ஊர்ப் புதினங்கள்

இணுவிலில் தைப்பூசம்! உலகப்பெருமஞ்சத்தில் ஆறுமுகனார் வளம் தர வீதி வலம்!

உலகத்திலேயே மிகப் பெருமஞ்சம் இங்கு தான் உண்டு. இந்த மஞ்சத்தில் சண்முகனார் வளம் தர வலம் வரும் காட்சி காண பல ஞானக் கண்கள் வேண்டும்.

தைப்பூசம் விழாவானது பழங்காலந்தொட்டே தமிழரின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

பிற்கால சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. அன்றைய இன்றைய தமிழரின் பண்பாட்டில் இது முக்கிய நாளாகும். தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தைப்பூசம் என்பது தமிழர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம் தை மாதம் ஆகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும் இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. கேரளாவில் பூசம் என்று சொல்ல மாட்டார்கள் தைப்பூஜம் என்பார்கள் . உத்தராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுது தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரியனும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

இணுவிலில் பெரிய சன்னாசியார் அமைத்த மஞ்சம் பவனி வருவதும் இந்நாளில் தான். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும். மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

*மயில் காவடி – மயிலிறகை வைத்து செய்வது
*சந்தன காவடி – உடம்பு முழுவதும் சந்தனம் பூசி வருதல்
*சர்ப காவடி – நல்ல பாம்பை இறைவனுக்கு அர்பணிப்பது
*சேவற் காவடி – சேவலை இறைவனுக்கு அர்பணிப்பது
*அன்னக் காவடி – இறைவனுக்கு சோறு படைத்தல்
*வேல் காவடி – இறைவனுக்கு வேல் கொடுத்தல்
*பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
*வாள் காவடி – இறைவனுக்கு வாள் பரிசளித்தல்
*விளக்கு காவடி – விளக்கு ஏந்தி வருதல்
போன்றவையும் பலர் தைப்பூச நேர்த்தியாக செய்வார்கள்

தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாணத்து இணுவில் மக்கள் புதிர் எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.

 

ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர். இணுவில் ஒரு விவசாய பூமி. பாடுபட்டு தோட்டத்தில் மாடாய் உழைத்த பண்பாடு இருந்தது. இன்று பல வீடுகளில் சோம்பலைக் காணக் கூடியதாக இருக்கிறது .வெளி நாடுகளில் பலர் வாழ்வதால் அந்தக் காசு பலரை சொகுசாக வாழப் பழக்கியிருக்கிறது. தொட்ட நிலங்களை எல்லாம் தோட்டமாக்கி அதை புனிதப் படுத்தியவர்கள் அன்றைய கிராம மக்கள் .

அன்று அவர்கள் வாழ்ந்த அந்தக் கிராமிய மணம் கமழும் வாழ்க்கையை என்னால் காண முடியவில்லை. வெறுமையை கண்டேன். நான் அன்று அந்த ஊரில் வாழ்ந்த காலங்களில் அம்மா என்று பசு அழைக்கும். கோழி கூவும் , நாய்கள் வாலையாட்டின. இப்பொழுதெல்லாம் இயந்திர மயமாக ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். வெளிநாடுகளில் தான் நாம் ஓடுகிறோம். அது உழைப்பதற்கு நாம் கட்டாயமாக ஓடித்தான் ஆக வேண்டும். ஆனால் ஊரில் எல்லோரும் தேவையில்லாத busy யாக இருப்பதாகவே எனக்குப்பட்டது. ஏதோ ஓடுகிறார்கள் அந்த ஓட்டம் எதுக்கு என்று புரியாமல் நான் எனக்குள் தடுமாறியிருக்கிறேன். இப்படியான ஓட்டங்களுக்கு மத்தியிலும் இறை வழிபாடு நடக்கிறது.

தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. தை மாதம் 22ம் தேதி பிப்ரவரி 05 ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09:16 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22 ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. அதனால் பிப்ரவரி 5 ஆம் தேதிதான் நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் இருக்கிறது என்பதால் அன்று தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவது சிறப்பு.

நாள் முழுவதும் பூச நட்சத்திரம் இருப்பதால் காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருந்து முருகனை தரிசித்து, வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருகனை வழிபடும் சமயத்தில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நல்லது. முடிந்தால் காலை மாலை என இருவேளையும் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது மேலும் சிறப்பை சேர்க்கும்.

பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று ஆச்சாரியார்கள் கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. குழந்தைகளுக்கு காது குத்துதல், மொட்டை அடித்தல், எழுத தொடங்குதல் போன்றவற்றை செய்வது நல்லது.

தைப்பூச நாளில் தான் பூமியில் நீர் தோன்றி, அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. தைப்பூச நாளில் தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் தெய்தார். பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கி, கையில் வேல் தாங்கி முருகன் நின்ற தினம் இன்று தான். அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர், ஆனந்த தாண்டவம் ஆடி பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம் தான்.

முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி எடுப்பதுண்டு. அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான். “மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்” என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பார்கள்.

எனவே மக்களே கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப் பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. ‘காவடியாட்டம்’ என்பது ‘காவடி’ ‘ஆட்டம்’ என்னும் இருசொற்களின் சேர்க்கையால் உருவானது. ‘காவடி’ என்னும் சொல் ‘காவுதடி’ என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது.

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடியாம்
சர்க்கரைக் காவடி சந்தனக் காவடி சேவல் காவடியாம்
சர்ப்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றிகாவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா… !!!
அதோ வாராண்டி பழனி ஆறுமுகம் தாண்டி – அவன்
போனா போராண்டி முருகன் தானா வாராண்டி

எனவே பக்தர்களே தைப்பூச விரத மிருந்து நல்ல பலனைப் பெறுவீர்களாக

மாணிக்கவாசகர் வைத்திலிங்கம்

0Shares

எம்மைத் தொடரவும்

யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?