையை உலகறியச் செய்த தவில்மேதை வி.தட்சிணாமூர்த்தி!

சிவநெறி போற்றி வாழ்பவனை தமது மங்கல இசையால் இசைய வைத்து, கலை என்னும் அபூர்வ சக்தியால் வசீகரித்து, தமது மதிநுட்பசாதுரியத்தால் பார் போற்றும் தவில் இசையினால் இணுவை மண்ணுக்குப் பெருமை தேடித் தந்தவர் இணுவை மைந்தன் வி.தட்சிணாமூர்த்தியாவார். இணுவில் கிழக்கில் நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இசை வேளாளரான விஸ்வலிங்கம் என்பவர் தமது குலத்தொழிலுக்கேற்ற ஆன்மிக நெறியின் சிந்தனையுடன், அக் காலத்தில் வாழ்ந்த பெருஞ்சித்தரான பெரிய சந்நியாசியாரின் முதன்மைச் சீடராகவும் விளங்கினார்.

இவரின் மூத்த பிள்ளைகள் யாவரும் சிறந்த கலைஞர்களாக உருவாகிக் கொண்டிருந்த வேளை முதல் மனைவியின் சிவப்பேற்றினால் வருந்திய விசுவலிங்கத்தை நோக்கிய பெரியார் உன் கவலையை மற. மறுதாரம் செய்தால் பிற்காலத்தில் உனக்கொரு மகன் பிறப்பான். அவன் வரும் போது கலையுணர்வுடன் வருவான். அவனை நீ போதிய கவனத்துடன் கற்றுக்கொடுத்தால் உனது குலத்துக்கும் எமது மண்ணுக்கும் மட்டுமன்றி உலகம் போற்றும் உத்தமனாக வருவான் என்று திருவாக்குரைத்தார்.

காலங்கள் பல கடந்தன. இறையருளும், பெரியாரின் குருவருளும் அவன் முற்பிறவியில் கற்றுணர்ந்த கலையார்வமும் ஏழிசை வாழ்ந்திடும் இணுவையம்பதியில் ஏழிசை வேந்தனாக அமையும் நற்பேறு கிடைத்தது. தவில் வித்தகர் விஸ்வலிங்கம் இரத்தினம்மாள் தம்பதியினர் செய்த மாதவப் பயனாக 26.08.1933 அன்று அவதரித்த தட்சிணாமூர்த்தியின் பெருமை என்றும் எல்லோராலும் போற்றப்படுவதால் இணுவை மண் சிறப்படைந்தது. இவரது முன்னோர்கள் தமிழ்நாடு மன்னார்குடியில் திருப்பளிச்சம்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவருக்கு பெற்றோர் ஞான பண்டிதன் என்ற பெயரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தெட்சணாமூர்த்தி என அழைக்க ஆரம்பித்தனர். இப்பெயரே இவரது கலை வாழ்வில் நிலைத்தது.

சிறுவன் தட்சிணாமூர்த்தி பெற்றோரின் அரவணைப்புடன் ஏட்டுக் கல்விக்காக இணுவில் சைவமகாஜனா வித்தியாசாலையில் சேர்க்கப்பட்டான். அக்காலத்தில் இசை வேளாளர்கள் அதிகாலையிலிருந்து தமது இசைக் கருவிகளை மீட்பது வழக்கம். இதனால் மீன்குஞ்சுக்கு நீந்திக் காட்டத் தேவையில்லை என்றாற் போலத் தந்தையின் தவில் வாசிப்பில் தன்னையும் இணைத்து எவரும் போதிக்காமலே அப்பியாசஞ் செய்வது போல கைகள் ஆடி அசைவிப்பான் தட்சிணாமூர்த்தி.

அக்காலத்தில் நல்ல சுறுசுறுப்பும் கல்வியில் விவேகமும் இருந்த போதும் மூன்றாம் வகுப்புக்கு மேல் அவனால் கல்வி கற்க முடியவில்லை. விசுவலிங்கம் மகனின் ஏழாம் வயதில் ஒரு சுப முகூர்த்த வேளையில் தன் தவிலில் தீண்ட வைத்து அடி எடுத்துக் கொடுத்தார். தவிற் கலையின் ஆரம்பம் சுமுகமாக அமைந்ததால் அக மகிழ்ந்த தந்தை தமது உறவினரான தவில் வித்தகர் சின்னத்தம்பியிடம் தவில் இசை பழக இணைத்தார்.

சிறுவன் தனது ஆர்வத்தினால் ஆசானின் நெறிப்படுத்தலில் சிறப்படைந்தான். வீட்டுக்கு வந்ததும் கற்றதைத் தந்தையின் தவிலில் மீட்டுக் காண்பிப்பான். விசுவலிங்கம் பெரிய சந்நியாசியாரின் திருவாக்கை நிறைவேற்றும் ஆர்வமும், மகனின் தவிற் பயிற்சியின் சிறப்பும், மேலோங்கத் தனது மகனைச் சிறந்த ஆசானிடம் குருகுலக் கல்விக்காக அனுப்பச் சித்தங் கொண்டார். காரைநகரில் வாழ்ந்த தமது உறவினரான தவில் வித்தகரிடம் குரு குலக்கல்விக்காகச் சேர்ந்தார்.

தட்சிணாமூர்த்தி தனது திறமையால் நன்கு கற்று மேடையேறும் நிலை வந்ததும் அழைத்து வந்தார். சிறுவனின் சாதுரியமும் இசைக்கல்விச் சிறப்பும் அவனை மேலும் பயில வைத்தது. அக்காலத்தில் தமிழக மங்கல இசை மேதைகள் எம் மண்ணில் கச்சேரி வைத்த வேளைகளில், விசுவலிங்கம் தன் மகனைத் தோளில் சுமந்து கொண்டு போய் சபை நடுவே கிரகிக்க வைப்பார். அவரின் முயற்சிக் கேற்ப சிறுவனும் தான் கிரகித்ததை வீட்டில் மீட்டுக்கொடுப்பான்.

பல வகையாலும் சிறப்படைந்த தன் மகனை தமிழகத் தவில் மேதையான இராகவப்பிள்ளையிடம் குருகுலக்கல்வி மூலம் தவிலிசை பயில வைத்த விஸ்வலிங்கம், “தந்தை மகற்(கு) ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்னும் வள்ளுவர் வாசகத்தின் இலக்கணமாக அமைந்து நற் சுடரேற்றினார். தட்சிணாமூர்த்தி தான் முற்பிறவியில் கற்ற கலையூற்றுடன், இறையருளும், குருவருளும், மண் வாசனையும், கேட்டறிந்த கேள்வி ஞானமும் துணை செய்ததால் இராகவப்பிள்ளையின் போதனை மீட்டற் பயிற்சி போலவே அமைந்தது.

குரு சொல்லிக் கொடுப்பதற்கும் மேலாகவே தமது திறமையைக் காண்பித்தான். இதனை நன்குணர்ந்த இராகவப்பிள்ளை “உனக்குச் சொல்லிக் கொடுக்க இனி ஏதும் பாக்கியில்லை. ஒரு அபிப்பிராயம் காதில் விழுவதற்குள்ளாகவே உன் கைகளில் அது ஒலித்து விடுமளவுக்கு கடவுளின் வரப்பிரசாதம் பெற்றுள்ள நீ இனி ஊருக்குத் திரும்பலாம். மகோன்னதமான பெரும் புகழும் உன்னை வந்தடையும் காலம் அதிக தூரம் இல்லை என்றும் கலைஞானசுரபியாகத் திகழ்வாய்” என வாயார வாழ்த்தியனுப்பி வைத்தார்.

தாயகம் வந்த தட்சிணாமூர்த்தியின் தவில் இசையைக் கேட்டறிய எண்ணிய பல இசையாளர்கள் அவரின் பயிற்சியினை அறிய எண்ணிச் சிறுவனிடமே உரையாடினர். அப்போது அவர் கூறியதை அறிவோம். “பல பெரியார்களிடம் நான் தவிலிசை பயின்றேன் பல மேதைகள் வாசிப்பதையும் கேட்டேன். ஆனால் லய சம்பந்தமான விவகாரம் என்ற அம்சத்தில் எனது ஞானக் கண்ணைத் திறந்த மானசீகக் குருநாதர் திருமுல்லைவாயில் முத்துவீர்பிள்ளை தான்” என்று தட்சிணாமூர்த்தி தமது பிற்காலத்திலும் அடிக்கடி கூறிப் பெருமைப்பட்டுள்ளார்.

தவில் இசையில் நன்கு தேர்ச்சி பெற்ற தட்சிணாமூர்த்தி தமது பதின்மூன்றாம் வயதில் தாயகம் வந்ததும் இணுவில் திருவூரிலுள்ள தெய்வங்களை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றார். 1946இல் ஒரு சுபதினத்தில் இணுவில் கந்தசுவாமி கோயில் வெளி மண்டபத்தில் முதன் முதல் தமது பதின்மூன்றாம் வயதில் கலைச்சேவையை ஆரம்பித்தார். அன்றைய தினம் அங்கு கூடியிருந்த பல நூற்றுக்கணக்கான அன்பர்கள் கலைச்செல்வனின் சிறப்பான தவிலிசையை காதாரக் கேட்டும் நேரிற் கண்டும் வியந்தனர். அன்றே தட்சிணாமூர்த்தி தன் புகழுக்கு வித்திட்டார்.

இன்று போல் அன்று போதிய வசதியோ அரங்கேற்றச் சிறப்புகளோ, பெரியார்களின் ஆசிர்வாத உரைகளோ, அற்றதால் அவரின் ஆரம்ப நிகழ்வு (அரங்கேற்றம்) போதிய விளம்பரம் இல்லாத போதும் இயற்கையான தெய்வீகக்கலை யாவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. “முதன்முதல் தவில் வாசிக்க வெனத் தட்சிணாமூர்த்தி வருகிறார்” என அறிந்ததால் முன் கூட்டியே பல இரசிகர்கள் மண்டபத்தை நிறைத்திருந்தனர்.

தந்தை, தனயன் வாசிக்கும் தவிலைத் தூக்கிக்கொண்டு வந்து உரிய இடத்தில் வைத்தார். தந்தையைத் தொடர்ந்து வந்த தட்சிணாமூர்த்தி முருகப் பெருமானை வணங்கிவிட்டு, அங்கு குழுமியிருந்த சபையினரை வணங்கி, சபை நடுவேயிருந்து இசையர்ப்பணத்தை ஆரம்பித்தார். சபையினர் கேட்ட தவில் ஓசை இன்றுவரை அனைவரதும் செவிகளில் ஒலிக்கும் தெய்வீக சக்தி கொண்டதாகும். அவ்விடத்தில் தவிலிசையை நன்கு கேட்டனுபவித்த அயலூரைச் சேர்ந்த இசை ஞானமுள்ள ஒருவர் பிற்காலத்தில் கூறியுள்ளதையும் அறிவோம்.

“முற்காலத்திலுள்ள தவில் வாசிப்பவர்களின் தேக ஆட்ட அசைவுகள் ஏதுமின்றி, மேனியழகும், கலைஞான ஒளி வீச புன்சிரிப்புடன் சபையோரை மானசீகமாக  வணங்கித் தவிலை எடுத்து மடி மீது வைத்ததும் பிஞ்சு விரல்கள் தாண்டவமாட மணிக்கட்டின் கீழ்ப்பகுதி மட்டும் ஆடி அசையக் கச்சேரி ஆரம்பமானது. வாயிலிருந்து இசையின் பதங்கள் வெளிவருவது போல் வாய் மட்டும் அசைய அனைவரையும் வரவேற்பது போல் கரங்கள் மட்டும் சுர வேகத்தைக் காண்பித்தன. இவ்வரிய காட்சியையும் அன்றைய இசையினையும் கேட்டவர்களும் பாக்கியசாலிகளே; இச்சிறப்பு இணுவில் மண்ணுக்கே சொந்தமானது” எனக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து சிறுவன் தட்சிணாமூர்த்தியின் பெரும் புகழ் திக்கெட்டும் பரவியது. தட்சிணாமூர்த்தியும் தம் பெற்றோரின் அரவணைப்பையும், அவர்களின் தியாகத்தையும் உணர்ந்து தமது சேவையாற் புகழையும் யாவரும் வியந்து சான்றோனெனக் கூறும் செய்தியையும் தந்து பெற்றோரை ஆனந்தக் கண்ணீர் சொரிய வைத்தார். விசுவலிங்கமும் தமக்குப் பெரிய சந்நியாசியார் முன் கூறிய திருவாக்கையும் எண்ணி இறையருளைப் பிரார்த்தித்தார்.

இச்சிறப்பான காலத்தில் விசுவலிங்கம் மறுமையெய்தினார். தட்சிணாமூர்த்தி கலைச் சேவையின் உதவி நாடி அளவெட்டியில் வாழ்ந்த மூத்த சகோதரி இராஜேஸ்வரி கணேசுவிடஞ் சென்றடைந்தார். இணுவில் திருவூரில் ஆலயங்களும் இசை வேளார்களும் அமைந்தது போல் அளவெட்டியூரிலும் மிகுந்திருந்தனர். அளவெட்டியூர் கலைஞர்களின் பெருமதிப்பிற்குரிய தகுதி தட்சிணாமூர்த்தியிடமும் இருந்ததால் இவரின் கலைச் சேவையும் பிரபலமடைந்தது. அளவெட்டியில் வசித்து கலைச்சேவையாற்றிய வேளை அளவெட்டியில் தவில் கலைஞர் செல்லத்துரையின் மகளான மனோன்மணியுடன் இல்லறத்தில் இணைந்தார்.

இவரின் கலைச்சிறப்பால் இல்லறமுஞ் சிறப்படைந்தது. இல்லறச் சிறப்பால் கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானசங்கர் என ஐந்து புத்திரச் செல்வங்களையும் பெற்றார். ஒரு சமயம் தட்சிணாமூர்த்தியின் கச்சேரி இணுவில் கந்தசுவாமி கோயிலில் ஏற்பாடாகியிருந்தது. இதே விழாவில் தமிழகத் தவில் மேதை நீடா மங்கலம் சண்முகவடிவேலும் பங்கு பற்றவும் ஏற்பாடு செய்தனர். இருவரும் இணைந்து தவில் வாசிக்கும் திறமையை அறிந்த நீடாமங்கலம் சண்முகவடிவேல் “சபாஷ்” என்று உற்சாகப்படுத்தினார்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றாற் போல இளங் கலைஞான மேதை தட்சிணாமூர்த்தியின் திறமையைத் தமிழகத்திலும் காண்பிக்க முயன்றார். எமது கலைஞரை அழைத்துச் சென்று இசை விழாக்கள், திருவிழாக்கள், திருமண வரவேற்பு விழாக்கள் போன்ற சிறந்த விழாக்களில் தன்னுடன் இணைத்து வாசிக்கச் செய்து அறிமுகம் செய்து வைத்தார். தட்சிணாமூர்த்தியின் புகழ் தமிழகமெங்கும் பரவியதால் பெரும் வரவேற்புகளும் பட்டங்களும் நற் பெயரும் கிடைத்தன.

தமிழக இசை விழாவில் தட்சிணாமூர்த்தியின் வாசிப்பைக் கேட்ட மேலைத்தேயத்தவரொருவர் தமது ஆங்கில விமர்சனத்தில் “இதுவரை காலமும் தவில் வாத்தியம் என்பது செவிப்பறையைச் சிதைக்கும் ஒரு வாத்தியம் என்றே என் அனுபவம் சொல்லி வந்தது. ஆனால் இந்த இசை விழாவில் தட்சிணாமூர்த்தியின் தவில் என்ற வாத்தியத்தில் அதி வன்மையான ஒலியை மட்டுமன்றி, அதி மென்மையான ஒலியையும் எழுப்ப முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். தட்சிணாமூர்த்தியின் வாத்தியத்தை ரசிக்க நிச்சயம் தேவர்களும் இந்த விழாவுக்கு வந்திருப்பார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தெட்சணாமூர்த்தி தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார். கிருட்டின கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி அய்யர், இவரை உலகின் ‘எட்டாவது அதிசயம்’ என்று சொன்னார். ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தெட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவர் தனிச் சிறப்பு.

தட்சிணாமூர்த்தி இலங்கை மற்றும் தமிழகத்தின் பிரபல மூத்த தவில் நாதசுரக் கலைஞர்களுடன் இணைந்து சிறப்பித்தார். அக்கலைஞர்கள் தட்சிணாமூர்த்தியின் திறமையை நன்குணர்ந்து பெருமதிப்பளித்தனர். தட்சிணாமூர்த்திக்குப் பல பட்டங்கள் வழங்கியும் சென்னையில் “தங்கக் கோபுரம்” விருது வழங்கியும் கௌரவித்தனர். 12.12.1968 இல் கரூரில் நடந்த திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளை நினைவு விழாவில் விழாச்சபையினர் தங்கக் கேடயம் வழங்கிப் பெருமைப் படுத்தினர்.

இவ்வாறு எண்ணற்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற யாழ் மைந்தன் 1959 தமிழக தமிழிசைச் சங்கத்தில் வாசித்துப் புகழ் பெற்றதைக் கௌரவிக்கும் முகமாக இவர் தாயகம் வரும்போது பலாலி விமான நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.  இவரது அலங்கார ஊர்வலப் பவனி யாழ். வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம் வந்தடைந்ததும் வித்தியாலய வளாகம் விழாக்கோலம் பூண்டது. யாழ்ப்பாணமே வியக்கும் பிரமாண்டமான சனசமுத்திரத்தில் வித்தியாலய அதிபரான கல்விமான் ச.அம்பிகைபாகனின் தலைமையில் அரியதோர் விழா நடந்தது.

அந்த விழாவில் இவருக்கு “லய ஞான குபேர பூபதி” என்னும் பட்டம் வழங்கிப் பல விருதுகளும் வழங்கினர். (லயத்தில் ஞானம், அந்த ஞானத்தின் செல்வனாக விளங்கும் குபேரன். தேவலோகத்தில் செல்வங்களுக்கு அதிபதி குபேரன். பூலோகத்தில் லய ஞானத்துக்குக் குபேரன் – அதிபதி தட்சிணாமூர்த்தி) இந்த உயர்ச்சியை அடைவதற்கு அவரது இளமைப் பருவத்தில் அவர் பெற்ற ஊட்டம் அடிகோலியது. சுருங்கக் கூறின் தட்சிணாமூர்த்தி ஏழையாகப் பிறந்தாலும் இறையருளால் குருவருளால் அவர் முற்பிறவியில் தேடிய தேட்டத்தினால் பெற்றோர் இவரை முன்னிலைப்படுத்த வேண்டுமென்ற சீரிய நோக்கினால் இயற்கையாகவே அமைந்த நற்பண்பு, நல்லொழுக்கம், கல்வி – கலைகளில் ஆர்வம், சுறுசுறுப்பு, கீழ்ப் படிவு, மாதா பிதா, குரு, தெய்வ பக்தி கலைச் செருக்கு அற்ற குண இயல்பு யாவும் இவரை மேலோங்க வைத்தன.

ஏழையாகப் பிறந்தபோதும் தமது சீரிய பண்பினால் குபேர பூபதி என்றழைக்கப்படும் பெருமை எவருக்கும் கிடையாது. உண்மையில் தவில் இசையில் குபேர பூபதியானார். இவர் மறைந்த போதும் தன் எச்சமாக ஒரு புதல்வனான உதயசங்கரை தன் இசைப் பணிக்கு நிறுத்தி உள்ளார். தட்சிணாமூர்த்தியின் புகழ் எவராலும் அளவிட முடியாத சிறப்புடையதென அவருடன் இணைந்து வாசித்த மங்கல வாத்திய (நாதசுர) கலைஞர் காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை கூறியதையும் அறிவோம்.

தட்சிணாமூர்த்தி அமரத்துவம் அடைந்த பின் ஒரு சமயம் எமது யாழ் தெல்லிப்பழை சிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் தமிழகத்திற்கு விசேட மகா நாடொன்றிற்குப் பங்குபற்றச் சென்றார். அம்மையாரைக் கண்டதும் கலைஞர் அருணாசலத்துக்கு யாழ்ப்பாணம் என்னும் நினைவு வந்தது. அம்மையார் விழா முடிவில் தனித்து ஓய்வெடுத்த போது அருணாசலம், அம்மையார் முன் சென்று ஆனந்தக் கண்ணீர் சொரிய அவரை வணங்கி “அம்மாவும் யாழ்ப்பாணம் தானே; உங்கள் யாழ் மகன் தட்சிணாமூர்த்தியின் கலைச் சிறப்புக்கு அவனுக்கு யாழ்ப்பாணத்தையே பரிசாகக் கொடுத்தாலும் போதாது. அவனுக்கு முழு உலகமுமே ஈடாகாது” என மகிழ்ந் துரைத்தார்.

இச் செய்தியை எமது தங்கச்செல்வி அம்மையார் தமது பிரசங்கங்களில் தெரிவித்துள்ளார். இணுவில் மண்ணிற் பிறந்து கலை பயின்று (அளவெட்டியைப் புகுந்தவிடமாகக் கொண்டாலும்) பார் போற்றும் உயர்நிலையை அடைந்து புகழுடம்புடன் எம் மண்ணிற் துலங்கும் லய -ஞான – குபேர – பூபதி விஸ்வலிங்கம் தட்சிணாமூர்த்தியால் சீர் இணுவைத் திருவூர் புகழ் பெற்றமை இவ்வூரின் தெய்வங்களினதும் அறப்பணிக்கும் நற்சான்றாகும். வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டார். 1970 களில் இலங்கை வந்து 13 மே 1978 இல் காலமானார்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?